6 Dec 2023

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்.

SHARE


பெண்கள்
சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்.

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான முன்னாயத்த பரிந்துரைப்பு வேலைத் திட்டமும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளும் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி  தலைமையில் புதனன்று 06.12.2023 நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் .எஸ். அருள்ராஜ், திருகோணமலை பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எம். நளினி, திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுவர்ணா தீபானி, பொலிஸ்  போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எம். றபீக், உட்பட மாவட்ட, பிரதேச செயலகங்களின் மகளிர் அபிவிருத்தி அலுவலர்கள், செயற்பாட்டாளர்கள்இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொண்டனர்.

பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக வன்முறைகள், இம்சைகள் வெறுப்புணர்வூட்டக் கூடிய சம்பவங்கள் இடம்பெறும்பொழுது அதுபற்றி பொதுமக்கள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தும் இலகு வழிமுறையிலமைந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் கொண்ட சுவரொட்டிகள் மக்கள் கூடும் பொது இடங்களிலும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களிலும் புகையிரத நிலையத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டன.

வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம், வன்முறைகளற்ற வீடுகளையும் சமூகத்தையும் உருவாக்குவோம், பொது இடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவது பாதிக்கப்பட்டோரின் உரிமை, பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாத்து அவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைவோம்”  ஆகிய தொனிப் பொருள்களில் அமைந்த அவசர முறைப்பாட்டு இலங்கங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக பொது இடங்களில் ஒட்டப்பட்டன.

அத்துடன், பெண்கள் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், கடத்தல்கள், கொடுமைப்படுத்தல்கள், சித்திரவதைகள், சுரண்டல்கள், மனித உரிமை மீறல்கள், இளவயதுத் திருமணம், பாதுகாப்பின்றியும் பராமரிப்பின்றியும் கைவிடல் உள்ளிட்ட பல்வகைப் பாதிப்புக்கள் இடம்பெற்றால் அவற்றைத் தடுப்பதற்கும் பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பதற்கும் ஏற்ற வகையில் உதவிக்கு அழைக்கக் கூடிய விவர இலக்கங்களைக் கொண்ட பெரிய காட்சிப் படுத்தல் பதாதைகளும் பொது இடங்களில் நிறுவப்பட்டன.

அவற்றில் பிரதேசந மட்ட சட்ட உதவி ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், வைத்தியசாலை உள்ளிட்ட 16 பிரிவுகளின் அவசர உதவி அழைப்பிலக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன்  சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் இச்செயல் திட்டத்தை அமுல்படுத்துகிறது.










 

SHARE

Author: verified_user

0 Comments: