பெண்கள் எல்லாத் துறைகளிலும் கோலோச்சுகிறார்கள் ஆனாலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை - மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா.
பெண்கள் எல்லாத் துறைகளிலும் கோலோச்சுகிறார்கள் அதிக எண்ணிக்கையிலும்; பணியாற்றுகிறார்கள் ஆனாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா முரளீதரன் தெரிவித்தார்.மகளிரைக் கௌரவித்து ஊக்கமளிக்கும் நிகழ்வு இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையோடு வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் வாகரைப் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
பல்வேறு பரிமாணங்களில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திப் பறைசாற்றி நிற்கும் சாதனைப் பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களைக் கௌரவித்து ஊக்கமளிக்கும் இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பிரதேசத்தின் பல்துறைச் சாதனைப் பெண்களும் அரங்கில் பாராட்டப்பட்டனர்.
மேலும், தொழில்முயற்சியாண்மைக்காக சுய தொழில் ஊக்குவிப்புக் கடன் தொகையும் பல பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் தலைமையேற்றுத் தொடர்ந்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா, “அலுவலகங்களில் சகல துறைகளிலும் பெண்களே பெரும் எண்ணிக்கையில் கடமையாற்றுகிறார்கள். பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கெதிராக நாங்கள் செயற்பட வேண்டும். அந்த வகையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்களின் நலனுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் சிறுவர்களின் விவகாரங்களைக் கவனிக்க அதற்கென்றே பெண் அலுவலர்கள் சகல பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றுகின்றார்கள்.
ஆகையினால் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்களும் மகளிர் விவகாரங்களுக்கெனப் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதில் அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் இருந்து கருமமாற்ற வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் ஜி. அருணன், பிரதேச உதவிச் செயலாளர், வாகரைப் பொலிஸ் நிலைய பெண் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், மகளிர்சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் ஆகியோரும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் 2012ஆம் ஆண்டிலிருந்து சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment