20 Oct 2024

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன்-கருணா அம்மான்.

SHARE

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன்-கருணா அம்மான். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன் தலைவரிடம் விடயத்தை எடுத்துக்கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன் மட்டக்களப்பில் இருந்து உருவாகிய கரு தான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

என மட்டக்களப்பு மாவட்டத்தல் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். அவரது தேர்தல் அலுவலகம் ஒன்று சனிக்கிழமை(19.10.2024) மாலை மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் திறந்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில். 

கடந்த காலங்களிலே நான் ஒருபோதும் தேசிய கட்சிகளிலும், தேர்தல்களில் களமிறங்கவில்லை. அம்பாறை மாவட்டத்திலும் நான் தனி தமிழ் கட்சியிலே தான் தேர்தலில் களம்இறங்கி இருந்தேன். இம்முறையும் நான் மட்டக்களப்பில் தேசிய ஜனநாயக முன்னணி எனும் தமிழ் கட்சியிலேதான் போட்டியிடுகிறேன். தேசிய கட்சியில் நாங்கள் தேர்தலில் களம்இறங்கினால் நிச்சயமாக அதில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவார்கள். எம்முடைய வாக்குகள் அவர்களைத்தான் வெற்றிபெற வைக்கும் அதனால்தான் நாங்கள் தேசியக் கட்சிகளில் தேர்தலில் களமிறங்கவில்லை. அதனால்தான் இம்முறையும் நாங்கள் எட்டு தமிழ் வேட்பாளர்களோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கி இருக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக்கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து உருவாகிய கரு தான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதனை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார். அக்காலத்தில் யுத்தம் நடைபெற்றபோது எமது மக்களின் இழப்புக்கள் யுத்த அழிவுகள் உலக அரங்குக்கு தெரிய வர வேண்டும் அது பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும். தமிழர்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன் சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது. அவர் மரணித்ததன் பின்னர் அவர்கள் சிதறுண்டு போய்விட்டார்கள். காலப்போக்கில் அவர்கள் பணத்திற்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போய் உள்ளார்கள். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறாகும்.

வட கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக வேண்டி நான் இந்த தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அதனை ஏற்படுத்துவதற்கு என்னால் முடியும். அதற்காகவேதான் நான் வந்திருக்கின்றேன். இதனை விட்டுக்கொடுக்க முடியாது பணத்திற்கும் இலஞ்சத்திற்கும் இடம்பெற்ற கூடாது. இரண்டு தடவைகள் நான் பாராளுமன்றத்தில் அங்கம் வைத்துள்ளேன்.

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வரப் போகின்றார் என்ற போது அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மாத்திரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் எண்ணில் சுமத்த முடியாது. ஒரு மதுபான கடைகுரிய அனுமதிப்பத்திரம் என்னிடம் இல்லை. மணல் ஏற்றுவதற்கு உரிய அனுமதிப்பத்திரமில்லை. நான் இருந்தபடியே தான் இப்போதும் இருக்கிறேன். களவு செய்தவர்கள் அனைவரும் பயத்திலே திரிகின்றார்கள, பழைய அமைச்சர்கள் கொழும்பிலே ஒழித்து விட்டார்கள் நானும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்குத்தான் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டிருந்தேன். ஊழலை நிறுத்த வேண்டும், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும், என்பதற்காகவேதான் நான் அவ்வாறு கூறியிருந்தேன். ஏனெனில் ஜனாதிபதியாக சிங்கள நபர் ஒருவர்தான் இந்த நாட்டிலே வரமுடியும் தமிழர் ஒருவரோ இஸ்லாமியர் ஒருவரோ வரமுடியாது.

ஆனால் பொதுத்தேர் என்பது வேறாகும் இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதிலே ஜேவிபி எனும் கட்சிக்குப் பின்னால் யாரும் போகக்கூடாது. அவர்கள் இனத் துவேஷம் பிடித்த ஓர் கட்சியாகும் தமிழர்களுக்கு முதலாவது துரோகம் செய்த கட்சி ஜேவிபி ஆகும். நீதிமன்றம் சென்று வடகிழக்கை சட்டரீதியாக அவர்கள் பிரித்தார்கள் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, மஹிந்த ராஜபக்சவோ, ரணில் விக்கிரமசிங்கவோ பிரிக்கவில்லை. பிரித்தவர்கள் ஜேவியினர் இதனை நாம் மறந்துவிட முடியாது. சிலர் திசைகாட்டி திசைகாட்டி என  வருவார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே திசைகாட்டி சின்னத்திலேயே மூன்று தீவிரமான முஸ்லிம்களும், ஒரு சிங்களவரும், ஏனையவர்கள் மலையகத்தைச்  சேர்ந்தவர்களையும் மட்டக்களப்பிலே களமிறங்கியுள்ளார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால் சங்கு ஒரு பக்கம் மற்றவர்கள் ஒரு பக்கம் உள்ளார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அல்லது ஒரு முடிவு எடுத்தார்கள் நானும் அதோடு சத்தமிடாமல் இருந்தேன். அவர் ஜனாதிபதியாக வரமுடியாவிட்டாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்காக அவர்கள் வந்தார்கள். ஆனால் சுமந்திரனும், சாணக்கியனும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஓடி விட்டார்கள். ரணிலிடம் 60 கோடியை சாணக்கியன் வாங்கிவிட்டு சஜித் பிரேமதாசாவுக்;கு வேலை செய்துள்ளார். 

சாணக்கியதும் சுமந்திரனும் எப்போது கட்சிக்குள் வந்தார்களோ அப்போது அந்த கட்சி அழிந்து போய்விட்டது. இதில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் தேசியம் தேசியம் என கதைத்து  உசுப்பேத்துகின்றார்கள். இம்முறை தேசியம் கதைப்பதற்கு  வந்தால்  கணக்கறிக்கையை மக்கள் கேட்க வேண்டும். கொள்ளையடித்த பணத்துக்கு கணக்கை தெரிவித்து விட்டு தேசியத்தைக் கதையுங்கள் என மக்கள் கூற வேண்டும். இதனை நான் கூறவில்லை ஜனா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூறுகின்றார் 60 கோடியை  சாணக்கியன் பெற்றதாக, சாணக்கியன் கூறுகின்றார் ஜனாவை பார்த்து நீ அதிக அளவு சொத்துக்கள் குவித்து வைத்திருக்கிறாய் அந்த சொத்து எங்கிருந்து வந்தது உமக்கு என கேட்கின்றார். இன்னும் ஒருவருக்கு 588 கோடி ரூபாய்க்கு உரிய விசாரணை வரஇருக்கிறது சிங்கப்பூரிலிருந்து அனைத்து இடங்களிலும் வீடு வாங்கி உள்ளார் அதனை மக்கள் பத்திரிகைகளில் பார்த்திருப்பார்கள். இவ்வாறு கொள்ளை அடித்திருந்தால் எவ்வாறு மக்களுக்கு அவர்கள் சேவை செய்வது இந்த நிலையில் மக்கள் நன்றாக முடிவெடுக்க வேண்டும். 

எனது கண்ணுக்கு முன்னரே பல போராளிகள் மடிந்தார்கள் அதனை நான் மறக்கவில்லை. பல போராளிகள் அங்கவீனமாக இருக்கின்றார்கள். அதை நீ நான் மறக்கவில்லை. பல தாய்மார்களின் கண்ணீர் தற்போதும் வடிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.  இதற்கு எல்லாம் நாம் ஓர் முடிவு கட்ட வேண்டும் இதற்காக வேண்டி அனைத்து போராளிகளும் அணிதிருளுங்கள். ஒருவொருவரும், மாற்று திசைகளுக்கு செல்ல வேண்டாம். எனக்கு தான் போராளிகளின் அருமை தெரியும் யாருக்கும் அது பற்றி கதைப்பதற்கு உரிமை இல்லை. மாவீரர் நாள் அனுஷ்டிப்பது என்றால் அதனை நாங்கள் தான் அனுஷ்டிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஒளிந்து இருந்துவிட்டு வந்தவர்களுக்கு எந்த உணர்வில்லை. இனிமேல் அதற்கு அனுமதிக்க முடியாது. எனவே தமிழர்களின் இருப்பை காப்பாற்றுவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வளர்த்துவிட வேண்டும். படித்தவர்கள் எதனையும் சாதிப்பதில்லை. இலங்கையிலே முதலாவது படிப்பு படித்தவர் தான் மதுபான கடை நடத்துகின்றார். நான் மதுபான கடைகளுக்குரிய அனுமதிப்பத்திரம் பெறுவது என்றால் நூற்றுக்கு மேற்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்றிருக்கலாம். அதெல்லாம் வேண்டாத விடயம். 

தமிழரசு கட்சியில் வைத்தியர் உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள் அவர்களுக்கு இருக்கின்ற சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர்கள் போட்டியிடவில்லை. அவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையை பற்றி தெரியாது. நான் 22 வருடங்கள் போராடி இருக்கிறேன். எனது சொந்த அண்ணனைகூட நான் இழந்திருக்கின்றேன். அனைவருக்கும் இழப்புக்கள் உள்ளன தேசியப் பட்டியலில்தான் நான் இரண்டு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். அதனூடாக அதிகளவு வேலைகளை மக்கள் மத்தியில் நான் செய்திருக்கின்றேன். இந்த முறை பாராளுமன்றத்திற்கு மக்களின் ஆணை உடன் தான் செல்ல வேண்டும். அவ்வாறெனில்தான் எதையும் வாதிட்டு பெற்றுக் கொள்ளலாம். நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று எதிர எதிரே உள்ள உறுப்பினர்களை குற்றம் சுமத்துகின்றதுதான் அவர்களுடைய வேலை மாறாக இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு இடையே யாரையும் குற்றம் சுமத்தி பாராளுமன்றத்தில் பேசவில்லை. 

கடந்த முறை அம்பாறையிலே போட்டியிட்டு 35000 வாக்குகளை அந்த மக்கள் எனக்கு அளித்திருந்தார்கள். மக்களுக்காக நாங்கள் உயிரையும் தருவதற்கு காத்திருக்கின்றோம். அது எனக்கு பெரிய பிரச்சனைகள் இல்.  கூட்டமைப்புக்கும் சங்கு குழுவுக்கும் மக்கள் முடிவு கட்ட வேண்டும். லஞ்ச ஊழலை நிறுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் தல 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றாராம், இன்னும் ஒரு வேட்பாளர் மதுபானம் வழங்கியதாக பொலிசாரால் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். களவு செய்த காசுகளை அவர்கள் அள்ளி வழங்குகிறார்கள். தேசப்பற்றுடன் சேவை செய்யக்கூடிய தலைவர்களை நாங்கள் வளர்த்து விட வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.











 

SHARE

Author: verified_user

0 Comments: