மறைந்த அருட்பணி கலாநிதி வே.அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் நான்கு நூல்களின் அறிமுக விழா.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 25 வரையான நூல்களை எழுதிய மறைந்த அருட்பணி கலாநிதி
வே.அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் நான்கு நூல்களின் அறிமுக விழா மட்டக்களப்பு சார்ளஸ்
மண்டபத்தில் சனிக்கிழமை (17.09.2022) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு செங்கலடி மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி செபஸ்ரியான் இக்னேசியஸ் அடிகளார்
தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு
கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக கனடா உதவும் பொற்கரங்கள்
நிறுவன அமைப்பாளர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை, மட்டக்களப்பு சமாதான நீதவான்கள் சமூக
மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முஹைதீன், மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின்
செயலாளர் அருட்பணி கே.ஜெகதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவரின் திராட்சைத் தோட்டத்திலே, புரட்சிக் கிறிஸ்து, அன்னை மரியின் ஆரோபண இல்லம், நம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களே அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் எனப்
பலரும் கலந்து கொண்டிருந்த இந் நிகழ்வின் ஆசியுரையை, கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி
ஏ.தேவதாசன் அடிகளாரும், நூலாசிரியர் அனுபவப் பகிர்வை அருட்பணி சி.வி.அன்னதாஸ் அடிகளாரும்
நிகழ்த்தினர். நூலாசிரியர் அறிமுகத்தினை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்
அருட்பணி ஏ.ஏ.நவரெட்ணம் (நவாஜி) வழங்கினார்.
ஜேர்மனியில் வசிக்கும் நூலாசிரியரின் சகோதரர் முகில்வாணன் இராயப்பா நூலின் பிரதிகளை
பிரதம அதிதி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகைக்கு
வழங்கி வெளியிட்டுவைத்தார். அதனையடுத்து நூல்களின் முதல் பிரதிகளை சிறப்பு அதிதியாகக்
கலந்துகொண்ட கனடா உதவும் பொற்கரங்கள் நிறுவன அமைப்பாளர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை
பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகளை மட்டக்களப்பு சமாதான
நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முஹைதீன், மட்டக்களப்பு
பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்பணி கே.ஜெகதாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நூல் நயவுரைகளை மகுடம் வி.மைக்கல் கொலின், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்
திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் அன்பழகன்
குரூஸ், புனித மிக்கேல் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் ஆர்.வெஸ்லியோ வாஸ் (ஆழியான்)
ஆகியோர் வழங்கினர். ஏற்புரையை ஜேர்மனியில் வசிக்கும் நூலாசிரியரின் சகோதரர் முகில்வாணன்
இராயப்பா நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு பெரியகல்லாற்றை பிறப்பிடமாகக் கொண்ட மறைந்த அருட்பணி கலாநிதி வே.அந்தனி
ஜான் அழகரசன் அடிகளார் இலங்கையின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் குருத்துவப்
பணியாற்றியவர். பட்டப்படிப்புகளை அம்பிட்டியவில் உள்ள இலங்கை தேசிய குருமடம், தமிழ்
நாடு பச்சையப்பர் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹாவாட் பல்கலைக்கழகம்
ஆகியவற்றில் நிறைவு செய்தவர்.
திருமலை மட்டக்களப்பு சிறிய குருமடத்தின் அதிபராகக் கடமையாற்றியுள்ள அருட்தந்தை அன்ரனி
ஜான், யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை பெரிய குருத்துவ ஞானபீட பேராசிரியராகவுமு;, யாழ்
பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்கக் கல்லூரிகளிலும் பகுதி நேரப் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், தொண்டன் பத்திரிகையின் ஆசிரியராகவும், தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் உருவாக்கிய
தமிழ்கல்ச்சர் ஆங்கிலச் சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
கத்தோலிக்க குருவாகவும் பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றிய கலாநிதி வே.அந்தனி
ஜான் அழகரசன் அடிகளார் இலங்கையில் பணியாற்றியதையடுத்து அமெரிக்காவின் புனித தோமஸ் மோர்
தேவாலயத்தில் 40 வருடங்கள் பங்குப் பணியாற்றியிருந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்று,
இறுதிக்காலத்தில் ஜேர்மனியில் வசித்து 2020
ஆம் ஆண்டு தை மாதம் 16ஆம் திகதி இறையடிசேர்ந்தார்.
கலாநிதி வே.அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் முக்கிய ஆய்வு நூல்களாக இலக்கியத்திறனில் ஒருபார்வை. மட்டுநகர் தமிழ் ஆய்வு மாநாட்டு விமர்சனம், நாட்டுப்புறப் பாடலும் பண்பாடும், ஐந்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு விமர்சனம், தனிநாயகம் அடிகளாரின் வாழ்வும் பணியும், வள்ளுவமும் விவிலியமும் ஓர் ஒப்பாய்வு ஆகிய நூல்கள் சிறப்புப் பெறுகின்றன.
0 Comments:
Post a Comment