தமிழ்,முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது. அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பேச்சுக்களை மூடிய அறைக்குள் நடத்தாமல் பகிரங்கத்தளத்தில் பேச வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ள அவர் அது தொடர்பில் புதன்கிழமை (07) ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாவது.
நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது வரவேற்கத்தக்கது. இப்பிரச்சினையால்,வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும், தமிழ் பேசும் சமூகங்களே அதிகம் பாதிக்கப்பட்டன. எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை என்பதால்தான், திருமலைத் தீர்மானம், வட்டுக்கோட்டை தீர்மானங்களில் அப்போதைய தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் அங்கீகரித்துச் செயற்பட்டன.
முஸ்லிம்களுக்கான தனியான அடையாளத்தை தந்தை செல்வாகூட ஏற்றிருந்தார். இதனால்தான்,எமது தலைவர் அஷ்ரஃப்கூட சிறுபான்மை அரசியலுடன் இணங்கிப் பயணித்தார். காலப்போக்கில்,இந்த ஒற்றுமைகள் இல்லாமலாகி இரு சமூகங்களும் துருவங்களாகின.
இப்போதுள்ள நிலையில், இச்சமூகங்களை பொது அடையாளத்துக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் எதையும் சிறுபான்மை தலைமைகள் செய்யவில்லை. இதுதான் இன்றுள்ள கவலை.
இரு சமூகங்களும் அண்ணளவாக சம எண்ணிக்கையிலுள்ள கிழக்கு மாகாணத்தில் கூட, ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாமலே உள்ளது. அதிகாரக் கெடுபிடி, நிர்வாகத் தொந்தரவு உள்ளிட்டவைகளால், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு இன்னும் அநீதியிழைக்கப்படுகிறது.
காணிகளைத் திட்டமிட்டுச் சுருட்டிக் கொள்வது பெரும்பான்மையைப் பலப்படுத்தும் நோக்குடனா? இந்த சந்தேகங்களும் மக்களிடத்தில் எழுகின்றன.
புலிகளின் கோட்பாட்டுச் சிந்தனையில் வளர்ந்த சிலரின், இந்தப் போக்குகள்தான், தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான
புரிந்துணர்வுக்கு குறுக்காக நிற்கின்றன.
இருந்தாலும்,இந்தப்போக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் அரசியல் பலம் வாய்ந்த புத்தி ஜீவிகளிடமும் இருக்காது என்றே, நம்புகிறோம். இவர்களுடன் பேச நாம் தயாராக இருப்பதும் இந்த நம்பிக்கையில்தான்.
என்றாலும்,2001 இல்,விடப்பட்ட தவறுகள் இம்முறையும் இடம்பெறக்கூடாது. முஸ்லிம்களின் தனித்தரப்பை மறுத்த பேச்சுக்கள் எவையும் வெற்றியளிக்காதென, அன்றே,நாம் அடித்துக் கூறினோம்.
இந்நிலையில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடாத்தும் பேச்சுக்கள் எவையும் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது.வடபுல வெளியேற்றத்தை விரும்பவில்லை எனக்கூறும் தமிழ் தரப்பு,எமது மக்களை மீண்டும் அங்கு குடியேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.வட மாகாண சபையின் கடந்த செயற்பாடுகள், இனச் சுத்திகரிப்புக்கு அமைதியான ஆதரவு வழங்குவதாகவே இருந்தன.
ஒரு கல்லையாவது நட்டு, மீள் குடியேற்றத்துக்கு சமிக்கை வழங்கியிருக்கலாம்.இவற்றையெல்லாம் முஸ்லிம் தலைமைகள்
மறந்திருக்கலாம்.முஸ்லிம்கள் மறக்கவில்லை.வாக்குகளுக்காகவும், வெவ்வேறு வாய்ப்புகளுக்காகவும் இந்த முஸ்லிம் தலைமைகள் தலையாட்டிகளாக உள்ளனவேயன்றி, தமிழ் மொழிச் சமூகங்களின் ஒன்றிணைவு அல்லது ஒரே தீர்வுக்கு இவர்கள் உழைக்கவில்லை. என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment