22 Oct 2024

கணக்கறிக்கை தேர்தல் ஆணையகத்திடம் ஒப்படைத்துவிட்டேன் - ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியநேத்திரன்.

SHARE

கணக்கறிக்கை தேர்தல் ஆணையகத்திடம் ஒப்படைத்துவிட்டேன் - ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியநேத்திரன்.

கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14ஆம் தேதி கையளிக்கப்பட்டுள்ளது. என்ற செய்தியை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம் யாரும் எதுவித சந்தேகத்தையும் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை(20.10.2024) இரவு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில். 

கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சுயேட்சை வேட்பாளராக சங்கு சின்னத்தில் நான் போட்டியிட்டு ஏறக்குறைய 2 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தேன். அதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி ஒரு வேட்பாளர் செலவு செய்கின்ற செலவு அறிக்கைகளை குறிப்பிட்ட நேரத்தில் அறிக்கை செய்யப்பட வேண்டும். என இருந்தது அதன் அடிப்படையிலேயே கடந்த 13 ஆம் திகதிக்கிடையில் அந்த அறிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது. மூன்று பேர் அந்த செலவழிக்கையை வழங்கப்படவில்லை எனவும், அதில் எனது பெயரும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

உண்மை என்னவெனில் எனது கணக்கறிக்கை சரியான முறையில் தயாரிக்கப்பட்டு நான் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சைக்கு குழுவில் போட்டியிடுவதற்கான முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரின் மூலம் எனது கையொப்பத்துடன் குறிப்பிட்ட செலவறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கடந்த 14 ஆம் திகதி நேரடியாகவே கையளித்திருந்தார். கடந்த 13 ஆம் திகதி என்பது விடுமுறை திகமாகையால் எனது செலவறிக்கையை இமெயில் மூலமாகவும் பெக்ஸ் மூலமாகவும் அனுப்பியிருந்தோம். 

ஆனால் தற்போது பல ஊடகங்களில் சமூக வலைத்தலங்களிலும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நான் அந்த கணக்கறிக்கையை அனுப்பவில்லை என்ற செய்தியை தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளுக்கு நான் முற்றாக மறுப்பைத் தெரிவிக்கின்றேன். 

உண்மையிலேயே அந்த கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14ஆம் தேதி கையளிக்கப்பட்டுள்ளது. என்ற செய்தியை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம் யாரும் எதுவித சந்தேகத்தையும் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் பார்க்கின்ற போது வடகிழக்கு மக்களுக்கான தமிழ் பொது வேட்பாளராக முதல் தடவையாக நான் போட்டியிட்டிருந்தேன். அதன் நோக்கம் என்னவெனில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வரும் வேட்பாளராக நான் போட்டியிடவில்லை என்பதை நான் தெளிவாகவே கூறியிருந்தேன். 

வடகிழக்கு மக்களுக்கான சுய நிர்ணய உரிமைக்கான தேவை இருக்கின்றது. அதற்கான போராட்டங்களை அகிம்சை ரீதியாகவும், ஆயுதரீதியாகவும் நடத்தி இருக்கின்றார்கள். அதன் வெளிப்பாட்டுத் தன்மை ஊடாக இன்னும் வடகிழக்கிலே உள்ள மக்கள் உறுதியுடன் சுயநிர்ணய உரிமையை வேண்டி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத்தேவை இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. என்பதை இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்காகவே நான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிட்டிருந்தேன்.

அதன் அடிப்படையில்தான் வட கிழக்கு மக்கள் குறிப்பாக ஒரு இலட்சத்து 14 ஆயிரம் வாக்குகள் வடமாகணத்தில் இருந்தும் ஏனைய வாக்குகள் கிழக்கு மாகாணத்திலும் ஏனைய பகுதிகளிலிருந்தும்  மொத்தமாக 2 இலெட்சத்து 26 ஆயிரத்து 4 முப்பத்தாறு வாக்குகள் எனக்கு கிடைத்திருந்த. இலங்கை வரலாற்றிலேயே ஐந்தாவது இடத்தை தமிழ் பொது வேட்பாளர் ஆகிய நான் பெற்றிருந்தேன். இதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். 

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்நின்று செயற்பட்டவர்களில் நானும் ஒருவன். 2020 வரைக்கும் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சரி பிழை என்பதற்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு வீட்டு சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டு இருந்தோம். ஆனால் இம்முறை பொதுத் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு அதாவது 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டதற்குப் பின்னர்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே சில கட்சிகள் வெளியேறி இருந்தார்கள். தமிழரசு கட்சி மாத்திரம் இருந்தது. 

இம்முறை பொதுத்தேர்தலிலே இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம் தனித்து போட்டியிடுகின்றது. எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஏற்கனவே இருந்த கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றார்கள். ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழ் தேசியத்தை வலியுறுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. சுயாட்சிக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றைவிட தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை சிதறி இருக்கின்றது என்பது உண்மைதான். ஆகவே இதனை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டிய தேவை இருக்கின்றது. அதிலே ஒற்றுமைப்படுத்துகின்ற நிலைமை எல்லோருக்கும் அந்த மன ரீதியான மாறுதல்கள் தொடர வேண்டும். அந்த ஒரு சந்தர்ப்பம் தமிழ் பொது வேட்பாளராக நான் போட்டியிட்டதுக்கு பிறகு ஒன்று செய்யலாம் எனும் விடயம் என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்த தமிழ் தேசிய பொது கட்டமைப்புக்கு இருந்தது. 

ஆனால் ஜனாதிபதி தேர்தலிலே புதிய ஜனாதிபதியாக தற்போது தெரிவாகி இருக்கின்ற அனுரகுமார திசநாயக்க அவர்கள் வெற்றி பெற்றதற்குப் பின்னர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பாராளுமன்றத் தேர்தலுக்கு நடத்துகின்ற போது தமிழ் கட்சிகளை ஒற்றுமைப் படுத்துவதில் சில சிக்கல்கள், குளறுபடிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒன்று கூட்ட முடியாத சங்கடங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். 

நிச்சயமாக எதிர்வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் திகதி இந்த பொது தேர்தலுக்குப் பிறகு தமிழ் தேசியத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும். ஒற்றுமைப்படுத்துவதற்கு எல்லோரும் இணைவார்கள் என நான் நினைக்கின்றேன். மீண்டும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்த ஒரு தமிழ் தேசிய சக்தியாக ஒரு சர்வதேசத்துக்கும் தற்போது இருக்கும் ஜனாதிபதிக்கும் ஒரே குரலில் ஒரே தீர்வை நோக்கி செல்கின்ற தேவை எங்களுக்கு இருக்கின்றது. அதற்கு எல்லோரும் தற்போது போட்டியிடுகின்ற சகல கட்சிகளையும் இணைத்து கொண்டு, அதில் இருக்கின்றவர்களையும் இணைத்துக் கொண்டு, பல கட்சிகளில் போட்டியிடும் பல தமிழ் தேசியவாதிகள் போட்டியிடுகின்றார்கள் அவ்வாறானவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வருகின்ற போது அவர்களையும், ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அதை மக்கள் தான் அதற்குரிய சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.






 

SHARE

Author: verified_user

0 Comments: