அழிவுகளை முன்னாயத்தமாக முறியடிக்கும் யுக்தித் திட்டமிடல் அனைத்துத் தரப்பிலும் இருக்க வேண்டும்.
காலத்துக்கு காலம் அவ்வப்போது சுழற்சியாக இடம்பெறும் இயற்கை, செயற்கை இடர், அழிவு நாச வேலைகள் என்பனவற்றுக்காக நிவாரணம் வழங்குவதும் நிவாரணத்தைப் பெறுவதும் மாத்திரம் நமது பணியாக இருக்கக் கூடாது. என தான் சமூகம் சார் வேண்டுகோளை விடுப்பதாக சுற்றுச் சூழல் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்காகப் பாடுபடும் தன்னார்வ உதவு ஊக்க அமைப்பான இளைஞர் அபிவிருத்தி அகத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.சமீபத்திய சீரற்ற வானிலை, அடை மழை பெருவெள்ளம் தொடர்பாக மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியிருப்பது குறித்து திங்ட்கிழமை (15.01.2024) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டுக் காட்டினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
பாதிக்கப்பட்ட பின்னர் அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நிவாரணம் வழங்கும் கலாசாரத்தையும், மக்கள் நிவாரணங்களைப் பெற முண்டியடிக்கும் கலாசாரத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.
அழிவுகள் இடம்பெறுவதற்கு முன்னர் அவதானமாக இருந்து அந்த அழிவுகளை முன்னாயத்தமாக முறியடிக்கும் யுக்தித் திட்டமிடல் அனைத்துத் தரப்பிலும் இருக்க வேண்டும்.
துரதிருஷ்டவசமாக முன்னாயத்தம், முன்னெச்சரிக்கை, தற்காப்பு என்பன போன்ற விடயங்களில் இன்னமும் மக்கள் தயார்படுத்தப்படாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
காலாகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்களுக்கும், அவ்வப்போது மனிதனால் உண்டாக்கப்படும் மனித நாச அழிவு வேலைகளையும் தடுக்கக் கூடிய யுக்தித் திட்டமிடல் பொறிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டு;ம். இதில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.
எல்லோரும்; என்று கூறும்போது இளைஞர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள், நிறுவனங்களைச் சார்ந்தோர்கள். பொலிஸார், சுகாதாரத் துறையினர், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்தவர்கள், மத அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதோடு முக்கியமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதில் உள்ளடங்குவார்கள்.
எல்லோருமாக ஒருங்கிணைந்தால்தான் இந்த இயற்கையைச் சீரமைத்து அது உண்டாக்கும் அபாயத்திலிருந்து வெளி வர முடியும்.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இப்பொழுது அருகி வருகிறது. இயற்கை மனிதனுக்கு வாழ்வளிக்கிறது. வாழ்வைக் கற்றுக்கொடுக்கிறது. இயற்கை இல்லை என்றால் மண்ணில் ஈரமில்லை… விளைச்சலில்லை… அறுவடையில்லை… மனித வாழ்க்கை இல்லை. ஏன் உயிரினங்களும் கூட இல்லை.
இயற்கைதான் உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் வாய்ப்பை வழங்கி வருகிறது.
இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படுகின்ற இடர் அபாயங்களைக் கண்டறிந்து சமூகத்திலும், தேசத்திலும் பாதுகாப்பு பயன்பாடு ஒன்றை உருவாக்கி பாரிய அளவில் சமூகத்தில் நின்று நிலைக்கக் கூடிய அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
இடர்கள் எல்லா அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பாரதூரமான அச்சுறுத்தல்களை நிலைக்கச் செய்கின்றது. அழிவாக உயிர்ப்பலிகளும், ஏனைய சேதங்களும் ஏற்படுகின்றன. சிலபோது பௌதீக, சூழல் பொருளாதார நாசங்களும் உண்டாகின்றன. அவை சமூக உறுதிப்பாட்டினை வலுவிழக்கச் செய்வதோடு இடர்களை எதிர்கொண்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிப்படைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினமானதொன்றாக மாறிவிட்டிருப்பதையே கடந்த கால அனுபவங்களில் கண்டிருக்கின்றோம்.
எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான, பழுதற்ற உலகை விட்டுச் செல்வோம் என்ற எண்ணத்துடன் ஆர்வலர்கள் அங்கலாய்க்கிறார்கள் ஆதங்கப்படுகின்றார்கள். அதுவே முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment