26 Aug 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மேச்சர்தரைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராத வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைத் தரப்போகின்றார்களா? பொதுவேட்பாளரை மக்கள் விரும்புகின்றார்கள் - சிறினேசன்

SHARE

கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மேச்சர்தரைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராத வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைத் தரப்போகின்றார்களா? பொதுவேட்பாளரை மக்கள் விரும்புகின்றார்கள் - சிறினேசன்.

சதாரணமான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சனை மைலத்தமடு, மதவனை மேச்சர்தரைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைத் தரப்போகின்றார்களா? என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன்தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு செட்டிபாளையத்தி அமைந்துள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை(24.08.2024) மாலை இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா,

உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள்,  கட்சியின் உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான விடயம் இப்போது படிப்படியாக சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழர்கள் பலவிதமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் பலவிதமான கேள்விகளையும் எங்களை நோக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த காலத்தில் 8 ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து இருக்கின்றோம். அது விருப்பமாக இருக்கலாம் விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் முதல் தடவையாக தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற சிந்தனையை 83 சிவில் சமூக கட்டமைப்புகள் கொண்டு வந்திருக்கின்றது. அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை களத்தில் இறக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் இதனோடு தமிழ் தேசியக் கட்சிகள் ஏழு கட்சிகள் பயணிப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

இந்த வேளையில் கட்சி அரசியலுக்கு அப்பால் இப்போது இலங்கை தமிழரசுக் கட்சி இன்னும் முடிவு சொல்லவில்லை. என்றாலும் யாரையும் எதிர்க்கின்ற தன்மையை அவர்கள் ஏற்படுத்தி கொள்ளவில்லை. யாரை ஆதரிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக முடிவெடுக்கவில்லையே தவிர யாரையும் எதிர்க்கச் சொல்லி அவர்கள் முடிவு சொல்லவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் பரப்புரைகள் நடைபெறுகின்றன. 

தமிழ் பொது வேட்பாளரை பற்றி தமிழ் மக்கள் அந்த சிந்திக்க தொடங்கி இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் சிங்கள வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்களித்திருந்தோம். அந்த வேட்பாளர்கள் எங்களுக்கு என்ன செய்தார்கள். அதாவது சமஸ்டியை தந்தார்களா? வடக்கு கிழக்கு இணைப்பை தந்தார்களா? சுயாட்சியை தந்தார்களா? சுயநிர்ணயத்தை தந்தார்களா? சாதாரணமாக இருக்கின்ற மயிலத்தமடு, மாதவனை, கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சனைகளை தீர்த்தார்களா? எதுவும் தீர்க்கவில்லை. ஆகவே இந்த நிலையில் இந்த பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்களிப்பதனால் கடந்த காலத்தில் நடந்தது போன்றுதான் நடக்கும் என்ற ஒரு எண்ணத்தை மக்கள் கொண்டிருக்கிறார்கள். 

நிச்சயமாக நாங்கள் சொல்ல வேண்டும் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு சமஸ்டி தீர்வினை இப்போது இருக்கிற வேட்பாளர்கள் எங்களுக்கு தரமாட்டார்கள் என்பது நிச்சயமாக எங்களுக்கு தெரியும். அப்படி இருக்கின்ற போது அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வர வேண்டும் என்று எங்களுடைய கட்சி எதிர்பார்க்கிறது. பரவாயில்லை. அது எப்போது வரப்போகின்றது என்றும் தெரியாது. 

அதேபோல் எங்களுடைய பரப்புரைகள் நடைபெறுகின்ற போது எமது சார்ந்த சில பிரமுகர்கள் மக்கள் மத்தியில் சொல்லுகின்ற கருத்துகளால் அவர்கள் மிகவும் அதிருப்தி அடைந்து எங்களிடம் அதற்குரிய பதில்களை கேட்கின்றார்கள் அதாவது தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கின்ற என்ற முடிவை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பது அவர்கள் தோல்வி அடையச் செய்வது என்ற முடிவை கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுப்பதற்கு முன்னர் சில பரப்புரைகளில் தமிழ் வேட்பாளர் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் சொல்லுகின்ற போது தமிழ் உணர்வு கொண்டவர்கள் தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணித்தவர்கள் இப்போது இந்த விடயம் சம்பந்தமாக எங்கள் பக்கமாக விரல் நீட்டுகின்றார்கள். 

இந்த தமிழ் பொது வேட்பாளர் என்பவர் உங்களுக்கு தெரியுமா? என்ற அடிப்படையில் அந்த தமிழ் பொது வேட்பாளரை பற்றி நாங்கள் ஒரு பரிகசிக்கின்ற ஒரு நிலைமை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. அவர் இரண்டு தடவை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஒரு ஊடகவியலாளராக இருந்தவர் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும் அவர் கஷ்டமான காலத்தில் அரசியல் நடத்தினார் என்பதும் மக்களுக்கு தெரியும். 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கின்ற அல்லது எதிர்மறையான கருத்துக்களை சொல்கின்ற விடயத்தை விட்டு பல அபிமானிகள் பல பிரமுகர்கள் மிகவும் வேதனை அடைந்தார்கள். அவ்வாறு வேதனை அடைந்த பிரமுகர்கள் பிரதானிகள் தற்போது என்னை வந்து சந்தித்தார்கள் எங்களுடைய மூத்த உறுப்பினர்களும் வந்தார்கள் அவர்களுடைய ஆக்கபூர்வமான முற்போக்கான கருத்துக்களை எம்மிடம் சொல்லியிருக்கிறார்கள். 

அவர்களின் கருத்தின்படி அவர்கள் கடந்த எட்டு ஜனாதிபதிகள் இடைக்கால ஜனாதிபதிகளையும் சேர்த்தால் பத்து ஜனாதிபதிகள் எங்களுக்கு எந்த விதமான தீர்வுகளையும் தராத நிலையில் இருக்கின்றார்கள். இப்போது இருக்கின்ற ஜனாதிபதியும்கூட சாதாரண மலத்தமடு மாதவனைப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சனையை தீர்க்க முடியாதவர், குறிப்பாக மயிலத்தமடு மாதவணையில் அந்நிய மாவட்டத்திலிருந்து குடியேறுபவர்கள் வந்து குடியேறி இருக்கின்றார்கள் அந்த வேளையில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது. நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியும்கூட அவர்களை வெளியேற்ற முடியாத நிலையில் தற்போதைய ஜனாதிபதி இருக்கின்றார். தற்போதைய ஜனாதிபதி இவ்வாறு இருக்கின்ற போது ஒரு பெரிய இனப்பிரச்சனைக்கான தீர்வை அவர் எப்படி தருவார் என்ற என்பதில் எங்களுக்கு ஒரு பாரிய சந்தேகம் இருக்கின்றது. 

ஜனாதிபதி வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் எங்களுடைய போராளிகளை பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டு வந்து படிப்படியாக அவர்களை பேச்சு வார்த்தை என இழுத்துதடித்துக் கொண்டு அவர்களை சிதைத்து இன்று சின்னாபின்னமாகி இருக்கின்றார். இன்னுமொருவர் வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் சென்று உடைத்து இருக்கின்றார். மற்றவர்;; வடக்கில் கிழக்கில் கிட்டத்தட்ட 1000 பௌத்த விகாரங்களை கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். இப்படியெல்லாம் தமிழ் தேசிய உணர்வுக்கு எதிராக தமிழ் தேசிய போக்குக்கு எதிராக கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்ற போது நாங்கள் எப்படி இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சுட்டிக் காட்ட முடியும்.

தமிழ் பொது வேட்பாளர் என்பது இல்லாது விட்டிருந்தால் சிலவேளைகளில் உள்ளதில் நல்லது என்ற அடிப்படையில் நாங்கள் முடிவெடுக்கலாம் எனவே தமிழ் பொது வேட்பாளர் என்பதும் 83 சிவில் கட்டமைப்புகளால் நிறுத்தப்பட்டிருக்கின்ற போது நாங்கள் எப்படி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம். அவர் படம் காட்டுகின்றார் என்றெல்லாம் நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே இப்படியான வாதப்பிரதிவாதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்ற போது நாங்கள் வாயை மூடிக் கொண்டிருக்கின்ற போது எங்கள் பக்கமாக விரல் நீட்டப்படுகின்றது.

நீங்கள் என்ன மௌனியாக இருக்கின்றீர்கள் இது பற்றிய கருத்துக்களை தெளிவு படுத்தவில்லை என்ற கருத்துக்கள் எல்லாம் சொல்லப்படுகின்றதனால் நாங்கள் சொல்லுகின்ற விடயம் தற்போது இபலர் எம்மை வந்து சந்தித்தார்கள். அவர்களுடைய ஒவ்வொரு கருத்துக்களையும் கேட்டோம். இதை கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் கட்சியினை சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். நான் தனிப்பட்ட முறையில் சொன்னால் அது ஒரு சர்வாதிகாரமான கருத்தாக இருக்கலாம். அல்லது தன்னிச்சையான கருத்தாக அல்லது தான்னோன்றிதனமான கருத்தாக இருக்கலாம். கலந்து கொண்டவர்களின் கருத்து என்னவென்றால் பொது வேட்பாளர் என்கின்ற தமிழ் வேட்பாளரை ஒரு சிங்கள வேட்பாளரை நம்பி எங்களால் புறம் தள்ள முடியாது. தோற்கடிக்க முடியாது என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.

மக்களின் கருத்துக்களை மீறி நாங்கள் வேறு முடிவுக்கு செல்ல முடியாது. ஏனெனில் மக்கள்தான் வாக்களிக்க போகின்றவர்கள் மக்கள் ஒரு சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் தமிழ் வேட்பாளரை தவிர்த்து விடுங்கள் என்று சொல்வதும், தமிழர்களை ஒற்றுமைப்பட வேண்டும். தமிழ் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழர்களின் குரல் ஒன்றாக ஓங்கி ஒலிக்க வேண்டும், சர்வதேசத்திற்கு ஒரு பலமான செய்தியை சொல்ல வேண்டும், என்ற அடிப்படையில்தான் இப்போது சங்கின் சின்னமாகக் கொண்டிருக்கின்ற பொது வேட்பாளர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்ற போது நாங்கள் தமிழர்கள் ஒற்றுமைப்படக்கூடாது தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமைப்படக்கூடாது, தமிழர்களின் குரல் ஒன்றாக ஒலிக்ககூடாது, தமிழர்களின் ஒற்றுமைக்கு நாங்கள் குந்தகம் விளைவிக்க வேண்டும், என்ற அடிப்படையில் நாங்கள் விதண்டாவாதமான கருத்துக்களை சொல்ல முடியாது. 

அறிவுஜீவிகளின் கருத்துக்கு இணங்க தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக சொல்லப்படுகின்ற எதிர்மறையான எதிர்ப்பான முரண்பாடான கருத்துக்களை நிறுத்த வேண்டும்.

சிங்கள வேட்பாளர்கள் கடந்த காலத்தில் வேண்டுமான அளவுக்கு தாராளமாக எங்களை ஏமாற்றி இருக்கின்றார்கள் இப்போது இருக்கின்ற வேட்பாளர்களும் சிங்கள வாக்குகளை அள்ளி எடுப்பதற்காக தமிழர்களுக்கு எதையும் பெரிதாக கொடுத்து விடக்கூடாது. என்ற எண்ணத்தில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள் எனவேதான் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றேன் மக்களின் கருத்து மக்களின் சிந்தனை மக்களின் எதிர்பார்ப்பு என்பதன் பக்கமாக நாங்கள் நிற்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக நாங்கள் முடிவை எடுத்துக்கொண்டு  நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை மலீனப்படுத்துகின்ற மானபங்க படுத்துகின்ற அவமதிக்கின்ற அவரை நாங்கள் ஒரு பத்தோடு ஒன்று பதினொன்றாக கருகின்ற செயற்பாடுகளை விட்டுவிட்டு விட முடியாது.

தமிழ் தாயகம் என்று சொல்லப்படுகின்ற வடக்கு கிழக்கில் அளிக்கப்படுகின்ற வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகளை 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை இந்த தமிழ் பொது வேட்பாளர் பெறவேண்டும் என்பதைதான் மக்கள் நினைக்கின்றார்கள். அந்த மக்களின் தமிழ் சிந்தனை, தமிழ் தேசிய சிந்தனை, தமிழ் உணர்வு, என்பவற்றை நாங்கள் எட்டிக் கடந்து விட்டு தட்டி செல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆகவே அந்த கருத்துக்களை மனசாட்சியின்படி சொல்லுகின்றோம். அதனை விடுத்து எங்களுக்கு சிங்கள பொது வேட்பாளர்கள் நம்பகமான முடிவுகளை தரவில்லை தரமாட்டார்கள் எதிர்பார்க்க முடியாது. என்ற நிலையில் இருக்கின்றோம். ஆகவே காலத்தை கடத்தி முடிவு நாளை வரும், நாளை வரும் என்று காலத்தை கடத்தி நாங்கள் ஒரு சரியான செய்தியை மக்களுக்கு சொல்ல முடியாத ஒரு நிலைமை இருக்கின்ற  காரணத்தார். தயவுசெய்து மக்களின் அபிப்பிராயத்தை மக்களின் தமிழ் தேசிய உணர்வை மக்களின் தமிழ் தேசிய உணர்வின் காரணமாக வந்த ஒற்றுமையை சிதைக்கக் கூடிய விதத்தில் நாங்கள் கருத்துச் சொல்லவில்லை.

ஆகவே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்கின்றதனால் மக்களின் பின்னால்தான் தலைவர்கள் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். என்ற நிலைக்கு மக்கள் எங்களை அழுத்தம் தந்து கொண்டிருக்கின்றார்கள் அது நியாயமான சரியான விடயம் என்றும் நான் கருதுகின்றேன. 

உங்களுடைய கட்சியினை சேர்ந்த சீ.வீ.கே.சிவஞானம், எம்..சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்கள் வெளிப்படையாகவே பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளனரே என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது அவரிடம் வினவினார்? 

அதற்குப் பதிலளித்த அவர் நாங்கள் தமிழ்த் தேசிய உணர்வு தளத்திலிருந்து சிந்திக்கின்றோம் உண்மையான தமிழ் மக்களின் கருத்துகளை பற்றி சிந்திக்கின்றோம் நாங்கள் சோரம் போகாத விதத்தில் தமிழ் மக்களை கொண்டு செல்ல வேண்டும். எங்களுடைய வரலாறு என்பது தொடர போகின்றது. அரசியல் என்பது முடிந்து விடலாம் எமது அரசியல் இன்றோ நாளையோ  என்று முடிந்து விடலாம் ஆனால் எங்களுடைய வரலாறு தொடர்ந்து நிற்கும்.

 

ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட வாக்குரிமைச் சட்டம், குடியுரிமைச் சட்டம், என்பன மலையக மக்களின் இலட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமையை குடியுரிமையை பறித்த போது அதற்கு ஆதரவாக பொன்னம்பலம் அவர்கள் வாக்களித்ததன் காரணமாக அவருடைய பெயர் வரலாற்றில் ஒரு கறை படிந்த பெயராக இருக்கின்றது. அதேபோன்றுதான் வடக்கு கிழக்கில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுகின்ற போது எதையும் தருவதற்கு சம்மதிக்காத எங்களுக்கு எதையும் தர முடியாத வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்களிப்பதன் மூலமாக வேண்டும் என்றால் இரண்டு மூன்று அமைச்சர் பதவிகளை பெற்று வாய்மூடி மொவுதிகளாக நாங்கள் அங்கு இருக்க முடியுமே தவிர வேறு எதையும் செய்ய முடியாது. 

இப்போது பிள்ளையான் வியாழேந்திரன் போன்றவர்கள் கல்முனைப் பிரச்சினையும், மாதவனை, பிரச்சினையோ தீர்க்க முடியாமல் இருக்கின்றார்கள். அதேபோன்று எங்களுக்கு கைகளை கட்டிப்போட்டு வாய்களுக்கு பிளாஸ்டர் அடிப்பது போன்று அமைச்சர் பதவியை தந்து விட்டு எங்களை கட்டி வைப்பார்களே தவிர அவர்கள் தமிழர்களுக்கான தீர்வை தரமாட்டார்கள். உரிமையை விட அவர்கள் சலுகையை தருவார்கள் நியாயத்தை விட எங்களுக்கு இலாபம் தரும் சில வேலைகளை செய்து விடுவார்கள் எங்களுக்கு உரிமையா? சலுகையா? என்றால் தமிழரசு கட்சி உரிமை பக்கம் நிற்கும் நியாயமா இலாபமா என்று கேட்டால் நாங்கள் நியாயத்தின் பக்கம் நிற்போம் நாங்கள் சலுகைக்கும் இலாபத்திற்கும் அடிபணிந்து செல்லுகின்ற ஒரு சில்லறை கட்சி இல்லை என்பதை மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.




 













SHARE

Author: verified_user

0 Comments: