சுகாதார அமைச்சர் கலாநிதி ரமேஸ் பத்திரன மட் போதனா வைத்தியசாலைக்கென 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான
சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் செய்த சுகாதார அமைச்சர் வைத்திய
கலாநிதி ரமேஸ் பத்திரன அவர்கள் "முழுமையான சிகிச்சை முறை" எனும் தலைப்பில்
கிழக்கு மாகாண மட்டத்தில் சுகாதார துறைசார்ந்து நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது
தொடர்பாக மட்டக்களப்பு திராய்மடுவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததுடன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான கள விஜயத்தினையும் முன்னெடுத்திருந்தார்.
இதன்போது வைத்தியசாலையில் நிலவும் வளப் பற்றாக் குறைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்ததுடன்,
அவற்றில் மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்ட இருதயவியல் சிகிச்சை பிரிவு மற்றும் சிறுநீரக
சிகிச்சை பிரிவுகளை உள்ளடக்கிய ஐந்து மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டட தொகுதிகளின் கட்டுமான
பணிகள் 90 வீதமானவை முடிவுற்ற நிலையில் மீதமான பகுதியினை பூரணப்படுத்துவதுடன் அவற்றுக்கான
மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ள தேவையிருப்பதாக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்ஜனி அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன்
இதற்காக 300 மில்லியனிற்கு மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கும் அமைய 300 மில்லியன் நிதியினை
ஒதுக்கீடு செய்து தருவதாக இதன்போது வாக்குறுதியளித்து சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
அத்துடன் வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு வந்த இரு கனரக ஊர்திகளும் மிகப் பழமையானதாக
இருந்தமையால் அடிக்கடி திருத்த வேலைக்களுக்கு அனுப்பவேண்டியிருந்தமை தொடர்பில் கவனத்திற்
கொண்ட சுகாதார அமைச்சர் தேவையான மருந்துப்பொருட்களை தங்கு தடை இன்றி விநியோகிப்பதற்கென
புதிய கனரக ஊர்தியினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.
அத்துடன் மிக அத்தியாவசியமான CT Scan இயந்திரத்தினையும் கொள்வனவு செய்து தருவதாகவும்
இதன் போது அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார்.
மேலும் இருதயவியல் சிக்கிச்சை பிரிவிற்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக கருதப்படும்
cath lab இயந்திரம் இன்மை தொடர்பிலும் அதற்கென இப்பிரதேச மக்கள் யாழ்பாணம் முதற்கொண்டு
கொழும்பு வரை செல்வது தொடர்பிலும் தமக்கு பல முறை சுட்டிகாட்டப்பட்டுள்ளதாக இருந்தபோதிலும்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக இவ்வாண்டு அதனை கொள்வனவு செய்யமுடியாதிருப்பதாகவும்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிட்சயமாக அதனை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர்
இதன் போது வாக்குறுதி அளித்திருந்தார்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,
பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், இரா.சாணக்கியன், அலி சாகீர் மெளலானா, கிழக்கு
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டீ.ஜீ.எம்.கொஸ்தா, அமைச்சுக்களின்
செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண
பிராந்திய சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், திணைக்களங்களின்
உயரதிகாரிகள் , துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment