அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை மக்களின் நன்மதிப்பை பெற்ற தொழிலாளர் திலகம் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவரது நினைவு பெருவிழா
(தேவதாஸ் சவரிமுத்து சிரேஷ்ட ஊடக இணைப்பாளர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்)
கொள்கையில் தெளிவு! நெஞ்சிலே துணிவு! செயலிலே வேகம்!
ஓயாத உழைப்பு! தளராத நம்பிக்கை! இத்தகைய ஐந்து அம்சங்களைக்
கொண்டு தொழிலாளர்களுக்காக போராடப் புறப்பட்டவர் தொழிற்சங்க மாவீரர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.
மலையக மக்களின் பெரும் சொத்தாகவும், மலையக அரசியல் தொழிற்சங்க சிருஷ்டி கர்த்தாவாகவும் விளங்கியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை மக்களின் நன்மதிப்பையும், சர்வதேச ம்ட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உன்னத தலைவன் என்பதை நினைவு கூராமல் இருந்து விட முடியாது. இன்று அவரது (30.08.2023) 110வது ஜனனத்தில் அவர் மக்களுக்காக ஆற்றிய சேவைகளையும், விட்டுச்;சென்ற பணிகளையும் எண்ணிப் பார்க்கின்றோம்.
மலையக பெருந்தோட்டத்துறை மக்கள் அன்றைய அரசாங்கங்களாளும் தோட்ட நிர்வாகங்கள், கம்பனிகளாலும், மனிதாபிமானமற்ற முறையில் ஆட்டி படைக்கப்பட்டார்கள். பாகுபாடுகள், பாராபட்சங்கள், ஒடுக்குமுறைகள், பழிவாங்கல், ஆகியவை இந்த இரு தரப்புகளாலும் கட்டவிழ்க்கப்பட்டன.
ஆங்காங்கே கண்டனக் கூட்டங்களும், விழிப்புணர்ச்சிக் கூட்டங்களும் பரவலாக நடத்தப்பட்டன. இதேவேளை பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் திடீர் திடீர் என வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கும,; தோட்டங்களில் இருந்து விரட்டப்படுவதற்கும,; அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கும, தொழிலாளர் சமூகம் நசுக்கப்படுவதற்கும், கடும் ஆட்சேபனைகள் தெரிவித்து இந்த காலகட்டங்களில் பல்வேறு வேலை நிறுத்தப்போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவற்றில் குறிப்பிடத்தக்க உருளைவள்ளிப் போராட்டம், மடக்கும்புர போராட்டம், மடுல்கலை கலாபொக்க போராட்டம், ஆகியவை இவற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன.
•தோட்டத் தொழிலாளர்களின் நிர்ணய சம்பள கோட்பாடு
மலையக பெருந்தோட்டங்கள் காலித்துவ காலத்தில் ஆங்கிலேயரின் நிர்வாகத்தின் கீழும் நிறுவனங்களின் கீழும் செயல்பட்டன. சுதேசிகளுடைய நிர்வாகங்களுக்கு கீழும் இயங்கி வந்துள்ளன. ஆனால் அக்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்படாத நிரந்தரமற்ற சம்பளமே வழங்கப்பட்டு வந்தது.
தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்ட பின்னரும் “உசவசம, ஜனவசம” ஆகிய அரச நிறுவனங்களுக்கு கீழ் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. இக்காலகட்டங்களில் கூட தொழிவாளர்களது மாத சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் தனியார்துறையாக இருந்த போதும், அரசதுறையாக இருந்த போதும், காத்திரமான போராட்டஙகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. எனினும் காரியம் கைகூடவில்லை.
வரட்சி காலத்திலும், மழை காலத்திலும், சம்பளத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அதேவேளை ஒரு நாள் பேருக்கு எடுக்கப்பட வேண்டிய கொழுந்தின் எடையிலும் ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. ஒரு நாள் பேருக்கு 25 தொடக்கம் 30 இறாத்தல் கொழுந்து பறிக்கப்பட வேண்டும் என கொண்டு வந்தார்கள். இதே போன்று பல தோட்டங்களிலும் ஒரு நாள் பேருக்கு எடுக்கப்பட வேண்டிய எடையை ஒரே விதமாக கொண்டிருக்கப்படவில்லை. அவற்றில் சில தோட்டங்களில் ஒரு நாள் பேருக்கு கூடுதலான கொழுந்தை பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் நிர்ப்பந்தித்தது. குறைவாக பறிக்கப்பட்ட கொழுந்திற்கு “அரை பேர் போடப்பட்டது”.தோட்ட நிர்வாகங்கள் ஒரு நாள் பேருக்கு கொழுந்தின் எடையை தங்களின் இஷ்டப்படி நிர்ணயித்தின் விளைவாக பலர் கஷ்டப்பட்டும் முழுப்பயனை அடையவில்லை. கடைசி காலத்தில் தேயிலைகள் கருகி கொழுந்துகள் குறைந்து விடுகின்றன. இந்த சமயத்தில் அதே நிர்ணயிக்கப்பட்ட எடையை எதிர்பார்க்க முடியாது. அதற்காக தோட்ட நிர்வாகங்கள் கொழுந்தின் எடையில் கடும் வரட்சிக்காலத்தில் ஒரு மாற்றத்தை புகுத்தவில்லை.
இந்த விதமான தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகளின் மத்தியில் அவர்களின் விமோசனம் அளிக்கும் திட்டமாகவும், தொழிலாளர்களுக்கு ஒரு நியாயபூர்வமான ஒரு சம்பளத்தினை கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் தலைமையில் சம்பள கூட்டு உடன்படிக்கை முதலாவது கூட்டு ஒப்பந்தம் 1967ம் ஆண்டும், இரண்டாவது தடவையாக 1992ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
இந்த கூட்டு உடன்படிக்கையானது தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். இதனை இழந்து விட்டால் பல வழிகளிலும் தொழிலாளர்கள் ஊதியங்களைப் பொறுத்தமட்டில் வஞ்சிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும், ஒடுக்கப்பட்டும் விடுவார்கள். இதை தொழிற்சங்கங்களுக்குள் பிரவேசிக்கும் எவரும் மறந்துவிடமுடியாது.
கூட்டு ஒப்பந்தத்தின் செயற்பாட்டால் நிர்வாகங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இல்லையேல் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பழிவாங்கப்பட்டிருப்பார்கள். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் சாதூரியத்தாலும், அணுகுமுறையாலும் தான் தொழிலாளர்களின ஒட்டுமொத்தப்பலம் தோட்ட நிர்வாகங்களுக்கும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இந்த பலத்துக்கு அஞ்சியே முதலாளிமார் சம்மேளனம், தோட்டக்கம்பனிகள், நிர்வாகங்கள் சமபள உயர்வுகளை உயர்த்துவதற்கு முன் வருகின்றன இது தொழிலாளர்களுக்கு ஒரு பிடிமானமாகும். – 2 -
இதற்குப் பின்னதாக இந்த நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டன. காலத்தின் நிர்பந்தத்தால், ஏற்பட்ட இந்த மாற்றங்களின் விளைவாக அமரர் சௌமியமூர்;த்தி தொண்டமான் நியமன அங்கத்தவராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மலையக தமிழர்களின் ஒரு பகுதியினருக்கு இலங்கை பிரஜாவுரிமையும், மற்றொரு பகுதியினருக்கு இந்திய பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் இலங்கை வாக்குரிமை பெற்ற மக்களின் சார்பில் இ.தொ.கா அரசியல் பிரிவு தேர்தல் களத்தில் குதித்து பல வெற்றிகளை பெற்று வந்துள்ளது.
இன்று மலையக தமிழர்களும், அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், மாகாணசபை அமைச்சர்களாவும், மாகாணசபை, பிரதேசசபை, உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவற்றுக்கெல்லாம் முன்னுதாரணமாக மலையகத்தைப் பொறுத்தமட்டில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானே இலங்கையில் முதன் முறையாகவும் அமைச்சராக விளங்கினார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இ.தொ.கா தலைவராக இருந்த போதும் உலகத் தலைவர்கள் சர்வதேச தொழிற்சங்க பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பெருந்தோட்டத்துறை மக்களின் கஷ்டங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்தி இவர்களது மேம்பாட்டிற்காக சர்வதேச மட்டத்தில் குரல் எழுப்பி வந்துள்ளார்.
அமரர் தொண்டமானின் அரசியல் வாழ்க்கை
---------------------------------------------------------------------
•1960ல் பாராளுமன்ற நியமன அங்கத்தவரானார்.
•1965லும் மீண்டும் பாராளுமன்றத்தின் நியமன அங்கத்துவம் கிடைக்கப் பெற்றது.
•1977ல் நுவரெலியா - மஸ்கெலியா பல அங்கத்தவர் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
•1978ல் கிராமிய கைத்தொழில் அமைச்சராக பதவி பிரமானம் செய்து கொண்டார்.
•1989ல் புடவை கைத்தொழில் அமைச்சராக பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
•1990ல் உல்லாச பிரயாண கைத்தொழில் அமைச்சரானார்.
•1994ல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்தவரானார்.
•1994ல் கால்நடை அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
•1995ல் கால்நடை அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக 1999 வரையிலும் பதவி வகித்தார்.
•1999.10.30ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்
•2001.08.30ல் தேசிய தலைவர்கள் வரிசையில் அமரருக்கு உருவச்சிலை பழைய பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியல் நிறுவப்பட்டது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட அமைப்புகள்
தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் - கொழும்பு
தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் - ஹட்டன்
தொண்டமான் கலாச்சார மண்டபம் - இறம்பொடை, நுவரெலியா
தொண்டமான் விளையாட்டு அரங்கு - நோர்வூட்
ஆகியன மூலம் மலையக மக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. அமரர் சௌமயமூர்த்தி தொண்டமான் அவர்களின் 110வது பிறந்த தினத்தை நினைவு கூருவதில் நாமும், மலையகமும், மலையக மக்களும் அவரது பணிகளை நினைத்துப் பார்ப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். அமரருக்கு எமது நிறைவான அஞ்சலியை செலுத்துகின்றோம்.
0 Comments:
Post a Comment