6 Jun 2024

காத்தான்குடி மஸ்ஹரி குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளை கௌரவிக்கும் முதலாவது நிகழ்வு.

SHARE

காத்தான்குடி மஸ்ஹரி குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளை  கௌரவிக்கும்  முதலாவது நிகழ்வு.

 காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் அல்- குர்ஆன் இறுதிப் பரீட்சையில் சித்தி பெற்ற காத்தான்குடி மஸ்ஹரி குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) இடம்பெற்றது. 

காத்தான்குடி அஷ் ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட உரையாற்றிய இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மொழித் துறைக்கான சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எஸ். எல். எம். நஷ்மல் ‘குர்ஆன் வழங்கும் அறபு மொழியின் சிறப்புக்கள், தனித்துவம் மற்றும் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஏனைய மொழிகளின் தன்மை என்பன தொடர்பாகத் தெளிவுபடுத்தினார். 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத் தின் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகரும், காத்தான்குடி அல் ஜாமியத்துஸ் ஸித்தீக்கிய்யா அறபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷேய்க் எம். ஐ. அப்துல் கபூர் கலந்து கொண்டார்.

அவர் ‘மத்ரஸாவின் பெயர் மற்றும் அதன் உருவாக்கம் என்பன தொடர்பாக தனதுரையில் குறிப்பிட்டதுடன், ''பிரதேசத்தில் அமைதியோடும், பணிவோடும் நடந்து, பள்ளிவாசல்களிலே இமாமாக, குர்ஆன் மத்ரஸாக்களில்  ஆசிரியராக, உலமாக்களுக்கான தன்னாலான பணிகள் என்ற பல்வேறு சேவைகளைச் செய்து இவ்வுலகை விட்டு போயிருக்கின்ற அஷ் ஷேய்க் மஸ்ஹர் அல்-பலாஹி'' அவர்களை  நினைவு படுத்தியதுடன், 

இந்த மத்ரஸாவின் தலைமை ஆசிரியையின்  முன்னோடி செயற்பாடாக

''ஒரு மனைவி தனது கணவனை இழந்தாலும் அவருக்கு, நன்றியோடு இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாகத் தனது கணவன் உலகத்தில் இல்லாவிட்டாலும் அவரின் பெயரை ஒரு மகத்துவமிக்க குர்ஆன் தொடர்பான கற்றல் நிலையத்திற்கு வைத்து, தன்னுடைய நன்றிக்கடனை அதன் மூலமாக வெளிப்படுத்தி, அவர் நாமம் பிரகாசிக்க வேண்டும்'' என்ற நோக்கத்துடனும், பல தியாகங்களுக்கு மத்தியில் நடாத்திக் கொண்டிருப்பதும், மாணவர்களின் ஆற்றலைக் கவிதை, கட்டுரை, பேச்சு போன்றவற்றில் பயிற்றுவிப்பதும் பல வகைகளில் இங்கு கற்கும் சிறார்களுக்குக் கிடைக்கும்  முன்னோடி செயற்பாடு என்றும் வலியுறுத்தினார்.

 மத்ரஸாவின் உப தலைவர் ஏ. எல். எம். ஷாபாஹிர் தலைமையில்  இடம்பெற்ற இவ்விழாவில் குறித்த குர்ஆன் மதரஸா இறுதிப் பரீட்சையில் அல்குர்ஆனை சரளமாகவும், தெளிவாகவும் ஓதுதல், தொழுகை மற்றும் அன்றாட செயற்பாடுகளில் குர்ஆனை செயற்படுத்துவதற்கான நடைமுறைப் பரீட்சை என்பவற்றில் சித்தியடைந்த 20 மாணவ மாணவிகள் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.  

இவ்விழா மாணவர்களின் கலை ஆற்றல்களை வெளிப்படுத்தும்   நிகழ்ச்சிகளுடன்; மத்ரஸா ஸ்தாபகரும் அதன் தலைமை ஆசிரியையுமான பி. எம். சுஹைறா மஸ்ஹரினால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் மத்ரஸாவின் தலைவர் ஏ. பி. எம். முனாஸ், செயலாளர் எம். நஸாத் உட்பட ஏனைய நிருவாக சபை உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் எனப் பலர் கலந்துகொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: