2 Aug 2022

ஏறாவூர் பொதுச் சந்தையில் கடைகளைக் கொண்டிருந்தோரை அடையாளம் காண்பதற்கான முன்னெடுப்புக்கள்.

SHARE

ஏறாவூர் பொதுச் சந்தையில் கடைகளைக் கொண்டிருந்தோரை அடையாளம் காண்பதற்கான முன்னெடுப்புக்கள்.

ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையில் 1987ஆம் ஆண்டுவாக்கில் இறுதியாக கடைகளைக் கொண்டிருந்த பொதுச் சந்தை வியாபாரிகளை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கென நியமிக்கப்பட்ட ஏறாவூர் நகர சபைக் குழு தெரிவித்துள்ளது.

தற்போது தூர்ந்து சிதைவடைந்து போய்க் கிடக்கும் ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை நவீனமயப்படுத்தி மீளத் துவங்குவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இந்த சந்தை கிழக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இயங்கவில்லை.

அதனடிப்படையில் இந்த சந்தை கடைசியாக இயங்கியபோது அங்கு கடைகளைக் கொண்டிருந்த சந்தை வியாபாரிகளை அடையாளம் காணும் முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாம் கடைகளைக் கொண்டிருந்தமைக்கான ஆவணங்களுடன் சமுகமளிக்குமாறு சந்தை வியாபாரிகள் 93 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 31 வியாபாரிகள் விடயத்திற்கென நியமிக்கப்பட்ட ஏறாவூர் நகர சபைக் குழுவினரிடம்  முன்னிலையாகியதாக அக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 61 பேர் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஏனையோர் அறிவிக்கப்பட்ட தினங்களில் முன்னிலையாகுவர் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

பொதுச் சந்தை வியாபாரிகளை அடையாளம் காணும் விடயத்திற்கென நியமிக்கப்பட்ட ஏறாவூர் நகர சபைக் குழுவில் மாகாண சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் என். ஐங்கரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் . ஹாறூன், வருமானப் பரிசோதகர் என். வாஹித், நகர சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் .எப். பாத்திமா ஸப்ரினா உட்பட நான்கு நகர சபை உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: