3 Sept 2024

உணவுப் பஞ்சத்தைத் தவிர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் போஷாக்கு உணவு உற்பத்தித் திட்டம்

SHARE

உணவுப் பஞ்சத்தைத் தவிர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் போஷாக்கு உணவு உற்பத்தித் திட்டம்.

வறிய  நிலையிலுள்ள குடும்பங்களுக்கு  உணவுப் பஞ்சத்தைத் தவிர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் போஷாக்கு உணவுப் பாதுகாப்பு உற்பத்தித் திட்டம் சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ.திலீப்குமார் தெரிவித்தார். 

தற்போது ஆரம்பமாகியுள்ள  பெரும்போகச் செய்கைக் காலத்தை கருத்திற் கொண்டு தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையிலுள்ள வீட்டுத் தோட்டம் செய்யும் விவசாயக் குடும்பங்களுக்கு கத்தரி, வெண்டி, பயற்றை, பீர்க்கு, புடோல், கறிமிளகாய், மிளகாய், உள்ளிட்ட 10 வகையான குறுகிய கால பயன்தரும்  பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

சேருநுவர  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மகாவலிகம, அரியமாங்கேணி, லிங்கபுரம், சமகிபுர, தங்கநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களின் வறிய விவசாய வீட்டுத் தோட்டச் செய்கையாளர்களான 150 குடும்பங்களுக்கு பயிர் விதைகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு திங்களன்று 02.09.2024 ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான பல்துறை அணுகுமுறைகள் மூலம் குழந்தைகளை மையப்படுத்திய முழுமையான அணுகுமுறை எனும் செயல் திட்டம் தெருச்சிறார்கள் நிறுவனத்தின் நிதி அனுசரணையில்  இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் பங்காண்மையுடன் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படுகிறது.

குடும்பத்தில் 5 வயதிற்குக் குறைந்த குழந்தைகள், வறுமை நிலை, வீட்டுத் தோட்ட தொழில் முயற்சியில் ஆர்வம், தாபரிப்புப் பிள்ளைகள் இருக்கும் நிலை,  போஷாக்கு குறைவு, விசேட தேவைக்குட்பட்ட நிலைமைகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த விவசாய வீட்டுத் தோட்ட பயனாளிக் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

நீடித்த பொருளாதார, உணவுப் பாதுகாப்பை   இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்குரிய இத்திட்டத்தினால்  வீட்டுத்தோட்ட விவசாயிகள், வீட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரமும்  போஷாக்கு மட்டமும் உயர்த்தப்படுவதற்கு இதன் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் 25வருட பரந்து பட்ட சேவைகளின் ஓரங்கமாக இந்த போஷாக்கு உணவு உற்பத்தித் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் திலீப்குமார் மேலும் தெரிவித்தார். 

பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வில் தெருச் சிறார்கள் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் ஏ. கஜேந்திரன், பயனாளிகள் உட்பட இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்கள் மற்றும் அதன் தொண்டர் சேவை அணியினரும் கலந்து கொண்டனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: