சிறுவர்கள் தொடர்பான அத்தனை பிரச்சினைகளும் நிறைந்த ஒரு இடமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகின்றது.பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் ஆதங்கம்
சிறுவர்கள் தொடர்பான அத்தனை பிரச்சினைகளும் நிறைந்த ஒரு இடமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுவது வருத்தமளிப்பதாக பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் ஆதங்கம் வெளியிட்டார்.இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் நலிவுற்ற பெண்கள் சிறுவர்கள் தொடர்பான சமூக அபிவிருத்தித் திட்டம் எனும் நிகழ்ச்சி அமுலாக்கத் திட்டத்தின் பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டம் வெருகல் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை 28.09.2022 இடம்பெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பிரதேச பொதுமக்கள், சிறுவர் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெண்கள், இளைஞர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸார், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் அனஸ்,
சிறுவர்கள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்ற பிரச்சினைகள், உரிமை மீறல்கள், துஷ்பிரயோக செயற்பாடுகள், இவ்வாறு என்னென்னவெல்லாம் சுற்றுநிருபங்களிலே, அறிக்கைகளிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றனவோ அவை அனைத்தும் காணப்படுகின்ற ஒரு பிரதேசமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு இருக்கின்றது.
இதற்கு தீர்வு காணுஓம் பொருட்டு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் உட்பட இன்னும் ஆர்வமுள்ளோர் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு பிரதேச மக்கள் சார்பாக நான் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்பிரதேச செயலக அதிகாரிகளோ நிறுவனங்களோ கிராம மக்களோ தனித்தனியே இயங்கி இந்தப் பிரச்சினைக்குத் திர்வு காண முடியாதென்பதை நாம் எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக சிறுவர் விவகாரங்களொடு நேரடியாகத் தொடர்புடைய திணைக்கள்கள் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டும். அவர்களை இந்த கலந்தோலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து உள்வாங்கியிருக்கின்ற போதிலும் அவர்களது போதிய பங்களிப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையின் பங்களிப்பு மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.” என்றார்.
இந்நிகழ்வில் ஈச்சிலம்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மல் பாலசூரிய, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார், சிறுவர் நன்னடத்தை மூதூர் அலுவலக பொறுப்பதிகார் ஐ. அருள்செல்வன், பிரதேச செயலக முகாமைத்துவ சேவைகள் அலுவலர் எஸ். பிறியங்கா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ். அருட் செல்வம் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறுவர்கள், பெண்கள் தொடர்பானதும் மற்றும் பல்வேறு சமூகச் சீரழிவுகள் தொடர்பானதுமான பிரச்சினைகள் கவனத்தில் கொண்டு வரப்பட்டு அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment