மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இலத்திரனியல் பத்திரிகை வெளியீட்டு வைப்பு.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இலத்திரனியல் பத்திரிகை ஒன்று இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் இன்று (01) திகதி வியாழக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இப்பத்திரிகை உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலக ஊடகப் பிரிவினால் வெளியிடப்படும் செய்திகளின் தொகுப்பாக இச்செய்தி மடல் மாதாந்தம் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பத்திரிகை இலத்திரனியல் பத்திரிகையாக மாதாந்தம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“மாவட்ட செயலக செய்தி மடல்” எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இச்சஞ்சிகையில் மாவட்டத்தின் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், கலாசாரம், விளையாட்டு, சாதனைகள், மற்றும் புத்தாக்கம் என பலவிடயங்களை உள்ளடக்கி இலகுவாகவும், சரியாகவும், விறுவிறுப்பாக வாசகர்கள் மனங்கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு கணனி, அலைபேசி மூலமாக உலகின் எப்பாகத்திலிருந்தும் தகவல்களை அறிந்து கொள்ளும் விதத்தில் இலத்திரனியல் சஞ்சிகையாக வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது அரசாங்க அதிபர் கருணாகரன் கருத்து தெரிவிக்கையில் பொறுப்புவாய்ந்த அரச நிறுவனம் என்றவகையில் மாவட்டம் சார்ந்த பல்வேறு விடயப் பரப்புகளில் தகவல்களையும், தரவுகளையும் முறையாகவும், சரியாகவும், தெளிவாகவும் இப்பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பான செய்திகளுக்கு தனியான பிரிவுகளை ஒதுக்கவேண்டும் என்பதுடன் மிகச் சரியான தகவல்களை உரிய அதிகாரிகள் ஊடகப் பிரிவிற்கு வழங்கி ஒத்துளைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பதிகாரி வீ.ஜீவானந்தனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதம கணக்காளர் திருமதி.இந்திராவதி மோகன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி.காயத்திரி ரமேஸ் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment