நடைமுறையில் காதி நீதிமன்றங்கள் அனைத்துமே மிகவும் குறைந்த வளங்களோடு செயல்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன்.
திருமணத்திற்குப் பின்னரான குடும்ப வாழ்வில் விவாகரத்து உட்பட இன்ன பிற காரணங்களால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க சமூக பொறுப்புக் கூறும் வகையில் காதி நீதிமன்றங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான சமூகப்பங்களிப்பைத் திட்டமிடும் மாநாடு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தலைமையில் மாநாடு இடம்பெற்றது.
நிகழ்வில் சட்டத்தரணிகள், காதி நீதிமன்ற நீதிவான்கள், அந்நீதிமன்றங்களின் ஜுரிகள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், தற்போதைய பிரதேச செயலாளர்கள், மேலதிக மாவட்டப் பதிவாளர்கள், பெண்கள் அபிவிருத்தி, சிறுவர் பாதுகாப்பு, கலாச்சார உத்திதியோகத்தர்கள், உளவளத் துணையாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், பள்ளிவாசல் சம்மேளனங்களின் பிரதிநிதிகள், ஊர்ப் பிரமுகர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன், நடைமுறையில் காதி நீதிமன்றங்கள் அனைத்துமே மிகவும் குறைந்த வளங்களோடு செயல்பட்டு வருகின்றன. அந்நீதிமன்றங்கள் நிருவாகத்தை மேற்கொள்வதற்கு ஆளணி வசதி எதுவுமே இல்லை என்பதை யாருமே வெளிக் கொண்டு வரவில்லை. அதேவேளை பிரதேச செயலகங்களிலே தேவைக்கு மேலதிகமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள், எனவே இந்த காதி நீதிமன்ற நிருவாகக் கட்டமைப்பை சீர்செய்வதற்கும் நிருவாக நடவடிக்கைகளை இலகுபடுத்தவதற்கும் மாவட்ட செயலகம் வாயிலாக செய்யக் கூடிய அனைத்து ஏற்ற ஒழுங்குகளையும்; செய்து தர முடியும் என்பதை உறுதியளிப்பதோடு, இந்த விடயத்திலே சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பாரும் இணைந்து செயற்பட்டால் சமூகத்தில் பாதிப்புக்களைத் தவிர்த்து வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படும்” என்றார்.
திருமணத்திற்குப் பின்னரான குடும்ப வாழ்வில் முரண்பாடுகள் ஏற்பட்டு விட்டால், பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குப் உட்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நீதி வேண்டி காதி நீதிமன்றங்களை நாடுகின்றனர்.
இவ்வாறான பெண்களும் அவர்களது குழந்தைகளினதும் வாழ்வாதாரம், மன நிலை, எதிர்காலம் உள்ளிட்ட பல வாழ்வியல் அம்சங்கள் மேலும் மேலும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது. இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு காதி நீதிமன்றங்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான சமூகப்பங்களிப்பைத் திட்டமிடும் வகையில் இத்தகைய சமூக ஒருங்கிணைந்த செயல்பாட்டு மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர் நிஹால் அஹமட் தெரிவித்தார்.
நிகழ்வில் காதி நீதிவான் மற்றும் காதி நீதிமன்ற நிருவாக நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு காதி நீதிச் சேவையை வினைத்திறனுள்ளதாகவும் இலகுவானதாகவும் ஆக்க அம்பாறை மாவட்டத்தில் காதி நீதிமன்றங்களில் வழக்குகள் ஆவணப்படுத்தலுக்குத் தேவையான 8000 கோவைகளும் படிவங்களும் காதி நீதிமன்ற நீதிவான்களிடம் கையளிக்கப்பட்டன.
அத்துடன் நிகழ்வில் பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்புத் திட்டத்தில் சமூக சேவையாற்றிவரும் சமூகத் தொண்டர்களைப் பாராட்டி சிறந்த செயற்பாட்டாளர் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment