வைத்தியர் ஜலீலா முஸம்மிலின் “தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூல் வெளியிட்டு வைப்பு.
வைத்தியர் ஜலீலா முஸம்மில் எழுதிய “தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு சனிக்கிழமை 28.10.2023 இரவு ஏறாவூர் வாவிக்கரையில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.எம். மஹ்பூழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில், மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரி போதனாசிரியர் கே. பாத்திமா ஹஸ்னா, மருதமுனை மல்ஹருல் ஷம்ஸ் மகாவித்தியாலய அதிபர் றிப்கா அன்சார் ஆகியோருட்பட இன்னும் பல அதிதிகளும் பிரமுகர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
நூல் நயந்துரையை ஓய்வு நிலை கோட்டக் கல்வி அதிகாரி எஸ். அப்துல் றஸாக், நூல் ரசனையை, மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரி போதனாசிரியர் கே. பாத்திமா ஹஸ்னா ஆகியோர் நிகழ்த்தினர்.
மருத்துவத் துறையில் வைத்திய அத்தியட்சகராகப் பணிபுரியும் ஜலீலா, இலக்கியத் துறையிலும் கூடுதலான ஈடுபாட்டுடன் பயணித்து வருகிறார். சுமார் 40இற்கு மேற்பட்ட இவரது மருத்துவ, இலக்கிய ஆக்கங்கள் இலங்கை இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.
அதேவேளை இவர் தனது இலக்கிய மருத்துவ படைப்பாக்கங்களுக்காக பல்வேறுபட்ட விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
இவரது “சிறகு முளைத்த மீன்" எனும் முதற்கவிதை நூல் தமிழ்நாடு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எழிலினிப் பதிப்பகத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் துயில் நதிப் பூக்கள், மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், தன்முனைக் கவிதை நூல், வலிமை மிகு எண்ணங்கள், தன்னம்பிக்கை கட்டுரைத் தொகுப்பு நூல், தன்முனை ஆய்வு நூல், வளரி 1001 கவிதைகள் ஆகிய இன்னும் பல படைப்பாக்கங்களை நூலாக வெளியிட தான் உத்தேசித்துள்ளதாக எழுத்தாளர் வைத்தியர் ஜலீலா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment