27 Feb 2024

மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் தமிழ் முஸ்லிம் நல்லுறவின் சின்னமாகவும் திகழ்கிறது. சன்மார்க்க அறிஞர் எம்.எச்.எம். புஹாரி

SHARE

மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் தமிழ் முஸ்லிம் நல்லுறவின் சின்னமாகவும் திகழ்கிறது. சன்மார்க்க அறிஞர் எம்.எச்.எம். புஹாரி.

தென்னிந்திய பெருமக்கள் மட்டக்களப்பு நகர முகப்பாய் கம்பீரமாய் அமைந்திருக்கும் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உறவுக்கும் இணைப்புப் பாலமாய் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நெடுகிலும் காணக்ககூடியதாகவுள்ளது என காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் நிருவாக செயலாளரும்  ஹாபிழ்கள் ஒன்றியத்தின் ஆலோசகருமான மார்க்க அறிஞர் கலாபூஷணம் எம்.எச்.எம். புஹாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர முஸ்லிம் சமூக சேவை இன நல்லிணக்க அமைப்பின் கூட்டமும் ஜும்மாப் பள்ளிவாசல் ஜமாஅத்தாரின் சங்க ஒன்று கூடலும் ஞாயிறன்று 25.02.2024 காத்தான்குடி அல்மனார் கல்லூரியில் இடம்பெற்றது.

அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.எம். அப்துல் காதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணிகள், மார்க்க அறிஞர்கள், சமூக சேவையாளர்கள், செயற்பாட்டாளர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய சன்மார்க்க அறிஞர் புஹாரி அவர்கள்,

மட்டக்களப்பில் ஆயுத முரண்பாடுகள் வன்முறைகள் இடம்பெற்றபோதும் கூட இந்தப் பள்ளிவாசல் தமிழ் முஸ்லிம் உறவின் முத்தாய்ப்பாய் விளங்கியது என்றால் அதன் சிறப்பம்சம் தெளிவாகத் தெரிகிறது.

மட்டக்களப்பு நகர ஜாமியுஸ்ஸலாம் நகர பள்ளிவாசலை அமைத்து மிகச் சிறப்பாக நிருவகித்து அதற்காக மிகக் கடுமையாக உழைத்தவர்கள் அனைவரும் தென் இந்திய காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெருமக்களேயாகும்.

அவர்கள் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் செய்த சிறப்பான பணி இந்த அழகான பள்ளிவாசலை மிகச் சிறப்பான இடத்திலே அமைத்ததாகும். இந்தப் பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கான வணக்க வழிபாட்டுத் தலமாக மட்டுமில்லை. இது தமிழ் முஸ்லிம் நல்லுறவின் சின்னமாகவும் திகழ்கிறது. மட்டக்களப்பு மாநகரிலே தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கான ஒரு இஸ்லாமிய சின்னத்தைப் பார்க்க வேண்டுமானால் அது மட்டக்கனளப்பு நகர முகப்பாய் கம்பீரமாய் அமைந்திருக்கும் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசல்தான்.

புண்ணிய தலம் இந்தப் பள்ளிவாசல் அமைந்திருக்கின்ற இடம் முக்கியமான ஸ்தலம், மத்திய இடம். கச்சேரி, நீதிமன்றம் மாநகர சபை, பொதுநூலகம் பிரபலமான பாடசாலைகள், பிரபலமான மைதானம், கிழக்கு மாகாண அஞ்சல் தலைமையகம், வங்கிகள் நகர கடைத்தொகுதிகள் என்பனவற்றுக்கும் மத்தியில் அமைந்திருக்கின்ற இந்தப் பள்ளிவாசல் மிக  முக்கியமான இடமாகும்.

அதனால்தான் இது இன நல்லுறவின் சின்னமாகத் திகழ்கிறது என்று கூறுகின்றோம்.

அதையும் விட அந்தப் பள்ளிவாசலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்த நாட்டிலே இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் உருவாக, அல்குர்ஆனை மிகச் சிறுவயதிலே மனனமிட்டு இந்தப் பள்ளிவாசலிலே தலைமை தாங்கி தொழுகை நடத்திய ஒரு சிறுவனின் செயலால் இந்தப் பள்ளிவாசல் 1969இல் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது.

அந்தச் சின்னப் பையன்தான் பின்னாட்களில் ஹாபிஸ் எனப் பட்டத்தைச் சுமந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சராகவும் சுற்றாடல்துறை அமைச்சராகவும் இருந்த ஹாபிஸ் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அவர்கள்.

அவரின் செயலால் தூண்டப்பட்டதன் காரணமாகத்தான் வைராக்கியம் கொண்டு காத்தான்குடியிலே 1971ஆம் ஆண்டில் அல்குர்ஆன் மனன வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகர பள்ளிவாசலில் 1969ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிகச் சிறிய வயதிலே புனித றமழான் மாதத்தில் ஒரு சின்னப் பையன் அருமையாக சிறப்பாக தொழுகை நடத்தினார். இதனை அவதானித்த தென்னிந்திய பேரறிஞர் சேஹ் அலி ஹாபிஸ் இந்த சந்தர்ப்பத்திலே அங்கிருந்த தொழுகையாளிகள் மத்தியில் உருக்கமாகப் பேசினார். இந்த சின்னப் பையன் ஹாபிஸாக இவ்வளவு நேர்த்தியாக தலைமையேற்றுத் தொழுகை நடத்தும்போது ஏன் காத்தான்குடியிலிருந்து ஹாபிஸ்கள் உருவாகவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த வைராக்கியம்தான் காத்தான்குடியில் 1971ஆம் ஆண்டிலே முத்துவாப்பா ஆலிம் அவர்களால் அல்குர்ஆன் மனன வகுப்பு ஆரம்பிக்க வழிவகுத்ததோடு இந்த நாட்டிலே ஹாபிஸ்கள் உருவாவதாற்கு காரணமாக இருந்தது மட்டக்களப்பு பள்ளிவாசல்தான்.

ஏறாவூரிலே அல்குர்ஆனுக்கு விழா எடுக்கின்ற நிகழ்வில் நான் கலந்து கொண்டு ஏறாவூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்தான் அல்குர்ஆனை மனதில் சுமந்து முழுக் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்தவர் என்று உரையாற்றி அமர்கின்ற  பொழுதுநான் தான் அந்தச் சிறுவன் ஹாபிஸ் நஸீர் அஹமட்என்று அவர் என் முன் தோன்றி தன்னை அறிமுகப்படுத்தி நின்றது இப்பொழுதும் நெஞ்சம் நிறைந்த நினைவாய் இருக்கின்றது.

அல்குர் ஆனுக்கு விழா எடுத்த சந்தர்ப்பத்திலும் அவர் ஒரு சிறுவனாக ஒரு மூலையில் நின்று கொண்டு நிகழ்வுகளை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்திருக்கின்றார் என்பது பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கின்றது.

இது வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிது. இப்பொழுது ஆயிரக்கணக்கான ஹாபிஸ்களை நாம் உருவாக்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த விருதுகள் பாராட்டுக்கள் கௌரவங்கள் பெற வழி சமைத்திருக்கிறோம்என்றார்.








 

SHARE

Author: verified_user

0 Comments: