இதுவரை ஆட்சி செய்த அரசாங்கங்கள் ஊழல் மோசடி லஞ்சம் வீண்விரயம் திருட்டு கொள்ளைகளில் கொடிகட்டிப் பறந்திருந்தன – சிறிநேசன் MP
இதுவரை 75 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் ஊழல், மோசடி, லஞ்சம், வீண்விரயம், திருட்டு, கொள்ளை, என பலவித்த்தில் கொடிகட்டி பறந்திருந்தார்கள். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும், குருமண்வெளியில் அமைந்துள்ள அச்சங்கத்தின் மண்டபத்தில் வியாழக்கிழமை (26.12.2024) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
அண்மையில் தற்போதைய அரசாங்கம் சில கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. உண்மையில் ஏழை எளியவர்களுக்காக, அல்லது வருமானம் குறைந்த மக்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தில் இருந்த நிதி வழங்கப்பட வேண்டும். ஆனால் சுகாதார அமைச்சராக இருந்தவர்கள், அரசியலில் பிரமுகர்களாக இருந்தவர்கள், பிரதானிகளாக இருந்தவர்கள், செல்வந்தர்களாக இருந்தவர்கள், தமது சிகிச்சைகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றிருக்கின்றார்கள். இந்த ஊழல் மோசடி என்பனதான் நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றன. இவை பெரும் சான்றாக அமைந்துள்ளன.
இந்த ஊழல் மோசடிகள் என்பதை ஒரே தடவையாக ஒழிப்பது என்பதும் முடிவுறுத்துவது என்பதும் கடினமான காரியம். அந்த காரியத்தை தர்க்க ரீதியாக செய்வதென்பது தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் விரும்பி கொண்டிருக்கின்றார்கள். அது நடைபெற்றால் இந்த நாட்டில் நடைபெறுகின்ற கொள்ளைகள் திருட்டுக்கள், வீண் விரயங்கள், ஊழல் மோசடிகளை, முடிவுக்கு கொண்டு வந்து ஏழை மக்களுக்கு சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் மானியங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
அதிகமாக பார்த்தால் நாட்டில், ஏற்றுமதிகளும், இறக்குமதிகளும், இடம்பெறுகின்றன. அதனால் அரசியல்வாதிகளுக்கு பெரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பொருட்களுடன் இறக்குமதி செய்கின்ற போது கமிஷன் வைத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. வீதிகளை அபிவிருத்தி செய்கின்றபோது முன்னர் 10 வீத கமிஷனாக வழங்கப்பட்ட தொகை தற்போது 15 வீதமாக வழங்கப்படுவதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. ஆகவே அபிவிருத்தி என்கின்ற பரிமாணங்களுக்குள் மிக மோசமாக சுருட்டல்கள், கொள்ளைகள், திருட்டுக்கள், கமிஷன்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடந்த காலத்தில் நமது பகுதியில் இரண்டு
ராஜாங்க அமைச்சர்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் ராஜாங்க அமைச்சர்களான பின்னர் அபிவிருத்திகள்
ஆங்காங்கே நடைபெற்றன. ஆனால் அந்த அபிவிருத்திகள் மூலமாக வீதிகள் திருத்தி அமைக்கப்பட்டதோ
தெரியவில்லை, ஆனால் அவர்கள் மில்லியனர்கள் அல்ல பில்லியனர்களாக மாறி இருக்கின்றார்கள்.
பில்லியன் என்பது 100 கோடி ரூபாக்கள் இது சாதாரண விடயம் அல்ல. சாமானியமானவர்களாக இருந்தவர்கள்,
விலாசம் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது கொடி கட்டி பறக்கின்ற கோடீஸ்வரர்களாக மாறியிருக்கின்றார்கள்.
ஆகவே இவ்வாறான மோசடிகளை செய்தவர்கள் எவ்வளவு கொள்ளை அடித்திருக்கின்றார்கள் என்ற விடயங்களை
இந்த அரசாங்கம் அக்கு வேறு ஆணிவேராக ஆராய்ந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணம் அல்லது தனிப்பட்ட
முறையில் சுருட்டப்பட்ட பணம், சொத்துக்கள், போன்றவற்றை கையகப்படுத்துமகா இருந்தால்
இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட வீதம் தட்டுப்பாடுகள் வங்குரேத்துகள் இல்லாமல் இருக்கும்
அதனை செய்தால் நாங்களும் வரவேற்போம்.
கோட்பாட்டு ரீதியில் கருத்துக்களை கூறிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை செயற்பாட்டு ரீதியில் செயல்படுகின்ற போதுதான் வெற்றி பெறமுடியும்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள் கோட்பாட்டு ரீதியான தத்துவங்கள் என்பது நாட்டை திருத்துவதற்கு வழிவகுக்காது. அந்த வகையில் செயற்பாட்டு ரீதியாக இந்த தேசிய மக்கள் சக்தி செயற்பட வேண்டும். அருமையாக அற்புதமாக செயற்படக்கூடிய இவ்வாறான கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகளை ஏறெடுத்து பார்க்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு உதவி செய்ய வேண்டும், என்பதுதான் எமது விருப்பமாகும் என அவர் இதன்போ தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment