விவசாயின் நட்டஈட்டுப் பணத்தை தனது வங்கிக் கணக்கிற்குப் பெற்ற அரச உத்தியோகஸ்த்தர்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி கம நல கேந்திர நிலையத்திற்குட்பட்ட ஓட்டடடி முன்மாரிக் கண்டத்தில் நான்; குத்தகைக்குப் பெற்ற மூன்று அரை ஏக்கர் வயலில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும்போக வேளாண்மைச் செய்கை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்ட ஈடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்தின் ஊடாக நான் விண்ணப்பித்திருந்தேன். எனக்கு எந்த நட்டஈட்டுத் தொகை கிடைக்கவில்லை. ஆனால் நான் வேளாண்மைச் செய்கையை மேற்கொண்டிருக்கும் வயற்காணிக்குரிய நட்டஈட்டுத் தொகையை அதே கமநலத் திணைக்களத்தின் மண்டூர் கமநல கேந்திர நிலையத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் அவருடைய சொந்த வங்கிக் கணக்கிற்கு உரமானியத்திற்குரிய பணம் 21000 ருபாவை பெற்றுள்ளதோடு, நட்டஈட்டுக்குரிய பணத்தைப் பெறுவதற்கும் விண்ணப்பித்துள்ளார். என்பதை பின்னர் கண்டுகொண்டேன். என பாதிக்கப்பட்ட விவசாயியான குருமண்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் குறித்து அவர் வியாழக்கிழமை(23.05.2024) குருமண்வெளியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்… இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
ஒரு விவசாயிக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகையை அதேதிணைக்களத்தில் கடமையாற்றும் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளமையானது அப்பட்டமான மோசடியாகும். இவ்விடையம் குறித்து நான் எழுத்துமூலம் அப்பகுதி பெரும்பாக உத்தியோகஸ்த்தருக்கு அறிவித்ததற்கு இணங்க என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். இரண்டு தடவைகள் நான் சென்றிருந்தபோது என்னை ஏமாற்றினார்கள். பின்னர் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் நேரில் சென்றும் முறைப்பாடு தெரிவித்திருந்தேன்.
அதன் பின்னர்தான் சம்மந்தப்பட்ட அரச உத்தியோகஸ்த்தரையும் என்னையும் நேரில் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்கள். அப்போது சம்மந்தப்பட்ட அரச உத்தியோகஸ்த்தர் எனக்கு வரவேண்டிய பணத்தை அவர் பெற்றுக்கொண்டதாக ஒப்புக் கொண்டார்.
ஒரு விவசாயின் பணத்தை இவ்வாறு மிகவும் சூட்சுமமான முறையில் அதே திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர் பெற்றுள்ளமையானது மிகவும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டிய விடையமாகும். எனக்கு நடந்தது போல் குறித்த உத்தியோகஸ்த்தர் மண்டூர், மற்றும் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளிமிருந்து இன்னும் பல இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதுவே இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இவ்விடையம் குறித்து கடந்த இரண்டு மாதங்களாக மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலிருந்து இன்னும் சரியான நீதி கிடைக்கவில்லை அதற்காக வேண்டி நான் மாவட்ட அரவசாங்க அதிபர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கிழக்கு மாகாண ஆளுனர், விவசாய அமைச்சு, ஜனாதிபதி, கணக்காய்வாளர் அலுவலகம், மனித உரிமை ஆணைக்குழு, உள்ளிட்ட பலருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். எனவே சம்மந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் அனைவரும் விவசாயியான எனக்கு கிடைக்க வேண்டிய நட்டஈட்டு பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிப் பெற்றுக் கொண்டுள்ள கமநல நிணைக்களத்திலே கடமையாற்றும் உரிய உத்தியோகஸ்த்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். என்பதற்காகவே நான் இந்த ஊடக சந்திப்பபை மேற்கொள்கின்றேன்.
தவறுதலாகவே உரிய உத்தியோகஸ்த்தின் வங்கிகக் கணக்கிற்கு எனக்கு வரவேண்டிய பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக எனக்கு மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்திலிருந்து எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு வழங்கும் பதில் போன்றுதான் அமைந்துள்ளது.
குறித்த உத்தியோகஸ்த்தரால் எமது பகுதியில் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டள்ளார்கள் அவர்கள் பொதுவெளியில் தெரிவிப்பதற்கு அச்சத்தில் உள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த உத்தியோகஸ்த்தர் எனது மாமியின் வீட்டிற்குச் சென்று எனக்கு அச்சுறுத்தல் விடுத்துவிட்டுச் சென்றுள்ளார். எனவே எனது உயிருக்கு ஏதாவது நடந்தால் குறித்த உத்தியோகஸ்த்தரே பெறுப்பாவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறான சம்பவங்கள் எந்தவொரு விவசாயிக்கும் ஏற்படக்கூடாது. இவர் அரச திணைக்களத்தில் கடமை புரிவதற்குப் பொருத்தமானவரா என்பதையும் பார்க்க வேண்டும். நாட்டுக்குச் சோறுபோடுகின்ற விவசாயிக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது அனைவரும் தட்டிக்கேட்க வேண்டும்.
என பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட ஓட்டடி முன்மாரிக் கண்டத்தின் விவசாயியான தம்பிப்பிள்ளை தியாகராஜா தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment