பாரம்பரியத்தை மீட்டெடுத்து சமூக ஐக்கியத்துடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க அணி திரள வேண்டும்.
பாரம்பரியத்தை மீட்டெடுத்து சமூக ஐக்கியத்துடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க அணி திரள வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு அறைகூவல்.
பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுப்பதற்கு நாம் சமூகமாக ஒன்றிணைந்து செயற்படுவது இன்றியமையாதது என சேர்க்கிள் (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இளம் பெண்களை கபடி விளையாட்டில் ஈடுபடுத்தி களிப்புறச் செய்யும் நிகழ்வு மட்டக்களப்பு - கோரகல்லிமடுவில் சனிக்கிழமை(25.11.2023) இடம்பெற்றது.
பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் நோக்கத்தை அடைவதற்குத் தோதாக இளையோரிடத்தில் ஒருங்கிணைந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்கு உகந்த கருவியாக இந்த பாரம்பரிய கிராமிய மணம் கமழும் கபடி விளையாட்டு ஒன்று கூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு நிகழ்வை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி, பாரம்பரியத்தை மீட்டெடுத்து சமூக ஐக்கியத்துடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க நாம் இன மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்.
கிராமிய மட்ட இளைஞர் யுவதிகளுக்கிடையே முற்போக்கு சிந்தனைச் சக்தியை ஊக்குவிப்பதற்கான ஒரு வழிகாட்டலாக பாரம்பரிய விளையாட்டுக்களை நாம் காண்கின்றோம்.
வழக்கொழிந்து போகும் நிலையிலுள்ள பாரம்பரிய கபடி போன்ற விளையாட்டுக்களை உயிரூட்டி புத்துணர்வும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும் கருவியாகப் பயன்படுத்த முடியும்.
இதன்மூலம் பல்வேறு வகைப் பாதிப்புக்களால் இன்னல்களுக்குள்ளாகியிருக்கும் தமிழ் முஸ்லிம் மகளிரையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து இதனூடாக பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகளைத் தடுப்பதே நோக்கமாகும்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
சமூகத்தில் இத்தகைய விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமானால் குறிப்பாக கட்டிளம் பருவத்தினரிடையே விசாலமான முற்போக்குச் சிந்தனை உருவாகி அதன்மூலம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் சமூகப் பங்களிப்பு இடம்பெற வேண்டும்.
எதிர்காலத் தலைவர்களான இளையோர் சமூகத்தினர் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சக்தியைப் பெற்றிருக்க வேண்டும். அதன் மூலம் வன்முறைகளை இல்லாதொழிக்கும் உறுதிப்பாட்டை அடைந்து கொள்ள முடியும்.
பல தரப்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டுப் போயுள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களிலுள்ள பெண்கள் யுவதிகள் ஓரணியில் திரண்டு பலமான ஒற்றுமையுடன் குரலெழுப்பினால் வன்முறைகளற்ற உலகத்தை சிருஷ்டிக்க முடியும்” என்றார்.
சேர்க்கிள் அமைப்பினால் புத்துணர்வு விளையாட்டுக்கள் கோரகல்லிமடுவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பாரம்பரிய விளையாட்டுக்களை உயிர்ப்பிக்கும் விளையாட்டுப் பிரியர்கள் இளைஞர் யுவதிகள் சுமார் 200 பேர் பங்குபற்றினர்.
0 Comments:
Post a Comment