துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த காட்டு யானையின் சடலம் மீட்பு.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள உன்னிச்சை பல்லாவிக் குளத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடுபட்ட காயங்களுடன் உயிரிழந்து கிடந்த காட்டு யானையின் சடலம் மீட்கப்பட்டதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு இந்த வருடத்தில் முதல் முறையாக துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த காட்டு யானை 20 வயது மதிக்கத்தக்கது என்றும் வன இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலையடுத்து அதிகாரிகளுடன் ஸ்தலத்திற்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுவட்டப்பொறுப்பாளர் ஏ. அப்துல் ஹலீம் தலைமையிலான குழுவினர் இறந்து கிடந்த காட்டு யானையின் சடலத்தை சனிக்கிழமை மாலை மீட்டெடுத்தனர்.
இதுசம்பந்தமான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடத்தின் ஜுலை மாதம் நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் மின்சார வேலியில் அகப்பட்டமை, நஞ்சுண்டமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 13 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment