சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - கோ.கருணாகரம் (ஜனா) பா.உ.
குரோதி புதுவருடத்தைக் கொண்டாடும் அனைவரும், அனைத்துவிதமான சவால்களையும் வெற்றிகொண்டு சிறந்ததோர் வாழ்க்கையை அடைந்துகொள்வதற்காக இறைவனை வேண்டி இவ்வருட புதுவருட வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) விடுத்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள், மற்றும் தமிழ் சிங்களப் புதுவருடம் ஆகியன ஒரே காலத்தில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இவ்வருடம் ஒரு சிறப்பானதொரு வருடமாகும்.
பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிகாணும் வகையில் முயற்சிகளை செய்து கொண்டே நாட்டில் பறிக்கப்படும் உரிமைகளையும் அடைந்துகொள்வதற்காகப் பாடுபடவேண்டியவர்களாக தமிழர்கள் முயற்சி செய்யவேண்டிய காலமே இது.
ஒவ்வொரு புதுவருடத்திலும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்றே நம்பிக்கை கொள்கின்றனர்.
உலகப் பொருளாதாரம் முதல் நமது நாட்டின் பொருளாதாரம் வரை நெருக்கடிகளையே சந்தித்திருக்கிறது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் அந்த நம்பிகையைக் கைவிடாதவர்களாகவும் வெற்றி பெறுபவர்களாகவும் முன்நகர இந்தப் புதுவருடம் வழி செய்யும் என்ற நம்பிக்கையுடன் நகர்வோம். அந்தவகையில், நாம் உறுதியாகவும், சுயாதீனமாக எழுந்து நிற்பதற்கு புதுவருடம் வாய்ப்புக்களை வழங்கட்டும்.
எமது நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 75வருடங்களை கடந்துவிட்டது. இருந்தாலும் தமிழர்கள் தங்களது சுதந்திரமான உரிமைகளுக்காகப் போராடும் நிலையே காணப்படுகிறது. அரசாங்கங்கள் மாறுவதும் அதன் தலைவர்கள் மாறுவதும் வழமையானதொரு விடயமாகவே இருந்த வருகிறது. அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் இதுவரையில் எந்தப் பயனையும் தந்துவிடவில்லை என்பது கவலையே.
எமது இலங்கை நாட்டில் தமிழர்கள் தங்களுடைய
உரிமைப்பிரச்சினை சார்ந்து கடந்த பல தசாப்தங்களாகப் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டம்
நீதி நியயாயங்களை நம்பியே அகிம்சை வழியில் ஆரம்பித்தது. அதற்கான தீர்வு எட்டப்படாததன்
காரணமாக அது வன்ம வழியைத் தேடியது. 2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்செய்யப்பட்டது.
பிறக்கின்ற இப் புதிய வருடத்திலேனும் தமிழர்களின் உரிமைப்பிரச்சினைக்கான தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிரந்தரத் தீர்வொன்று கிடைக்கப்பெறவேண்டும். தமிழ் பேசும் சிறுபான்மையினர் தங்களது உரிமைகள் மதிக்கப்படுகின்றவர்களாக உரிமைகளைப் பெற்றவர்களாக வாழ்வதற்கான இலங்கை நாடு உருவாகவேண்டும்.
அத்துடன், தமிழர்களின் அரசியல் வரலாறானது பல்வேறு நெருக்கடியான கால கட்டங்களைக் கண்டுவந்திருக்கிறது என்ற வகையில் தற்போதைய நிலையில் தமிழ் கட்சிகளிடமும் தமிழ் அரசியல் வாதிகளிடமும் சிறந்ததொரு ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தேவையாக இருக்கிறது. வேறு வேறு காரணங்களுக்காக தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் முரண்களை வளர்த்துக் கொள்ளாது புதிய வருடம் அனைவரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தட்டும் என்று வாழ்த்துகிறேன்.
அதே நேரத்தில் அரசியல், பொருளாதார மீட்சி பெற்று அனைத்து துறைகளிலும் மேன்மையை வழங்குவதாக குரோதி வருடம் அமையவேண்டும். அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்த புத்தாண்டாக இப் புத்தாண்டு அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment