கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தால் குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கல் வேலைத்திட்டம்.
ஈழத்திலே பஞ்ச ஈச்சரங்களில்ஒன்றாக மிளிரும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையால் ஆலயத்திற்கு நேர்த்திக் கடனாக கிடைக்கப் பெற்ற பசுக்களை மாவட்டத்திலுள்ள வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் “குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கல்” எனும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக முதற்கட்டமாக மாவட்டத்திலுள்ள போரதீவுப்பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் பற்று, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அவ்வவ் பிரதேச செயலாளர்கள் ஊடாக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட தலா இரண்டு குடும்பங்கள் வீதம் மொத்தமாக ஆறு பயனாளிகளுக்கு பசுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பசுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(07.10.2023) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயமுன்றலில் இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் வண்ணக்கர் இ.மேகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள், செயலாளர் வண்ணக்கர் சி.கங்காதரன், பொருளாளர் வண்ணக்கர் ச.கோகுலகிருஸ்னன், தேசமகா சபை உறுப்பினர்கள், குடிசார்ந்த தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்களால் வழங்கப்படும் காணிக்கைகள், நன்கொடைகள், நேர்த்திக்கடனாக வழங்கப்படுபவைகளையெல்லாம் வைத்துக் கொண்டு இவ்வாறு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடையங்களை ஆலய நிருவாகத்தினர் முன்னின்ற செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment