(புருஷோத்)
மக்கள் பாவனையின்றி பாழடைந்து போயுள்ள மட்டக்களப்பு பாலயடிவட்டை பொது சந்தையினை மக்கள் பாவனைக்காக புனரமைக்குமாறு பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
பாமர மக்கள் முதல் படித்தவர் வரை நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் மனித வாழ்க்கையில் ஆதிகாலத்தில் பண்டமாற்று முறையிலிருந்து தற்கால நவீன யுகத்தில் இலத்திரனியல் பணப்பரிமாற்றம் வரை தொழிநுட்ப வளர்ச்சி பெற்றுள்ள தற்போதைய காலத்தில் ஒரு சமூகத்தில் வாழும் மக்களின் அடிப்படை முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றான சந்தையானது இயங்காத நிலையில் இருப்பது என்பது அரசினதும் அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியிலுள்ள பொதுச்சந்தையானது மக்கள் பாவனையின்றி நீண்டகாலமாக கால்நடைகளின் வசிப்பிடமாக மாறியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியிலுள்ள பாலையடிவட்டை கிராமமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதுடன் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் தமது பிரதான ஜீவநோபாய தொழிலாக விவசாயத்தினையும் கால்நடை வளர்ப்பினையும் மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள மக்கள் தமது விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவோ அல்லது வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடவோ பொருட்களை கொள்வனவு செய்யவோ பல கிலோமீற்றர் தூரத்திலுள்ள களுவாஞ்சிகுடி மற்றும் கல்முனை போன்ற நகரங்களுக்கே செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
பாலையடிவட்டை மக்களின் தேவை கருதி பல மில்லியன் ரூபாய் நிதியினை செலவழித்து நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தை கட்டமானது பல வருடகாலமாக பாவனயின்றி கிடப்பதுடன் பகல் இரவு வேளைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்துடன் அவற்றின் உறைவிடமாகவும் மாறியுள்ளது.
இப் பகுதி மக்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை இப் பிரதேசத்தில் விற்பனை செய்ய முடியாமல் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு சென்று குறைந்த விலையில் கொடுத்து விட்டு அப்பொருளை வாங்கிய முதலாளிகள் அதிகப்படியான விலைகளுக்கு விற்று அதிக இலாபம் ஈட்டும் போது வெயிலிலும், மழையிலும் அல்லலுற்று கிடந்து உற்பத்தி செய்த தொழிலாளி மிகவும் குறைந்த இலாபத்துடன் தொடர்ந்தும் தொழிலாளியாகவே தன் வாழ்நாளை கழித்து வருகிறான் என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
இதனை கருத்திற் கொண்டு தமது கிராமத்திலுள்ள பொதுச் சந்தையினை விரைவில் இயங்க செய்யுமாறு இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment