தமிழரசு கட்சி ஆதரவளித்த நல்லாட்சி காலத்திலேயே அதிகப்படியான தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது-பூ.பிரசாந்தன்.
இலங்கையின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு. செயற்பட்டு வருகின்றது. அதன்படி யுவநாதன் என்பவர் தற்போது அம்பாறை மாவட்டத்திற்கு இடம் செய்யப்பட்டுள்ளார். உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை(19.07.2023) மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எமது கட்சியின் பிரதிநிதிகளை கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை பிரதிநிதிகளாக நியமிப்பதற்கு எது வித சட்டங்களும் அங்கு இல்லை. அன்று தாக்கப்பட்ட எமது கட்சியின் ஆதரவாளர் யுத்த காலத்திற்கு முன்பிருந்தே அவர் தனியார் பஸ் நடத்துனராக செயல்பட்டு வருகின்றார். சாணக்கியன் யுத்த காலத்தில் நாட்டில் இல்லாத காரணத்தினால் அவருக்கு இவை எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரிகளை மட்டும் இங்கு பேசுமாறும் கட்சியை இழுத்து சம்பந்தப்படுத்தி பேசவேண்டாம் என்றும் அவர் தெரிவித்த போது தனது பொய்கள் வெளிவராமல் தடுப்பதற்காக கட்சியின் ஆதரவாளர்களை வைத்து இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்தை கருத்தால் வெல்ல முடியாமல் வன்முறை கலாச்சாரத்தை ஏவி விடுவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இவ்வாறான விடயங்களை செய்வதற்கு மக்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை எனவே மக்கள் இதனை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழரசு கட்சி ஆதரவளித்த நல்லாட்சி காலத்திலேயே அதிகப்படியான தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனை மறைப்பதற்காகவே இவ்வாறான கேவலமான செயல்களை இவர் மேற்கொண்டு வருகிறார். எமது கட்சிக்கு எந்தவித மதுபான சாலையோ தனியார் போக்குவரத்து அனுமதியோ எமக்கில்லை.
சாணக்கியன் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். அவருக்குத் தெரியாதா தனியார் போக்குவரத்து வாகனங்களின் அனுமதிபற்றி இப்போதுதான் ஏதோ புதிதாக வந்து அரசியல் நாடகத்தினை அரங்கேற்றுகின்றார். இவ்வாறான செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிப்பதோடு. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அரசியலுக்காக பொய்யான கருத்துக்களை தெரிவிப்பதை எமது கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்,
0 Comments:
Post a Comment