மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபருக்கு பிரியாவிடை.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் எம்.சி. ஜுனைட் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உப பீடாதிபதியாக இடமாற்றம் பெற்றுச் செல்வதனை முன்னிட்டு அவருக்கு கலாசாலையில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
திங்கள் மாலை 12.09.2022 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் உப அதிபர் கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா பிரதி அதிபர் செல்வி சி. மொறின் உட்பட விரிவுரையாளர்கள், நிருவாக அதிகாரிகள், ஆசிரிய கலாசாலையின் ஆரம்பக் கல்வித்துறை, சமூக விஞ்ஞானத்துறை, முதல்மொழி, ஆங்கிலத்துறை, விஞ்ஞானத்துறை உள்ளிட்ட அனைத்து ஆசிரிய மாணவர்களும் கலந்து கொண்டு மாற்றலாகிச் செல்லும் அதிபர் ஜுனைட்டை வாழ்த்தி பாராட்டிப் பேசினர்.
அங்கு ஏற்புரையை நிகழ்த்திய அதிபர் ஜுனைட்,
இலங்கையிலுள்ள எட்டு ஆசிரியர் கலாசாலைகளிலே மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை, பல சவால்களோடு இயங்கினாலும் இக்கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதில் வெற்றி கண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அலை பரவல் காலத்தில் கூட இந்தக் கலாசாலை மாணவர்களுக்கு கல்வியில் தொய்வு நிலை ஏற்படா வண்ணம் நிகழ்நிலை (சூம் தொழிநுட்ப)க் கல்வி வழங்கப்பட்டது.
எங்களுடைய இலக்கு இந்தக் கலாசாலையில் கற்கும் 227 ஆசிரிய மாணவர்களும் உள்வாரி வெளிவாரிப் பரீட்சைகளுக்குத் தோற்றி நீங்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான. அதுவே எனது அவாவாகும்” என்றார். இந்நிகழ்வில் இடமாற்றலாகிச் செல்லும் கலாசாலை அதிபருக்கு பொன்னாடை போர்த்தி, பூச்சரங்கள் அணிவித்து, பாமாலை புனைந்து, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 01.09.1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment