நிராயுத பாணியாக, ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதானது இயலாமையின் வெளிப்பாடாகும்.
நாட்டில் மக்கள் பஞ்சம், பசி, பட்டினியுடன் வாழ்கின்ற பெரும் பொருளாதார நெருக்கடி நிலையில், மக்கள் நாட்டு நடப்புகளையும், தகவல்களையும் அன்றாட நிகழ்வுகளையும் அறிந்து கொள்வதற்கு ஊடகங்கள் அர்ப்பணிப்பான தங்களது பணியை ஆற்றி வருகின்றன. அந்த வகையில் மக்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும், அறிந்து கொள்ளும் உரிமைக்கு மதிப்பளித்துவரும் நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், லஞ்சம் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதானது இயலாமையின் வெளிப்பாடாகும். ஏன கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் திங்கட்கிழமை(11) விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
இந்நிலையில் பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள மக்கள் அரச தலைவர்களின் வாசஸ்தலங்களை நாடி நீதி கேட்கும்போது அதனை தௌ;ளத் தெளிவாக அறிக்கையிடுவதற்காக ஒளிப்பதிவுக் கருவிகளுடன் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மீது ஆயுதம் தரித்த படையினர் மிகவும் குரூரமான முறையில் தாக்குதல் நடாத்தியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதும், வேதனைக்குரியதுமாகும்.
ஆயுதம் தாங்கிய படையினர் முன்னே மக்கள் செல்லும் காட்சியை ஒளிப்பதிவு செய்தமையை ஏற்க மறுத்து படையினர் கண்மூடித்தனமான முறையில் ஊடகவியலாளர்களை தாக்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிராயுத பாணியாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.
சுதந்திர இலங்கையிலே ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு உரிமை உள்ளது. ஊடகக் கடமையினை சுதந்திரமாக மேற்கொள்வதை தடுத்து ஊடகவியலாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்துவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இலங்கையில் இதுவரை காலமும் அவ்வப்போது ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு கொலை சம்பவங்களும். காணாமலாக்கப்பட்ட சம்பவங்களும், பதிவாகியுள்ளன. இவற்றுக்கு இதுவரையில் நீதி கிடைக்காத நிலையில் போராடிக் கொண்டு தொடர்ந்து தமது கடமையினை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்கதையாக தாக்குதல்கள் மேற்கொள்வதை உடன் நிறுத்த வேண்டும். இவ்வாறு தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். ஊடகவியலாளர்கள் மீது கைவரிசையைக் காட்டுபவர்களுக்கு முதலில் அடிப்படை உரிமைச் சட்டம் தொடல்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும், பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. ஊடகவியலாளர்கள் இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்படுகின்ற அதே நேரத்தில், தங்களுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் மாறி மாறி வருகின்ற அரசாங்கத்தில் இது தொடர்ந்து கொண்டே செல்கின்றன. எனவே நேற்றையதினம் கொழும்பில் வைத்து தாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும், அதற்கு அரசாங்கம் உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் தராதரம் பாராது தாக்குதல்தாரிகளைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி பாதிக்கப்பட் ஊடகவியலாளர்களுக்கு நீதியையும். இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment