19 Oct 2024

அரசியலுரிமை நிறைவேற்றத்திற்கான ஆக்ரோசத்தினை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவார்கள் - மு.பா.உ.கருணாகரம்.

SHARE

அரசியலுரிமை நிறைவேற்றத்திற்கான ஆக்ரோசத்தினை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவார்கள் - மு.பா.உ.கருணாகரம்.

உரிமைகளை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு இனம் என்றவகையில், இம்முறை நடைபெறவுள்ள தேர்தலிலும் தங்களுடைய அரசியலுரிமை நிறைவேற்றத்திற்கான ஆக்ரோசத்தினை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்பது திண்ணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின களுவன்கேணி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(18.10.2024(மாலை) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் மு.பா. உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழர்களாகிய நாம் மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவே தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். ஒரு இனமாக நம்முடைய உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்குப் போராடுவதற்கு எமக்கு அத்தனை உரிமைகளும் இருக்கின்றன. நம்முடைய போராட்டத்தினை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. 

ஜே.வி.பி. யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலானது ஒரு முக்கியத்துவம் மிக்கதொரு தேர்தலாகும். நாட்டில் மாற்றம் ஒன்று தேவை என்ற கோசத்தின் அடிப்படையிலேயே இந்தத் தேர்தலுக்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த மாற்றம் அமையவுள்ள பாராளுமன்றத்தினாலேயே நிர்ணயிக்கப்படும். 

அதே நேரத்தில் தமிழர்களின் உரிமைகளை கேள்விக்கும் வகையில் செயற்படுவதற்கும், அதிகாரத்துவத்துக்கும், அடக்குமுறைகளுக்கும் மக்களது உரிமைகளை அடகு வைப்பதற்கு எந்தத் தமிழ்க் கட்சிக்கும் அதிகாரமில்லை என்பதனையும் மறுத்தலாகாது. சில தவறானவர்களின் வீண் விவாதங்களுக்கும், வீணடிப்புகளுக்கும் துணைபோவது தமிழர்களின் சுயநிர்ணய அரசியலுரிமைக்கு பங்கம் விளைவிப்பதாகவே அமையும். அந்தவகையில் இப்போது தொடர்ந்து கொண்டிருக்கும் சங்குச் சின்னம் தொடர்பிலான பிரச்சினைகளை விட்டொழிப்பதே நல்லதாக இருக்கும் என்பது என்னுடைய தீர்க்கமான கருத்து. 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் காணப்படும் மேலாதிக்கப் போக்கும் மேட்டுக்குடி நடவடிக்கைகளும் தொடர்வதானது தமிழ் மக்களின் தார்மீக உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியலை வீணடிப்பதாக அமைந்திருக்கிறது. இது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குமே தவிர வேறொன்றுமில்லை.

வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமானதும், அதிலிருந்து ஒவ்வொரு கட்சிகளாக பிரிந்து சென்றமையும் எல்லோருக்கும் தெரிந்ததே. முதல் தேர்தலுடன்  உதய சூரியன் இல்லையென்றானதற்கு ஒப்பானதே தமிழரசுக்கட்சி வீட்டுச்சின்னத்தை எடுத்துச் சென்றமையாகும். 

சின்னம் இல்லையென்றானதன் பின்னர் வேறு ஒரு சின்னத்துக்குள் செல்வதில் எந்தப்பிழையும் இல்லை. அந்தவகையில் தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்  சங்குச் சின்னம் தமிழர்களின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சங்கு இப்போது தமிழர்களின் தேர்தல் சின்னமே. 

தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் ஜனநாயக, அகிம்சைவாதப் போராட்டங்களுக்குப் பின்னர் உருவான சூழலால் ஏற்பட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தோற்றம் வெறுமனே உருவானதல்ல. அத்துடன் பல்வேறு நெருக்கடிகளும், வேண்டாத விடயங்களும் நடந்து முடிந்து விட்டிருந்தன. அதன் பின்னர் பல கட்சிகள், பல சின்னங்கள் தமிழர்களுடைய போராட்டத்தில் வந்து போயிருக்கின்றன. இந்தநிலையில் ஒரு ஒற்றுமைக்காகவும் ஒருமித்த குரலுக்காகவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

தமிழர்களுடைய அரசியலுரிமையும் போராட்டத்தின் தீர்வும் வெற்றியுமே முக்கியமாகதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நவம்பர் 14இல் நடைபெறும் தேர்தலில்  தமிழர் அரசியலில் அதிகாரத்துவம், மேட்டுக்குடித்துவம், அடக்குமுறை ஆதிக்கம் போன்றவற்றுக்குத் தீர்வினையே மக்கள் வெளிப்படுத்துவார்கள்.   

உரிமைகளைப் பெறுவதற்காக ஏழு தசாப்தங்களுக்கு மேலாக சாத்வீக, அகிம்சை, ஆயுத ரீதியாக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு இனம், அந்தப் போராட்டத்திற்கான நியாயமான தீர்வு கிடைக்காத நிலையில் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலிலும் தங்களுடைய அரசியலுரிமை நிறைவேற்றத்திற்கான ஆக்ரோசத்தினை வெளிப்படுத்துவார்கள் என்பது திண்ணம். 

இம்றை சங்குச்சின்னத்தில் களமிறங்கியிருக்கின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது ஒருமித்த பலத்துடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான அழுத்தங்களை நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் கொடுக்கும். அதேநேரத்தில் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாகவும் போராடும். அதற்கான முழுமையான மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. என அவர் இதன்போது தெரிவித்தர்.








 

SHARE

Author: verified_user

0 Comments: