பிளாஸ்ரிக்கையும் நெகிழிப் பொருட்களையும் பாவிக்காதிருக்க கிராம மக்கள் உறுதிமொழி.
பிளாஸ்ரிக் பொருட்களினாலும் நெகிழிப் (பொலித்தீன்) பொருட்களினாலும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மிக மோசமான பாதிப்புக்களைத் தவிர்க்கும் முகமாக அப்பொருட்களைத் தமது அன்றாடப் பாவனையில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு கிராம மக்கள் உறுதிபூண்டிருப்பதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் முகமாக மட்டக்களப்பு வாகரைப் பிரதேச கடற்கரையோரங்களில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
வாகரை பால்சேனை கடற்கரையோரத்தில் பிளாஸ்ரிக் உட்பட நெகழிகளையும் இன்னும் பிற உக்காத பொருட்களையும் திண்மக் கழிவுகளையும் அகற்றி கடற்கரையோரத்தைத் துப்புரவு செய்யும் மக்கள் விழிப்புணர்வு சிரமதானப் பணியின் தொடர் நிகழ்வு செவ்வாயன்றும் 06.06.2023 இடம்பெற்றது.
பால்சேனை, நாகபுரம் ஆகிய கிரமங்களின் மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கடற்கரையோர சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அங்கு விழிப்புணர்வூட்டும் கடற்கரையோர துப்புரவுப் பணிகளை ஆரம்பித்து வைத்து மேலும் உரையாற்றிய இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் திலீப்குமார் “நாம் ஒவ்வொருவரும் எங்களது வீடுகளில் இருந்து சுற்றுச் சூழலுக்கு மிக மோசமான பாதிப்புக்களைக் கொண்டு வரும் பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையை நிறுத்துகின்றோமோ அந்த நிமிடத்திலிருந்தே நாம் நம்மையும் நாம் வாழும் சூழலையும் இயற்கையையும் இன்ன பிற உயிர்களையும் பாதுகாக்கின்றோம் என்று அர்த்தமாகும்.
எனவே, எமது வீடுகளிலிருந்தே சூழலுக்கு நாசம் ஏற்படுத்தும் பொலித்தீன் பிளாஸ்ரிக் தடை அமுல்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் எமது எதிர்காலம், ஆரோக்கியம், இயற்கை வளம், உயிர்ப் பல்வகைத் தன்மை பாதுகாக்கப்படும்” என்றார்.
வீஎபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிராம பொதுமக்களால் கடற்கரையோரங்களில் கிடந்த பொலித்தீன்களும் பிளாஸ்ரிக் கழிவுகளும் அகற்றப்பட்டு துப்புரவு செய்யப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையை அன்றாட வீட்டு உபயோகத்தில் இருந்து தவிர்ப்போம் எனும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
விழப்புணர்வூட்டும் சிரமதானப் பணிகளில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் அந்நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான ஏ.சஞ்சித்குமார், எஸ். நவீன் உட்பட பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment