14 Feb 2023

கட்டுரை : வரலாற்றில் என்றும் மறக்க முடியாத தணிசேரன் என்கின்ற மகா மனிதர்.

SHARE


கட்டுரை : வரலாற்றில் என்றும் மறக்க முடியாத தணிசேரன் என்கின்ற மகா மனிதர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உறுதியாக ஆதரித்துத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரப்புரைகள் செய்ததால்  சொந்த தாயின் இறப்புக்கு கூட செல்ல முடியாமல் தடை விதிக்கப்பட்ட ஒருவரை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.

மூன்று வயதில் தந்தையை இழந்த அவரைத் தாயாக மட்டுமின்றித் தந்தையாகவும் இருந்து வளர்த்த அவரின் அன்னையார் இரங்கம்மாள் தனது 100 ஆவது வயதில் காலமான போது தாய் இறப்புக்கு வரமுடியாமல் அவரைத் தடுத்து விட்டது இந்திய ஒன்றிய அரசு. ஆனால் அதற்காகத் தமிழீழ ஆதரவுக் கொள்கையைக் கைவிடவில்லை தணிசேரன் அத்தடையைத் தமது கொள்கை உறுதியுடன் இணைந்த தமது செயல்பாடுகளுக்குக் கிடைத்த "பரிசு" என்பார் தணிசேரன் என்கின்ற மனிதன்.

அமெரிக்காவில் அவர் ஆரம்பித்து வளர்த்தெடுத்த தமிழ் அமைப்புக்களின் வரிசை மிக நீளமானது. ஈழப்போராட்ட  ஆதரவுக்காக ஆரம்பிக்க்கப்பட்ட  பல அமைப்புகளின் ஆரம்ப கர்த்தாவாக விளங்குகிறார்  இவர்.

1991 ஆம் ஆண்டில், உலகத் தமிழ் அமைப்பு (World Tamil Organization) என்ற இலாப நோக்கற்ற அமைப்பினை வட கரோலினா மாநிலத்தில் பதிவுசெய்து ஆரம்பித்தார்.  இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் அமெரிக்காவின் சட்டதிற்கு உட்பட்டு உலகிலுள்ள எந்த நாட்டிலும் வாழும் தமிழர்களின் உரிமைகளை பெறுவதாகும். அமெரிக்காவில் கலை கலாச்சாரத்திற்கு பல சங்கங்கள் அமைப்புகள் இருந்தாலும் அமெரிக்க சட்டத்தின்படி அரசியல் பேசினால் அரசின் உதவியோ, நிதியோ கிடைக்காது தமிழின அரசியல் பேசியாக வேண்டும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவேண்டும் என்ற  உயரிய நோக்கில் அரசின் உதவி தேவையில்லை என தமிழின அரசியல் பேசும் அமைப்பாக உலகத் தமிழ் அமைப்பை தொடங்கி இன்றுவரை தொடர்ந்து தொய்வின்றி வெற்றிகரமாக 32 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

தமிழர் உரிமை, தமிழ் மொழி, தமிழ் இன உணர்வு கொண்ட உலகத்தமிழர்களிடையே  டாக்டர் தணி குமார் சேரன் என்ற பெயர் பலரும் அறிந்ததே. இளமையிலேயே இன உணர்வு கொண்டு  தமிழ்நாட்டு வடக்கெல்லை மீட்பு, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர். எல்லை மீட்பிற்காக தமிழ்நாடு தழுவிய அளவில் நடந்த அனைத்துக் கட்சிப் போராட்டங்களில் பங்கு கொண்டவர்.

1968ம் ஆண்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற சேரன்  1989 ஆம் ஆண்டில் கரோலினா தமிழ் சங்கம் என்ற இலாப நோக்கற்ற அமைப்பினை தொடங்கினார். கடந்த 31 ஆண்டுகளாக, இந்த அமைப்பு வட கரோலினா மக்களுக்கு தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் உள்ள அறிவை படிப்பித்தல், பிற கலாச்சார மக்களிடையே கலாச்சார கருத்து பரிமாற்றம் மற்றும் உறவை மேம்படுத்துதல் என பல சேவைகளை செய்து வருகிறது.

அமெரிகாவில் பல மாநிலங்களில் தமிழ் சங்கங்கள் இயங்கி வருகின்றன, இவற்றுள்  இலங்கைத்தமிழ் சங்கம் கடந்த 45 வருடங்களாக ஈழத்தமிழர் நலன்சார்ந்து இயங்கிவருவது உலகளாவிய  ஈழத்தமிழர் அறிந்திருப்பர்.

இவ்வாறு பலசங்கங்கள் இயங்கி வந்தாலும் இச்சங்கங்களிடையே போதுமான ஆக்கபூர்வமான தொடர்புகள் இல்லாமல் இருந்தது. இதனை உணர்ந்த தணிசேரன் அவர்ளும் அவர்போன்ற தமிழார்வலர் பலரும் இணைந்து அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள அனைத்து தமிழ் சங்கங்களையும் இணைத்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை எனும் அமைப்பை உருவாக்கினர்.   அவ்வமைப்பின்  சட்டக்கோப்பையும்  வகுத்துக்கொடுத்தவர் இவரே. வடஅமெரிக்காவின் பல மாகாணங்களில்  தமிழ்ச்சங்கம் உருவாகத் தூண்டுகோலாகவும்  துணையாகவும் இருந்துள்ள இவரை சட்டக்கோப்பு வகுப்பதில் இவருக்கு உள்ள ஆற்றலால் எந்த தமிழர்நலன் சார்ந்த அமைப்பும் தமது சட்டக்கோப்பு அமைப்பில் இவரது உதவியை நாடும் என்றால் மிகையாகாது.

தாய்மொழிக்கல்வியின் தேவையை உணர்ந்த இவர் அக்கொள்கையினை முன்னெடுத்து செயற்படுத்த 2005 ஆம் ஆண்டில் சர்வதேச கல்வி அறக்கட்டளை என்ற ஒரு இலாப நோக்கற்ற, தொண்டு அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளைக்கு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வரிவிலக்கு தகுதி  வழங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் நோக்கம், தேவைப்படும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பதற்கு உதவுவதாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு கேட்க தமிழ்நாட்டிற்குப் பலமுறை தன் சொந்த செலவில் பயணம் செய்த தணிசேரன். தமிழ்நாட்டின் பல நகரங்களில் ஈழ ஆதரவுக் கூட்டங்களில் உரையாற்றினார். தமிழீழ ஆதரவு விரிவாக்கத்திற்காக அரசியல், கலைத்துறை என பல தளங்களில் இயங்குவோரை சந்திக்க இவர் பின்நிற்பதில்லை. இங்கே பழ. நெடுமாறன், கி. வீரமணி, மருத்துவர் இராமதாசு. கோவை செழியன். ஜார்ஜ் பெர்ணான்டஸ் போன்ற தலைவர்களையும் "ஆனா ரூனா" (நா. அருணாசலம்). சுப. வீரபாண்டியன், நடிகர்கள் சத்தியராஜ், மணிவண்ணன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மதுரை தமுக்கம் திடலில் நடைபெற இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஐயா தணிசேரன் பேசுவதாக இருந்தது. ஆனால்,  அக்கூட்டத்திற்குத் தடைவிதிக்கப்பட்டது. அதன் பிறகு இராமேசுவரத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் சிறப்புரையாற்றிய மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியவர் தணிசேரன்   

முள்ளிவாய்க்கால் போர் நடந்த காலத்திலும் அதன்  பிறகும் பல்வேறு காலங்களில்  மலேசியா பினாங்கு துணை முதலமைச்சர் திரு ராமசாமி, திரு நடராசன், திரு மணியரசன் , திரு சீமான், திரு ராஜா, திரு நல்லகண்ணு , திரு மகேந்திரன், திரு  கௌதமன், திரு ஆளூர் சானவாஸ், திருமதி வானதி சீனிவாசன், திரு தமிழருவி மணியன் என கட்சி பேதம் பாராமல் பல அரசியல் தலைவர்கள் எழுத்தாளர்கள், செய்தி ஆசிரியர்கள், திரைத்துறை ஆளுமைகள் , சட்ட வல்லுநர்களை சந்தித்து தொடர்ந்து  தமிழீழத்திற்கு ஆதரவாக கருத்துக்களை முன்னெடுத்து சென்றார்.

அமெரிக்க அரசியல்வாதிகளிடையே முன்னர் ஈழ ஆதரவோ அனுதாப கண்ணோட்டமோ  வலுவாக இருக்கவில்லை. அவர்கள் பெரும்பாலும் ஸ்ரீலங்கா இனவாத அரசின் நிகழ்ச்சி நிரலையே பிரதிபலித்தனர். அவ்வாறான ஒரு காலகட்டத்தில்

2002 ஆம் ஆண்டு  அமெரிக்காவில் வாழும் தமிழகளை ஒருங்கிணைத்து  அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக்கான செயற்குழு தலைவர் திரு பென்சமின் கில்மன்அவர்களை நேரில் சந்தித்து ஈழத்தில் நடக்கும் தமிழின படுகொலைகளை எடுத்துக்கூறி ஈழத்தமிழர் சார்ந்த அவரின் நிலைப்பாட்டை சாதகமாக மாற்றியதில் டாக்டர் சேரனும் ஒருவர்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த பிறகு தமிழர்களுக்கு நீதி வேண்டி உருவாக்கப்பட்ட  அமெரிக்க தமிழ் செயற்பாடடு அவை- USTAG   என்ற அமைப்பு ஆரம்பித்தவர்களில்  டாக்டர் சேரனும் ஒருவர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திலும் மேலவை உறுப்பினராக பல ஆண்டுகள் சேவை செய்தார்.

2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டில் டர்பன் மாநகரில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நீதிக்கான மாநாடு - இலங்கை மீதான புலம்பெயர் தமிழர்கள் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

தமிழர் அமைப்பொன்று தமக்கு ஒரு    சட்டக்கோப்பை வகுக்க வேண்டுமானால் அவர்கள் நம்பிக்கையுடன் நாடுவது தணிசேரன் ஐயா வர்களையே

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை  நடந்து பல ஆண்டுகளை கடந்தும் நீதி வேண்டி போராடும்

உலகத் தமிழர்களை அவர்களின் பல அரசியல் அமைப்புகளை இணைக்கும் உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை  2021 ஆம் ஆண்டு  தொடங்கிய போது சட்டக்கோப்பை வகுத்துக்கொடுத்ததும் அவரே! அதனால் உலகில் பல அமைப்புகளை இணைக்க பேருதவி புரிந்தார்.

தமிழீழம் மற்றும் தமிழ்த்தேசியத்தை நோக்கியே அவரது அரசியல் இருப்பதால், அவர் அடைய வேண்டிய பொருளியல் உச்சத்தைத் தவறவிட்டவர் தணிசேரன்! அதற்காக ஒருபோதும் வருத்தப்பட்டவர் அல்லர்!

முனைவர் தணிசேரன் - மருத்துவர் செல்வி தம்பதிகளுக்கு செந்தில் மற்றும் இளங்கோ என இரண்டு மகன்கள்.

இதில் செந்தில் அவர்களின் மனைவி தமிழீழத்தை சேர்ந்தவர் என்பது எமக்கெல்லாம் உவப்பான செய்தி.

1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோயமுத்தூருக்கு அருகில் உள்ள மாதப்பூரிலிருந்து  பிறந்து தனது 85 பிறந்தநாளை வரும் பிப்ரவரி 10 அன்று கொண்டாட இருக்கும்  முனைவர் தணிசேரன் அவர்கள் 70 ஆண்டுகால பொதுவாழ்வில் நேர்மை,  அர்ப்பணிப்பு மிகுந்த அரசியல்,மாறாத போர்க்குணம், அயராத உழைப்பு என நம் தலைமுறை பார்க்கக் கிடைத்த பெரும்பேறு முனைவர் தணிசேரன். அவரை உலகத் தமிழர்கள் நாம் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம் . ஐயாவின் தமிழ் சமூகத்துக்கான பங்களிப்பு போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியது. ஐயா இன்னும் பல்லாண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, மக்களுக்கு தங்கள் வற்றாத அன்பையும், வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும். ஐயாவின் போராட்ட குணத்தையும், சமூகத்துக்கு தொண்டாற்றும் குணத்தையும் அவரிடம் இருந்து தமிழர்கள் நாம் கற்றுக் கொண்டு நம் தாய்நாட்டின் மண், மக்கள், வளம், பண்பாடு காக்க உறுதி ஏற்போம்.

SHARE

Author: verified_user

1 Comments:

Unknown said...

அமெரிகங்காவில் உள்ள ஆகப்பெரும் தமிழ் ஆளுமை. இவர் அளவு யாரும் தமிழ் பணி இங்கு செய்யவில்லை