27 Oct 2023

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாரண மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு.

SHARE

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாரண மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு.

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையிலான 30 கிலோமீட்டர் கடலை நீந்திக் கடந்து சாதனை நிலைநாட்டியுள்ள மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்களுக்குமான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு திங்கட்கிழமை (23.10.2023) இரவு மட்டக்களப்பு (சிங்கிங் பிஸ்) சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கே.கே.சண்முகம் அறக்கட்டளையின் அனுசரணையில் அதன் ஸ்தாபகர் ச.சண்முகேசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வரவேற்பு கௌரவிப்பு நிகழ்வில், சாதனை புரிந்த மாணவர்களுக்கு அரசியல்வாதிகளும், வர்த்தக பிரமுகர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகளும் நீச்சல் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), மட்.புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப், முன்னாள் அதிபர் பயஸ் ஆனந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எஸ்.ரஞ்சிதமூர்த்தி,  மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் உப தலைவர் கலீல் ஹாஜியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர், சாரண சங்கத்தினர், லயன்ஸ் கழகம், ரோட்டறி கழகம், லியோ கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டிருந்தனர்.

நிகழ்வின் வரவேற்புரையினை மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன் நிகழ்த்தினார். தலைமையுரையினை புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப் அவர்களும், தமது பிள்ளைகளின் சாதனைப் பயணம் குறித்த கருத்து, நன்றியுரையினையும் சாதனை புரிந்த மாணவர்களின் தந்தையான புளோரிங்டன் வழங்கினார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசியப் பாடசாலையின் சிரேஷ்ட சாரண மாணவர்களான புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகிய மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.10.2023) அதிகாலை ஒரு மணியளவில் ஆரம்பித்த தமது சாதனைப் பயணத்தினை முற்பகல் 10.30 மணியளவில் நிறைவு செய்திருந்தனர்.

கடலில் பிளாஸ்ரிக் பொருட்கள் கலப்பதனை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நீச்சல் முயற்சியானது பாக்கு நீரிணையைக் கடந்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசியச் சாதனையை முறியடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், புனித மிக்கேல் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளின் ஒரு அங்கமாகவும் இது அமைந்திருந்தது.

இவ் நீச்சல் முயற்சியானது, இளம் மாணவர்கள் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்தமை, மூவர் இணைந்து அத்துடன் மூன்று சாரண மாணவர்கள் நீச்சலில் ஈடுபட்டமை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஈடுபட்டமை உள்ளிட்ட சாதனைகளைத் தட்டிக்கொண்டுள்ளதுடன், ஆசியச் சாதனையின் இரண்டாவது இடத்தினையும் இந்த நீச்சல் முயற்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன்  சில மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து ஏற்கனவே சாதனை படைத்துள்ள நிலையில் இம் மூன்று மாணவர்களும் இணைந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.இம் மூன்று மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தம் தமிழ் மாணவர்களது சாதனையைப் பாராட்டும் வகையில் தேசிய ரீதியிலும் சர்வதேசிய ரீதியிலும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன.















 

SHARE

Author: verified_user

0 Comments: