7 Oct 2024

அரசியலில் பயணித்தவர்கள் யார் ஊழல் செய்திருக்கின்றார்கள் யார் என்பதை மக்கள் மிகவும் துல்லியமாக அறிந்திருக்கின்றார்கள்.

SHARE

அரசியலில் பயணித்தவர்கள் யார் ஊழல் செய்திருக்கின்றார்கள் யார் தவறு செய்திருக்கின்றார்கள் யார் மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள் என்பதை மக்கள் மிகவும் துல்லியமாக அறிந்திருக்கின்றார்கள்.

கடந்த கால அரசியல் பாதையிலும் அரசியல் வரலாற்றிலும் பலவிதமான அரசியல்வாதிகள் எங்களுடைய மாவட்டத்திலே பலவிதமான கோணங்களிலே கடந்து வந்திருக்கிறார்கள் பலர் சேவைகளை செய்கின்றோம் என கூறிக்கொண்டு அபிவிருத்தி நாயகர்களாகவோ, தேசியம் சார்ந்தவர்களாகவோ, கொள்கைகளை பரப்புரை செய்கின்றவர்களாகவோ, தாங்கள் இப்படித்தான் என்பதை வெளிவேடமாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவித்தல் வந்தவுடன் அரசியல்வாதிகள் யார் யார் எவ்வாறான முகங்களோடு இருந்தார்கள் என்பதை மக்களுக்கு தெட்டத் தெளிவான வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்ற விடயமாக மாறி இருக்கின்றது. 

என மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள வடகிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கு.வி.லவக்குமார் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை(06.10.2024) களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

கடந்த காலங்களில் அரசியலில் பயணித்தவர்கள் யார் எங்கு ஊழல் செய்திருக்கின்றார்கள் எங்கு தவறு செய்திருக்கின்றார்கள் யார் மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள் என்பதை மக்கள் மிகவும் துல்லியமாக எல்லோரையும் மக்கள் அறிந்திருக்கின்றார்கள்.

பாரம்பரியமாக இருக்கின்ற கட்சி அவர்களுக்குரிய வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்குகூட முடியாமல் இருக்கின்றது. அவர்களுக்குள்ளே இருக்கின்ற கொள்கைகளிலும் பதவிகளிலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இவ்வாறானவர்கள் தேசியம் சார்ந்து மக்களுக்கான சேவை செய்ய முடியாத அளவிற்கு முடங்கி போயிருக்கின்றார்கள். ஏதோ ஒரு சக்தி அவர்களை வழிநடத்துகின்றது. ஏதோ ஒரு சக்தி  தமிழ் தேசியத்தின்பால் நடக்கின்ற மக்களை உடைப்பதற்காக செயற்படுகின்றது. தமிழ் தேசிய தலைவரால் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட கட்சிகளும் தற்போது கொள்கை ரீதியாக உடைந்திருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு அவலநிலை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே உருவாகி இருக்கின்றது. 

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வலம் வந்தவர்கள் இன்று அவர்களது கட்சிகளிலேயே வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கிராமங்களிலேயே சென்று வேட்பாளர்களை தேடி அலைக்கின்றார்கள் மக்கள் அவர்களுடன் போய் இணைவதற்கு அச்சப்படுகின்றார்கள் ஏனெனில் கடந்த காலங்களிலே அவர்கள் செய்த காரியங்கள் அவர்களின் கடந்த கால பயணங்கள் தொடர்பில் மக்கள் அச்சமடைகிறார்கள். 

நாங்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்து மக்களோடு மக்களாக கடமை செய்து வருகின்றோம், மக்கள் சேவை செய்து வருகின்றோம், நாங்கள் மக்களில் ஒருவராக இருந்து இன்று வரை மக்களோடு பயணித்து வருகின்றோம், எங்களுடைய சேவைகளிலே எந்த ஒரு அரசியலும் இதுவரையிலும் கலக்கவில்லை. சில அரசியல் கட்சிகள் எங்களை அரசியலில் வந்து கரம் கோர்க்க முற்பட்டது நாங்கள் அதனை விரும்பவில்லை. 

ஆனால் இந்த காலங்களிலே காலத்தின் கட்டாய தேவையை அறிந்து மக்களுடைய இருப்புகளை காப்பாற்றுவதற்கு கல்வி நிலையைக் காப்பாற்றுவதற்காக நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சை குழுவாக வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். 

அபிவிருத்தி நாயகர்களாக வலம் வந்தவர்கள் அபிவிருத்தி என்ற பெயரிலே அனேக கட்டடங்கள் கட்டி முடிக்கப்படாத நிலுவைகளாக காணப்படுகின்றன. அபிவிருத்தி பற்றி யாராவது பேசினால் அது பொய்யான பேச்சாகத்தான் அமையும் இன்று மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டி இருக்கின்றது. 

மக்கள் சிறை இருந்தவர்களுக்கு மீட்புக்காக வாக்குகளை அளித்துள்ளார்கள். அரசியலிலே உரிமைக்காக பாடுபட்டவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். இவ்வாறு வாக்களித்தவர்களுக்கு வெற்றி பெற்றவர்கள் சேவை செய்யவில்லை. தங்களுக்காகவே தான் அவர்கள் சேவை செய்திருக்கின்றார்கள். நாங்கள் இன்று மக்கள் மத்தியில் வாக்கு கேட்பதற்கு முன்னரே பல சேவைகளை செய்து விட்டு தான் வந்திருக்கின்றோம். நாம் பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றோம் உரிமை சார்ந்த விடயங்களிலே குரல் கொடுத்திருக்கின்றோம். மக்களுக்காக சிறைச்சாலை சென்று வந்திருக்கின்றோம். கைது செய்யப்பட்டுள்ளோம். இவைகள் அனைத்தையும் நாங்கள் கடந்து வந்திருக்கின்றோம். ஏனெனில் எங்களுடைய தமிழ் தேசிய நிலப்பரப்பிலே இருக்கின்ற ஒவ்வொரு  மக்களுடைய உரிமைக்காக நாங்கள் செயற்படுகின்றோம். 

வாகரைப் பகுதியிலே அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களையும், மேச்சல்தரை மற்றும் விவசாய நிலங்களையும் அழித்து இறால்  பண்ணை அமைப்பதற்காக அபிவிருத்தி நாயகர்களாக திரிந்தவர்கள் தங்களுடைய அதிகாரங்களை எந்த அளவிற்கு பிரயோகிக்க முடியுமோ அந்த அளவிற்கு அதிகார பலத்தை காண்பித்தார்கள். அப்போது எங்களுடைய கரத்திலே எந்த அதிகாரம் இருக்கவில்லை அரசியல் நீரோட்டத்திலே நாங்கள் இருக்கவில்லை அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புகளும் எங்களுக்கு இருக்கவில்லை மக்களோடு மக்களாக நின்று அதனை தடுப்பதற்காக நாங்கள் போராடினோம்.

எனவே மக்கள் எங்களோடு இருந்ததனால் ஒவ்வொரு விடயங்களையும் நாங்கள் தடுக்கக் கூடியதாக இருந்தது. வலதுகரை திட்டம் என்பதை வைத்துக்கொண்டு 30,000 ஏக்கர் நிலப்பரப்பை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கொண்டு வருகின்ற போது அதனை எதிர்த்து எந்த அரசியல் பலமும் இல்லாமல் அந்தத் திட்டத்திற்கு எதிராக நாங்கள் போராடினோம். 

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள்  மேலும் தெளிவடைய வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் ஏமாற்றுபவர்கள் பலர் வருவார்கள் அபிவிருத்தி ஆசைகளையும் இச் சந்தர்ப்பத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் இதுவாகும். 

மட்டக்களப்பு கொக்குவிலில் 1990.09.09.அன்று இடம்பெற்ற படுகொலையை இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழ் ஒட்டு குழுக்களும், இணைந்து இப்ப படுகொலையை செய்ததாக சொல்லப்படுகின்றது. அந்த ஒட்டுக் குழுக்கள் யார் என்பதை இரா.துரைரத்தினம் அவர்கள் எழுதிய புத்தகத்திலேயே எழுதியுள்ளார். இவ்வாறானவர்கள் தமிழ் உணர்வோடு இருக்கின்றோம் என கூறிக்கொண்டு கூட்டமைப்புக்களை அமைத்துக் கொண்டு மக்களிடம் வாக்கை சேகரிக்க வருகின்றார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகளையும் உறவினர்களையும் வெட்டி கொன்றிருந்தால் நீங்கள் இவ்வாறானவர்களுக்கு வாக்களிப்பீர்களா இவ்வாறானவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். 

இது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான காலமாகும். நமது மாவட்ட மக்களையும் சிறு பிள்ளைகளையும் கொன்று குவித்தவர்கள் நமது வீடுகளுக்கு வர இருக்கின்றார்கள். மக்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறானவர்களை நாம் ஆதரிப்பதா என்பதை சிந்திக்க வேண்டும் நாம் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் எமது தலைவிதியை நிர்ணயிக்கின்ற வாக்காக இருக்க வேண்டும். எனவே எங்களுக்கு நாங்களே கொள்ளி வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய காலம் இதுவாகும். 

எனது வடகிழக்கை பிடித்து துண்டாடிய ஜேவிபினரை நாம் எதிர்க்க வேண்டிய காலம் இதுவாகும். வடகிழக்கிலே இருக்கின்ற தமிழர்கள் ஒற்றுமையாக  இருந்தால் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்து விடுவார் என்ற பயத்திலே தான் எமது வடகிழக்கு சூறையாடப்பட்டது. துண்டாடப்பட்டது. நீதிமன்றத்தின் ஊடாக துண்டாடப்பட்டிருக்கின்றது. இன்று அவர்கள் ஒருமான சிரிப்புடன் வந்து கொண்டிருக்கின்றார்கள் இது நாங்கள் சிந்திக்கின்ற காலமாகும். 

வர இருக்கின்ற தேர்தல் எமக்கு ஒரு சிலரால் மறைமுகமான சவாலாக அமைவார்கள் ஆனால் மக்களோடு மக்களாக நாம் இருக்கின்ற காரணத்தினால் மக்கள் எங்களோடு இருக்கிற காரணத்தினால் அனைத்தையும் முறியடித்து நாம் வெற்றி பெறுவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: