தமிழ் மக்களின் பிறப்பு வீதம் குறைந்துள்ளமை அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.நாரா டி அருண்காந்த்.
”சனத்தொகை வீழ்ச்சி வாக்காளர் எண்ணிக்கையில் பெரும் தாக்கம் செலுத்திவருவது கவலையளிக்கும் விடயமாக உள்ளது. நாமெல்லாம் இருக்கின்ற தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று எதை சாதிக்கப்போகின்றோம் என்பது புரியாத புதிராகவுள்ளது. ஜனநாயகத் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள எத்தனை வேட்பாளர்கள் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை. எனினும் வாக்குகள் பிரியும் போது தமிழ் வேற்பாளர்களுடைய வெற்றிவாய்ப்பு பெரிதும் குறையும். இதற்கு காரணம் எமது மக்கள் தொகையில் ஏற்பட்டு வரும் பெரும் வீழ்ச்சியாகும்."
என இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அதன் தலைவர் நாரா. டி.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. “2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை தரவுகளின்படி இலங்கையில் 22 இலட்சத்து 70 ஆயிரம் இலங்கை தமிழர்களும் 8 இலட்சத்து 40 ஆயிரம் மலையகத்தமிழர்களும் வாழ்வதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 30 இலட்சம் பேர். இதில் 12 இலட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். சுமார் 3.5 இலட்சம் பேர் யுத்த நடவடிக்கைகளில் காணாமல் போயுள்ளனர். அல்லது மரணமடைந்துள்ளனர். அப்படி கணக்குப்பார்க்கும்போது 14.5 இலட்சம் பேர் தற்போது இலங்கையில் வாழ்ந்து வரவேண்டும். எமது நாட்டில் தமிழர்களுடைய மொத்த ஜனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் நாட்டிலே இல்லாத சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலில் எமது மக்களுக்கான மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் மிகவும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இவை யுத்த சூழ்நிலையில் ஏற்பட்டதொரு சூழல் என்பது ஒருபுறமிருக்க எமது மக்கள் தொகையில் பிறப்பு வீதம் மிகவும் கீழ்மட்டத்திலேயே உள்ளது. இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால் யாழ்பாண மாவட்டத்தையும் புத்தளம் மாவட்டத்தையும் ஒப்பிட்டுப்பார்க்கலாம். யாழ் மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு 529239 பேர் வாக்காளர்களாக பதியப்பட்டிருந்தனர். இதே மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களின் பின் 2023 ஆம் ஆண்டு வாக்காளர்களாக பதியப்பட்டிருந்த மக்களின் எண்ணிக்கை 583752 ஆகும். அதாவது 2014 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரைக்கும் எமது வாக்காளர்கள் எண்ணிக்கை வெறும் 54513 ஆல் மட்டுமே அதிகரித்திருந்தது. எனினும் புத்தளம் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 2014 ஆம் ஆண்டு 553009 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 651933 ஆக அதிகரித்திருந்தது. அதாவது புத்தளம் மாவட்டத்தில் 10 வருடங்களில் ஏற்பட்ட வாக்காளர் அதிகரிப்பு சுமார் 98924 ஆகும். இதனை யாழ் மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 44411 பேர் அதிகமாக உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மாவட்டங்களிலும் 10 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் தொகை ஒன்றாயினும் புத்தளம் மாவட்டம் 10 வருடங்களில் ஜனத்தொகை பெருக்கத்தில் இரண்டு மடங்காக உள்ளது தெட்டத்தெளிவாக உள்ளது.
நிலைமை இவ்வாறே நீடித்தால் “தமிழர்கள் இலங்கையில் முன்னொரு காலத்தில் வாழ்ந்தார்கள்" என்றுதான் உலகம் தனது வரலாற்றை எழுதும். ஆகவே எமது தலைவர்களும் மக்களும் ஜனத்தொகை பெருக்கத்தில் அதிக கவணம் செலுத்தவேண்டிய காலம் வந்துவிட்டது. ஒவ்வொரு தமிழனும் ஆகக்குறைந்தது மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொண்டால்தான் எமது இனம் வலிமையானதொரு தேசிய இனமாக பரிணமிக்கமுடியும்." இது ஒரு இனவாத கருத்தல்ல. புள்ளிவிபரம் சொல்லும் செய்தி. இதனை நாம் அசட்டை செய்தால் நாம் பெரும் பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
0 Comments:
Post a Comment