10 Aug 2023

கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் குடும்பமாக இயங்கினால் இந்தத் திணைக்களத்தை வெற்றியை நோக்கி நகர்த்தலாம் - மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சிவலிங்கம்.

SHARE

கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் குடும்பமாக இயங்கினால் இந்தத் திணைக்களத்தை வெற்றியை நோக்கி நகர்த்தலாம் - மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சிவலிங்கம்.கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் குடும்பமாக ஒரே நோக்கத்தோடு இயங்கினால் இந்தத் திணைக்களத்தை வெற்றியை நோக்கி நகர்த்தலாம் என கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் என். சிவலிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு நாள் பயிற்சிச் செயலமர்வு இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில்  செவ்வாய் புதன்  (8,9-08.2023) ஆகிய இரு தினங்களிலும் பயிற்சிச் செயலமர்வு இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் கூட்டுறவுத் திணைக்கள அதிகாரிகள் பங்கு பற்றினர். வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பயிற்சிச் செயலமர்வில் தொடர்ந்து உரையாற்றிய சிவலிங்கம், நீண்டகால அடிப்படையில் திட்டமிடப்பட்ட இந்தப் பயிற்சிநெறி மிகவும் பெறுமதி வாய்ந்தது. எந்தவொரு விடயத்திற்கும் முன் கூட்டிய திட்டமிடல் மிக முக்கியம். ஒரு பயிற்சி நெறிக்கு முழுமையான அவதானத்தைச் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

கிழக்கிலுள்ள 45 கூட்டுறவுச் சங்கங்களுக்கும் நிறைந்த வசதிகள் உள்ளன. ஆயினும் ஏன் அவை திறம்பட இயங்க முடியவில்லை. நஷ்டத்தில் ஏன் இயங்க வேண்டும்.

கூட்டுறவுச் சங்கத்தைப் பற்றி வெளியில் நிலவும் அபிப்பிராயத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும். கூட்டுறவுத் துறைக்கு உள்ள ஒரேயொரு சிறந்த ஏற்பாடு 46/1எனும் ஷரத்தாகும்.

இனிவரும் காலங்களில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக இயங்கும் என்று நம்புவோம். நாம் பதவியில் இருக்கும் காலங்களில் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

கூட்டுறவு சேவையைப் பொறுத்தவரையில் நாமெல்லோரும் ஒரே குடும்பம் அதனடிப்படையில் வெளியில் விமர்சிக்கும் நிலைமைக்கு நாம் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.” என்றார்

இந்நிகழ்வில் மாவட்டங்களின் கூட்டுறவு அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின்  இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.












 

SHARE

Author: verified_user

0 Comments: