27 Oct 2023

வைத்தியசாலைகளில் வழங்கப்பட்ட உணவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும்.

SHARE

வைத்தியசாலைகளில் வழங்கப்பட்ட உணவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் மருத்துவ துறையும் , கல்வித்துறையும் இலவசமாக வழங்கப்படுவதே இலங்கையில் இருக்கின்ற மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.  அதனடிப்படையில் யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாணசபை அதிகாரத்திற்குட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வந்த உணவுகள் கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தூரப்பிரதேசங்களில் இருந்து  வைத்திய சேவையை பெறுவதற்காக வருகை தந்து வைத்தியரின் ஆலோசனைகளுக்கு அமைய விடுதிகளில்  அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள்  காலை , மதியம், இரவுவேளைகளில் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை தொடர்பில் மக்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் வைத்திய சாலைக்கான களவிஜயத்தினை வெள்ளிக்கிழமை (27.10.2023) முன்னெடுத்திருந்தார்.

இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே  உணவினை கொண்டு வர வேண்டிய சூழல் நிலவுவதாகவும், குறிப்பாக தாந்தாமலை உள்ளிட்ட தூரப் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் இது தொடர்பில் பெரும் அசௌகரியங்கள் எதிர்நோக்குவதாகவும் இதனால் வைத்திய சேவையினை பெற்றுக்கொள்ள முடியாத நிர்ப்பந்தம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த வைத்தியசாலை விடுதியின் நிலைமை தொடர்பிலும், ஊழியர் பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்து மிக விரைவில் அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக  குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி விஜயத்தின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதேசக்குழு தலைவர் காமராஜ், செயலாளர் குகநாதன், பிரதேச தொழிற்சங்க செயலாளர் சபேசன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







 

SHARE

Author: verified_user

0 Comments: