ஓமானில் ஒருவருடமாக எதுவித தொடர்புகளுமின்றிருக்கும் எமது அக்காவை மீட்டுத்தாருங்கள் - தாய் சகாதரிகள், பிள்ளைகளும் உருக்கமான வேண்டுகோள்.
2022.10.20 அன்று பணி பெண்ணாக வெளிநாடு சென்ற மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடமாக எமது குடும்பத்திரரோடு எதுவித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை விரைவில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுகின்றனர்.
இவ்விடையம் தொடர்பில் உரிய பெண்ணின் குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை (19.12.2024) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். இதன்போது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்…. குடும்பத்தின் கஷ்ட நிலைமையினை கருத்தில் கொண்டு பணிப்பெண்ணாக ஒமான் நாட்டிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முகவர் ஒருவர் மூலம் சென்றதாகவும் அங்கு சென்று இரண்டு மாதங்கள் வேலை எதுவும் இல்லாது இருந்ததாகவும் பின்னர் பணிப்பெண்ணாக ஒரு வீட்டில் நியமிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓமான் சென்ற எமது அக்காவான யசோமலர் அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு எம்முடன் கதைப்பார். பின்னர் அந்த தொலைபேசி தொடர்பாடல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இடம்பெற்றது. முதல் தடவையாக ஒருஇலெட்சம் ரூபாவும், இரண்டாவது தடவையாக 70000 ரூபாவும், இறுதியாக மூன்றாவது தடவையாக 2023.12.21 அன்று 75000 ரூபா பணமும்தான் எமக்கு அவர் இங்கு அனுப்பியுள்ளார்.
எமது அக்காவின் தொலைபேசியினை அவர் பணிபுரியும் வீட்டார் அபகரித்து வைத்திருந்துள்ளனர். அவர்கள் 5 நாட்களுக்கு ஒரு முறை மாத்திரம் எம்முடன்; கதைப்பதற்கு வழங்கினார்கள்.
இறுதியாக எமது அக்கா கடந்த 2023.12.25 அன்றுதான் தொலைபேசியில் கதைத்தார். தற்போது ஒருவருடமாக எம்முடன் எதுவித தொடர்பும் இல்லமேலேயே உள்ளார். எமது அக்காவிற்கு என்ன நடந்தது என்று தெரியாமலும் தொடர்பு கொள்வதற்கான வழிகளும் இல்லாமல் நாம் அவதியுறுகின்றோம்.
வெளிநாடு சென்ற எமது அக்காவிற்கு கணவர், மற்றும் 15 வயதில் ஒரு பெண்பிள்ளையும், 11 வயது மற்றும் 4 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளும் உள்ளார்கள். தற்போது அந்த குழந்தைகள் அவர்களது தாயுடன் கதைப்பதற்கு ஆசையாய் உள்ளார்கள். அந்த பிள்ளைகள் மூவரும் எம்முடன்தான் உள்ளார்கள்.
வெளிநாடு சென்ற குறித்த பெண்ணை நாட்டிற்கு மீள கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தும் எமது நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்காமை எமக்கு மிகுந்த கவலையாக உள்ளது.
எமது அக்காவை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவரிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோதும் இவ்விடையம் தொடர்பாக எதுவும் தெரியாது எனவும் சற்று வேலையாக இருக்கின்றோம் இப்பொழுது கதைக்க முடியாது எனவும் அலட்சியமாக பேசிவருகின்றனர்.
பிரதேச செயலகத்தின் அனுமதியுடனோ, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மூலமாகவோ எமது அக்காவை அவர்கள் ஓமான் நாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டுதான் எமது அக்காவை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளார்கள். எமது அக்காவை மீட்டெடுப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கும், பிரதேச செயலகத்திற்கும் சென்று நாம் விசாரித்த போதுதான் அக்கா உரிய முறையில் வெளிநாடு செல்லவில்லை என எமக்கும் தெரியவந்தது. அக்காவின் கடவுச்சீட்டின் இலக்கத்தை வழங்கினால் மாத்திரமே தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அக்கவின் கணவர் வேலைக்கு செல்லாது வீட்டிலே இருந்தார், இதனால் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி உணவு போன்ற விடயங்களில் சிரமத்தை எதிர்நோக்கியதன் விளைவாகவே எமது அக்கா வெளிநாடு சென்றார்.
எனவே எமது அக்காவை எமது வீட்டுடிற்கு
அழைத்து தருமாறும், நாமும் அக்காவின் கணவர் பிள்ளைகளும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை முன்வைக்கின்றோம். என முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஓமான்
சென்றுள்ள இராசலிங்கம் யசோமலரின் சகோதரிகளான புஸ்பவதி, ரதிமலர் மற்றும் யசோமலரின் தயார்
54 வயதுடைய சந்திராதேவி யசோமலரின் 15, 11 மற்றும் 4 வயதுகளை உடைய பிள்ளைகளும், உருக்கமான
வேண்டுகோளை விடுப்பதாகத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment