அடிமட்ட மக்களை சமூக பொருளாதார கல்வி கட்டமைப்பு ரீதியில் வலுப்படுத்தும் சேவைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக் கிடைக்கும் -திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எஸ். அருள்ராஜ்.
அடிமட்ட சமுதாய மக்களை சமூக, பொருளாதார, கல்வி, கட்டமைப்பு ரீதியில் வலுப்படுத்தும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அர்ப்பணிப்புடனான சேவைக்கு தொடர்ந்தும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராஜ் தெரிவித்தார்.
திருகோணமலை கிராமிய சமூக பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வருடாந்தக் கூட்டுறவு விழா திங்கட்கிழமை (11.12.2023) கலாசார மண்டபத்தில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மூதூர், சேருநுவர, வெருகல், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வ அமைப்பினால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்கி வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களின் கிராமிய சமூக பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கு பற்றினர்.
அத்துடன் அவர்களது உற்பத்திப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததோடு சிறந்த கூட்டுறவுச் செயற்பாட்டாளர்களுக்கும் கூட்டுறவு அமைப்புக்களுக்கும் விருதுகளும் நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அங்கு தொடர்ந்து பேசிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அருள்ராஜ், அடி மட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தில் கரிசனை கொண்டுள்ள வீ பெக்ற் நிறுவனமும் திட்டத்தை அமுலாக்கம் செய்யும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனமும் பாராட்டுக்கும் நன்றிக்குமுரியவை. அதனால் அந்நிறுவனங்களது அர்ப்பணிப்புடனான மக்கள் சேவைக்கு எமது மாவட்ட, பிரதேச செயலகங்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும்.” என்றார்.
நிகழ்வில் உரையாற்றிய சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன், சிறந்த வெளிப்படைத்தன்மையுடனான அர்ப்பணிப்புள்ள சேவை செய்து வரும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்துடன் கடந்த 10 வருடங்களாகப் பணியாற்றி வருகின்றோம். அவர்களின் சிறந்த வெளிப்படைத் தன்மையான திட்ட அமுலாக்கம் மற்றும் நிருவாகத்தின் கணப்பீட்டில் தொடர்ந்தும் அந்த நிறுவனத்துடன் பணியாற்ற முடிவெடுத்துள்ளோம். இது மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்” என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான என். மதிவண்ணன், மாகாண நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவை ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ், கமநல அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ். ஜெயநாத் உட்பட கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் இளைஞர் அபிவிருத்தி அகம் இணைப்பாளர் ரீ. திலீப்குமார் அந்நிறுவன அலுவலர்கள், பயனாளிகளான கிராமிய சமூக பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் சமூக பொருளாதார அபிவிருத்திச் செயல்திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது.
0 Comments:
Post a Comment