வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவு பாலமாக பரிணமித்துள்ள கூட்டுறவு துறை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவு பாலமாக கூட்டுறவு துறை தற்போது பரிணமித்து
உள்ளது என்று கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்
எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
பொருத்தமான சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தை காரைதீவு பிரதேசத்தில் புனரமைப்பதற்கான
முன்னோடி கூட்டம் புதன்கிழமை (14) இடம்பெற்றது. இதில் சமாச தலைவர் எஸ். லோகநாதன் மற்றும்
உப தலைவர் ரீ. ரூபாகரன் ஆகியோருடன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆறுமுகம் நடராசசிங்கம்
ஆகியோரும் பங்கேற்றனர். சமாச தலைவர் லோகநாதன் இங்கு மேலும் பேசியவை வருமாறு
” புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் உறவுகள் வட மாகாணத்தில் ஏராளமான அபிவிருத்தி திட்டங்களை
முன்னெடுத்து வருகின்ற நிலையில் தற்போது கிழக்கு மாகாணத்திலும் கூடுதலான வேலை திட்டங்களை
மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். குறிப்பாக நேதர்லாந்து நாட்டின் மனித நேய கூட்டுறவு சங்கத்தின்
பங்களிப்புடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களில் பல வேலை திட்டங்களும்
முடுக்கி விடப்பட்டு உள்ளன.
நாவிதன்வெளி, பாண்டிருப்பு, மல்வத்தை, மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களை உதாரணத்துக்கு
சொல்ல முடியும். விவசாயம், நெசவு, வீட்டு தோட்டம், மீன் பிடி போன்ற க சுய தொழில் முயற்சிகள்
சார்ந்து ஊக்குவிப்புகளை மேற்கொள்கின்றனர். காரைதீவு பிரதேசத்தில் மீனவர்களுக்கான தொழில்
வாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துகின்ற வேலை திட்டங்களை விரைவில் ஆரம்பிக்க
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமாசத்தின் தலைவர் என்கிற வகையில் அவர்களுடைய நம்பிக்கையை
நான் வென்று இவ்வேலை திட்டங்கள் சரியாகவும், முறையாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவனாக
உள்ளேன்.
அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை வழங்குவார்கள். வாக்குகளை பெற்று சென்று விடுவார்கள்.
அவர்கள் தேர்தல்களில் வென்று சுக போகங்களை அனுபவிப்பார்கள். மீண்டும் இன்னொரு தேர்தலுக்கு
வருவார்கள். பாவம் மக்கள். ஆனால் நாம் அவ்வாறானவர்கள் அல்லர் என்றார்.
0 Comments:
Post a Comment