4 Apr 2024

பெண்கள் பொறுப்பு மிக்க பதவிகளில் அமரும்போது அது உற்றுக் கவனிக்கப்படுகிறது மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா.

SHARE

பெண்கள் பொறுப்பு மிக்க பதவிகளில் அமரும்போது அது உற்றுக் கவனிக்கப்படுகிறது மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா.

பெண்கள் பொறுப்புமிக்க பதவிகளில் அமரும்போது அது ஆண்கள் அப்பதவிகளில் இருப்பதை விட உற்றுக் கவனிக்கப்படுகிறது என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தெரிவித்தார்.

மாவட்டத்தில் மாண்புறும் மகளிரைக் கௌரவித்து ஊக்கமளிக்கும் நிகழ்வு இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையோடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் மட்டக்களப்பு தேவநாயகம் மாநாட்டு மண்டபத்தில் புதனன்று மாலை 03.04.2024 இடம்பெற்றது.

பல்வேறு பரிமாணங்களில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திப் பறைசாற்றி நிற்கும் அரசு துறைகளில் பதவி வகித்த, வகித்துக் கொண்டிருக்கும் முன்னோடிப் பெண்களும் பெண் சுய தொழில் முயற்றியாளர்களும்  அரங்கில் பாராட்டப்பட்டு கௌரவித்து ஊக்கமளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு மாவட்டச் செயலாளர் தலைமை வகித்தார்நிகழ்வில் கூடவே நடனம், விழிப்புணர்வு நாடகம், பாடல் உட்பட கலை அம்சங்கள் இடம்பெற்றதுடன்  நிகழ்வுகளில் பங்குபற்றித் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசில்களும் நினைவுப் படிகங்களும் வழங்கப்பட்டன.

மேலும், தொழில்முயற்சியாண்மைக்காக  சுய தொழில் ஊக்குவிப்பு உபகரணங்களும் பல பெண்களுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் தலைமையேற்றுத் தொடர்ந்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா, “அரசாங்க அதிபராகப் பணியாற்றுவது எவ்வளவு சிரமம் வாய்ந்தது என்று எனக்குத் தெரியும். ஒரு ஆண் அரசாங்க அதிபராக இருக்கும்போது எல்லோருடைய பார்வையும் இந்தப் பெண் எப்படிக் கடமை செய்கிறார் என்ற கோணத்தில்  அந்தப்பக்கம்தான் பார்வை இருக்கும். அலுவலகங்களில் சகல துறைகளிலும் பெண்களே பெரும் எண்ணிக்கையில்  கடமையாற்றுகிறார்கள். பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கெதிராக நாங்கள் செயற்பட வேண்டும். அந்த வகையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்களின் நலனுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் சிறுவர்களின் விவகாரங்களைக் கவனிக்க அதற்கென்றே பெண் அலுவலர்கள் சகல பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றுகின்றார்கள்.

ஆகையினால் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்களும் மகளிர் விவகாரங்களுக்கெனப் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதில் அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் இருந்து கருமமாற்ற வேண்டும்என்றார்.

இந்நிகழ்வில்; மட்டக்களப்பு 243வது படையணியின் பிரிகேடியர் சந்திம குமாரசிங்ஹமட்டக்களப்பு மாவட்டப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், கிளிநொச்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் ரூபாவதி உட்பட பல முன்னாள் தலைமை அதிகாரிகளான பெண்கள், மகளிர்சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார் உட்பட கைத்தொழிற்துறைப் பெண்களும் கலந்து கொண்டனர்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் 2012ஆம் ஆண்டிலிருந்து சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: