1 Jun 2022

பாத்திமா ஆயிஷாவை கொலை செய்த குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி.

SHARE

பாத்திமா ஆயிஷாவை  கொலை செய்த குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி.

சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மேல்மாகாணம் பண்டாரகம அழுத்கமவினைச் சேர்ந்த 9 வயதே நிரம்பிய சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு எதிராக அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி திங்கட்கிழமை(30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

சிறுமி ஆயிஷா கடந்த மே 27 ஆம் திகதியன்று காணாமல் போனநிலையில் மறுதினம் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச் சிறுமி செய்த தவறுதான் என்ன இக்கொடுமையை எந்த மனித நேயம் உள்ளவர்களால் ஒருபோதும்  தாங்கிக்கொள்ள முடியாது.

பல எதிர்கால கனவுகளோடு மலர வேண்டிய இச் சிறுமி இன்று கருகி இருக்கின்றாள். இச் சிறுமியே எமது மண்ணின் வரலாற்றில் கருகிய இறுதி மொட்டாக இருக்க வேண்டும். இந்த இழப்பினை ஆறுதல் படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தச் சிறுமி வீடு திரும்பி வந்து சேரவேண்டும் என எல்லோரும் பிரார்த்தனை செய்த வேளையில் எமது நெஞ்சங்களில் இடி விழுந்தது போல் அவரது மரணச் செய்தி எம்மை உறைய வைத்துள்ளது.  இத்தகைய கொடூர செயல்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்என்பதோடு  சிறுவர்களை மதித்து அவர்களின் உரிமைகளைப் பேணி சிறந்த ஒரு எதிர்கால சந்ததியினை உருவாக்க வேண்டியது எம் அனைவரதும் தலையாய கடமையாகும்.

அதேவேளை பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், வன்முறைகள் இடம் பெறுகின்ற போது அதனை விசாரிப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதனை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறு தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்படுமிடத்து குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை துரிதமாக கண்டறியமுடிவதுடன் மிக விரைவில் தீர்ப்பு வழங்கக் கூடியதாக அமையும்.

பாத்திமா ஆயிஷாவின் பிரிவால் தவிக்கும் பெற்றோர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் சிறுமியின் ஆத்மா சாந்திக்காகவும் இறைவனை பிரார்த்திப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: