26 Nov 2024

புரையோடி போயிருக்கின்ற இனபிரச்சனை அதற்கான தீர்வு தொடர்பிலும் ஜனாதிபதி சிம்மாசன உரையில் பேசவில்லை – பா.உ சிறிநேசன்.

SHARE

புரையோடி போயிருக்கின்ற இனபிரச்சனை அதற்கான தீர்வு தொடர்பிலும் ஜனாதிபதி சிம்மாசன உரையில் பேசவில்லைபா. சிறிநேசன்.

புரையோடி போயிருக்கின்ற இனபிரச்சனை விடயமாகவும், அதற்கான அதற்கான தீர்வு என்ன அதனை எவ்வாறு கையாள்வது, அதனை எவ்வாறு தீர்ப்பது, என்பது தொடர்பில் ஜனாபதி அவரது சிம்மாசன உரையில் சுட்டிக்காட்டியிருக்கவில்லை. 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடியில் திங்கட்கிழமை(25.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது அதன்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தனது சிம்மாசன பிரசங்க உரையை நிகழ்த்தி இருந்தார். அந்த உரையின்போது முற்போக்கான கருத்துக்கள் கூறப்பட்டதை மறுக்க முடியாது. இனவாதம் இருக்காது, மதவாதம் இருக்காது, அடிப்படை வாதம் எதுவும் இருக்காது, என்ற கருத்தை கூறியது மாத்திரமன்றி அடுத்ததாக சட்ட புரட்சியை பலப்படுத்த வேண்டும் அதன் மூலமாக ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார். 

குற்றச்செயல்கள் நடைபெறுகின்றபோது நடைபெற்றபோது, அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதும் சட்டவாட்சி மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும், என்ற கருத்தினையும் அவர் தெளிவாக கூறியிருந்தார். இந்த கருத்துக்களை பொதுவாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். வரவேற்கின்றோம் இருந்த போதிலும் அங்கு காணப்பட்ட குறைபாட்டை குறிப்பிட்டாக வேண்டும். 

புரையோடி போயிருக்கின்ற இனபிரச்சனை விடயமாகவும், அதற்கான அதற்கான தீர்வு என்ன அதனை எவ்வாறு கையாள்வது, அதனை எவ்வாறு தீர்ப்பது, என்பது தொடர்பில் ஜனாபதி அந்த இடத்தில் சுட்டிக்காட்டி இருக்க வில்லை ஏனெனில் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தேசிய இனப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக தந்தை செல்வநாயகம் அவர்கள் 30 ஆண்டுகள் அறவழிப் போராட்டத்தை நடத்தி இருக்கின்றார். அதனை அடுத்து போராளிகள் ஏறத்தாள 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி இருக்கின்றார்கள். யுத்தம் மௌனவிக்கப்பட்டதும் பின்னர் 2009க்கு பிற்பட்ட காலத்தில் இராஜதந்திர வழியில் அதனை தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தைகள் பல நடத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இருந்தும் இனப்தேசிய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள தலைவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

குறிப்பாக சொல்லப் போனால் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன கட்சி, போன்ற கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றன. இருந்த போதிலும் அண்மையில் ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி கட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகின்றோம். என சொல்கின்றார்கள் (சிஸ்டம் சேஞ்ச்) என்கின்ற விடயத்தை சொல்லுகின்றார்கள். ஆகவே தேசிய இன பிரச்சினை என்பது நீண்ட காலமாக பேசப்பட்டு வருகின்ற பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறை பற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை. இது தமிழர்களை பொறுத்தவரையிலும், தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையிலும் தமிழ் தேசிய கட்சிகளைப் பொறுத்தவரையிலும், ஒரு ஏமாற்றத்தை தருகின்ற விடயமாக அமைந்திருக்கின்றது. எனவே மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் வடகிழக்கிலே உண்மையான அமைதியை ஒற்றுமையை ஒட்டுமொத்தமாக இலங்கையில் ஒற்றுமையான தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் இந்த தேசிய இன பிரச்சனை நியாயமான வழியில் தீர்க்கப்பட வேண்டும். வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கு சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி கிடைக்க வேண்டும். சமஸ்ட்டி முறையிலான தீர்வு கிடைக்க வேண்டும். என்பதுதான் தமிழ் மக்களின் நீண்ட காலமான ஆதங்கமாக இருக்கின்றது. அதுபற்றி கூறாமல் அவரது உரை ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. 

குறிப்பாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை பற்றி, தமிழ் மக்கள் கூறிக் கொண்டிருக்கின்ற நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். அதாவது அவர்களுக்குரிய நீதி பரிகாரம் கிடைக்க வேண்டும். இந்த விடயம் பற்றியும் அங்கு ஜனாதிபதியின் உரையின் போது பேசப்படவில்லை. இறுதி யுத்தத்தின் போது ஒரு இலெட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக எமது முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் ஒரு சாட்சியம் அளித்து இருக்கின்றார். விடயம் தொடர்பில் ஒரு விசாரணை போன்ற விடயத்தை குறிப்பிடாமல் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. 

குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நாடாக இருந்தால் நிச்சயமாக பழைய காலம் போன்றுதான் பழைய கட்சிகள் போன்றுதான், இருந்து வரும் ஆகவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கோருகின்ற விடயத்தில் படு மோசமான மனித உரிமையோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த மோசமான மனித உரிமை மீறல்களுக்கு, இந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்ன தீர்வை தரப் போகின்றது என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அது பற்றி ஜனாதிபதியின் உரையில் பேசப்படவில்லை. 

தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விடயம் தொடர்பிலும் அங்கு கூறப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதுவும் பேசப்படவில்லை. இதனோடு மாத்திரம் இன்றி மத விவகாரம் இனவாதம் இருக்காது மதவாதம் இருக்காது, அடிப்படை வாதம் இருக்காது, என சொல்கின்றார்கள். இந்த பல்லின மக்கள் கொண்ட இந்த தேசத்திலே நிச்சயமாக மத விவகாரங்களை கையாள்வதற்கான பொதுவான மத விவகார அமைச்சு இருக்கின்றது. இதனை பௌத்த சாசன அமைச்சு என்கின்ற வட்டத்துக்குள் கொண்டு செல்கின்ற போது உண்மையில் மத அடிப்படை வாதத்தை கலைந்து விட கழைந்து விடலாமா அல்லது பௌத்த மேலாதிக்கத்தை கழைந்து விடலாமா என்கின்ற கேள்வி எங்களிடம் இருக்கின்றது. 

எனவே ஜனாதிபதி அவர்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்ற விடயம் ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் தேசிய இன பிரச்சனைக்கு உரிய தீர்வு என்பது மிக முக்கியமான ஒரு தலைப்பாக காணப்படுகின்றது. காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நியாயமான ஒரு தீர்வு அல்லது நியாயமான நீதி பரிகாரம் இல்லை, என்பது அந்த மக்கள் மிகவும் ஆதங்கமாக இருக்கின்றார்கள். எனவே இந்த விடயம் பற்றியும் நிட்சயமாக கூறியே ஆகவேண்டும். இதைவிட அரசியல் கைதிகளின் விடுதலை முக்கியமான விடயமாகும். தேசிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில் அவர்களும் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் புரட்சி மூலமாக அவர் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சமத்துவமான ஒரு சோசலிச அரசை அமைக்க வேண்டும், என்ற அடிப்படையில் அவர்கள் புறப்பட்டவர்கள். எனவே வடக்கு கிழக்கிலும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காக விடுதலைக்காக ஆயுதம் போராடிய போராளிகள் விடயத்தில் அவர்களுக்கு ஒத்து உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே அந்த விடயத்திலும் அரசியல் கைகள் விடுதலை அவர்களுடைய எண்ணம் அந்த சிந்தனை அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய ஆரோக்கியமான சிந்தனை இந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இருக்கும் என நான் நம்புகின்றேன். 

அவர்களுடைய எளிமையான போக்குகள் ஆடம்பரமற்ற ஆட்சி முறை, ஆடம்பரமற்ற நிகழ்வுகள், என்பன மக்களுக்கு கவர்ந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய தீர்வு என்கின்ற விடயம் மிகவும் முக்கியமானதாக கருதப்பட வேண்டும். அந்த தீர்வு என்பது ஒற்றை ஆட்சி முறைகள் அற்ப சொற்பமான அதிகாரங்களை கொடுத்து அவற்றை அவ்வாறே கட்டுப்படுத்தி விடுவதாக அமையக்கூடாது. 

தமது ஆட்சியில் சமத்துவமான உரிமைகளை கொடுத்து ஒற்றை ஆட்சியின் கீழ்  தமிழர்களே ஆட்சி செய்யலாம் அதுதான் தீர்வாக இருக்கலாம் என அவர்கள் நினைக்கலாம். ஆனால் அரசியல் யாப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு நியாயமாக நியாயமாக வரையறுக்கப்படாது விட்டால் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது இனவாத சக்திகள் தென்னிலங்கையில் காணப்படுகின்ற அடிப்படை வாதிகள் ஆட்சியை கைப்பற்றுகின்ற போது மீண்டும் தமிழர்களை பாதிக்கக்கூடிய விதத்தில் அவர்களுடைய ஆட்சி முறைகளைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. எனவேதான் நாங்கள் சொல்லுகின்ற முக்கியமான விடயம் இந்த நாட்டின் பல்லின சமூகம் பல் மதங்களைக் கொண்ட பண்பாடுகளை உடைய மக்கள் நிம்மதியாக நிலையாக அமைதியாக வாழ்வதாக இருந்தால் தேசிய இனப் பிரச்சனைக்குரிய தீர்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அது ஏமாற்று வித்தையாக இருக்ககூடாது அது நிலைத்து நிற்கக்கூடிய தமிழ் மக்கள் ஏற்க ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக அமைந்தால் புலம்பெயர்ந்த சக்திகள், புத்திஜீவிகள், புலம்பெயர்ந்த பொருளியல் வல்லுநர்கள், அல்லது தொழிலதிபர்கள், மூலமாக வடக்கு கிழக்கு மாத்திரம் அல்லாமல் இலங்கையையே அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. எனவே உள்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற எமது பொருளாதார வல்லவர்களை அல்லது புலமையாளர்களை இலங்கைக்குக் கொண்டு வந்து நாட்டை விரைவாக அபிவிருத்து செய்வதற்கு தேசிய இனப் பிரச்சனைக்குரிய தீர்வு என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 

அதனை இந்த அரசாங்கம் இந்த ஆட்சிக் காலத்துக்குள் செய்வதன் மூலமாக அவர்கள் மீதான தமிழர்களின் மீது நம்பிக்கையை வலுப்படுத்த முடியும். அவ்வாறு செய்கின்ற போது எமது கட்சியும்கூட இந்த முற்போக்கான தன்மையுடைய இனப் பிரச்சினைக்குரிய தீர்வு தருகின்ற இந்த அரசாங்கத்தோடு கூட்டாக இணைந்து பயணிப்பதற்குகூட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்துகின்றோம், முற்போக்கு சக்திகளென தங்களை அடையாளப்படுத்துகின்ற தேசிய மக்கள் சக்தி இந்த விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். புதிய பாதை அமைக்க வேண்டும், புரட்சிகரமான மாற்றங்களை அமைக்க வேண்டும், தமிழர்களின் நம்பிக்கையை பெற வேண்டும், இந்த அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை கொள்வதாக இருந்தால் தேசிய இன பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். மற்றும் சாதாரண பிரச்சனைகளாக இருக்கின்ற மையிலத்தமடு மாதவனை பிரச்சினை, கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை, அத்துமீறி குடியேற்றிய கெவிளியாமடு, போன்ற பிரச்சனைகள், எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அல்லது முடிவுக்கு கொண்டுவர வேண்டும். என்பதை நான் வலியுறுத்தி கூறுகின்றேன். 

கடந்த பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் பின்னர் எமது கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற நூலக கட்டடத்திலேயே ஒன்று கூடி இனப்பிரச்சசினை தொடர்பான தீர்வு தொடர்பில் மிக விரைவாக ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என்கின்ற முடிவினை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது எடுத்துரைக்கப்பட்டது. அதற்கான எமது கோரிக்கையினை எழுத்துருவில் வடித்து அந்த விடயத்தை ஜனாதிபதியிடம் கொண்டு சென்று பேச வேண்டும். அந்த பேச்சு மிக விரைவாக நடக்க வேண்டும். என்கின்ற விடயம் அங்கு கூறப்பட்டன. அது மாத்திரம் இன்றி அந்த பாராளுமன்ற குழுவை வழி நடத்தக்கூடிய பதவிகளுக்கு உரியவர்களும் அந்த இடத்தில் தெரிவு செய்யப்பட்டதோடு, மட்டுமல்லாமல் நாங்கள் அடுத்த கட்டமாக இந்திய தூதரகத்திற்கும் சென்றிருந்தோம். அதன்போதும் அந்த தூதுவர் சந்தோஷ்ஜா அவர்களையும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்திருந்தோம். அதன்போதும்; தேசிய இன பிரச்சனை சம்பந்தமான விடயத்தில் தீர்வு என்பது மிக முக்கியமானது அதற்கான அழுத்தங்களை இந்தியாவும் நிரூபிக்க வேண்டும் என்ற கருத்தினை நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். 

வடக்கு கிழக்கு பொறுத்தவரையில் நாங்கள் மூன்றாவது அரசியல் சக்தியாக தமிழரசு கட்சி பாராளுமன்றத்தில் காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி, ஐகிய மக்கள் சக்தி, அடுத்ததாக பலமான சக்தியாக எங்களுடைய கட்சியை காணப்படுகின்ற காரணத்தால் இந்த கட்சி ஏனைய தமிழ் தேசியத்தின் பாதையில் பயணிக்கின்றவர்களையும் ஒன்றிணைத்து இந்த விடயத்தில் செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கின்றது. முதற்கட்டமாக தமிழரசுக் கட்சி அந்த விடயத்தை ஜனாதிபதியுடன் பேசும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ் தேசியப் பரப்பில் தமிழ்த் தேசிய கொள்கை உடன் செயல்படுகின்றவர்கள் கூட்டாக செயல்பட வேண்டும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். அதனை மக்கள் வலியுறுத்தியும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இருந்தும்கூட இந்த தேர்தலின் போது பல்வேறு குழுக்களாக கட்சிகளாக குழுக்களாக பிரிந்து போட்டியிட்டு இருந்தார்கள் அந்த வேளையில்கூட தமிழ் மக்கள் ஒரு ஆணையினை தந்திருக்கின்றார்கள். அதாவது தமிழரசு கட்சிக்கு அதிகஅளவு ஆசனங்களை கொடுத்து தமிழரசு கட்சி ஒரு தலைமையான கட்சி தாய் கட்சி என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள் வடக்கில் தேர்தலின் போது சில சறுக்கல்கள் காணப்பட்டாலும் அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் மக்களுக்கு தெரியும். கடந்த பொது தேர்தலில்  வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட முரண்பாடுகள் அல்லது முரண்பாடு இல்லாத தன்மையினால் சில முக்கியமான பிரமுகர்கள் கட்சியில் இருந்து வெளியேறி மூன்று பிரிவுகளாக போட்டியிட்டு இருந்தார்கள். இவ்வாறு போட்டியிட்டதன் காரணமாக வாக்குகள் சிதறடிக்க கூடிய நிலைமை காணப்பட்டது. ஆகவே ஒற்றுமையாக இணைந்து போட்டியிட்டு இருந்தால் வடபுலத்திலும் மேலும் ஐந்து ஆசனங்களை கைப்பற்ற கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். இதற்கு என்ன காரணம் என்பதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அந்த காரணத்தை அறிந்து மீண்டும் வட புலகத்தில் எமது தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த இடத்தில் தவறு நடந்ததோ யார் அந்த தவறுகளை விட்டார்களோ அதனை சீர் செய்து கொண்டு மீண்டும் பலமான சக்தியாக செல்ல வேண்டும். 

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் குறிப்பிட்ட விடயமும் அதுவாகத்தான் இருக்கின்றன. தேர்தலின் பின்னர் அவர்கள் ஒரு படிப்பினையை கண்டிருக்கின்றார்கள் கற்றலின் அடிப்படையில் ஐக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே எமது கட்சி இது பற்றி சாதகமான முறையில் பரிசீலிக்கும் பரீசீலிக்க வேண்டும் என்பதை தெரிவிக்கின்றேன். 

கடந்த ஆட்சிக் காலத்தில் மாவீரர் தினம், அன்னை பூபதியின் நினைவு தினம், தியாக திலீபனின் நினைவு தினம், போன்ற பல்வேறு நினைவு தினங்களை அனுஷ்டிக்கின்ற போது பல குறுக்கீடுகள் நெருக்கடிகள் தடைகள் சவால்கள் காணப்பட்டன. ஆனாலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் குறுக்குடுகள் நெருக்கடிகள் என்பன இருக்காது என்ற நம்பிக்கை இருக்கின்றது. அதாவது மாவீரர் தின அனுட்டானங்கள், யுத்தத்தில் தமது உயிர்களை ஈகைசெய்த  மாவீரர்களின் நினைவேந்தல்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளன. இப்போது கார்த்திகை மாதம் என்கின்ற உடன் அந்த சிந்தனை தமிழ் மக்களில் மனங்களில் ஒரு உறுதியான பற்றி கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுகிறது. 

எனவே அந்த வகையில் வடக்கு கிழக்கில் இந்த மாவீரர் தினம் என்கின்ற விடயத்தில் அனுட்டானம் செய்கின்ற அல்லது அதனை நினைவில் ஏந்தி கொள்கின்ற அந்த பாரம்பரியம் அல்லது தொடர்ச்சி என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எத்தனை தடைகள் எத்தனை சவால்கள் வந்தாலும், அதனை தமிழ் மக்கள் மறக்க போவதில்லை. அதனை மனங்களில் ஏந்தி கொண்டு அதனுடைய தங்களுடைய இடங்களை அஞ்சலியை செலுத்துகின்ற நிகழ்வுகள் நடைபெறும். அதற்கான கெடுபிடிகள் இந்த ஆட்சியில் இருக்காது, இருக்கக்கூடாது, என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனவே அந்த நினைவேந்தர்கள் செய்கின்றபோது சில வேளைகளில் யாரும் அதனை குழப்பதற்காகவும், அதை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்காகவும், சிலர் வேண்டுமென்றே சிலர் அதனைக் குழப்புவதற்காககூட செயற்படலாம்.  

எனவே தமிழ் மக்களைப் பொருத்தவரையில் சுயகட்டுப்பாடுடன், சுய மரியாதையுடன், மானசிகமான முறையில் மனதில் ஏந்தி மறைந்த எமது மறவர்களின் அந்த சிந்தனையை மேற்கொள்ள வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன. அவற்றில் நிறைவேந்தர்களை செய்வதற்கு இந்த அரசாங்கம் எந்த ஒரு கெடுபிடிகளையும் கையாளாது கையாளக்கூடாது என எதிர்பார்க்கின்றோம். அரசாங்மும் போராட்டத்தின் போது உயிர் நீத்த தங்களது வீரர்களை அவர்கள் வருடம் தோறும் நினைவு கூறுகின்றார்கள். அவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். அவர்களும் போராளிகளாக இருந்தவர்கள். தமிழ் போராளிகளும் அந்த பாதையில் சென்றவர்கள். என்ற அடிப்படையில் அந்த நினைவேந்தலை செய்கின்றபோது தமிழ் நெஞ்சங்கள், தமிழ் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன், அதனை ஒரு மானசீகமாக மனதில் இருந்து நடத்த வேண்டும். 

எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற நிகழ்வில் வடக்கு கிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் அந்த நினைவேந்தர்கள் நடைபெறும். அதில் தமிழ் மக்கள் உங்களுடைய மானசீகமான அஞ்சலியை நீங்கள் உளமார்ந்த ரீதியில் வழங்க வேண்டும். அரசாங்கமோ அரசாங்கத்தின் படைகளோ பொலிசாரோ குறுக்கீடுகளை செய்யக்கூடாது எனையும் குறிப்பிட விரும்புகின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: