26 Apr 2022

அடிப்படைக் காரணமாக இருக்கும் இனப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு போராட்டத்தின முதற் கோரிக்கையாக அமைய வேண்டும். பா.உ கோ.கருணாகரம் (ஜனா)

SHARE

அடிப்படைக் காரணமாக இருக்கும் இனப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு போராட்டத்தின முதற் கோரிக்கையாக அமைய வேண்டும். பா.உ கோ.கருணாகரம் (ஜனா) 

காலி முகத்திடலிலே சிங்கள இளையோர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் கோரிக்கைகளில் பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியற் தீர்வினை ஏற்படுத்த வேண்டும். என்ற விடயம் முதன்மையான கோரிக்கையாக அமைந்திருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்( ஜனா) தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துது தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையிலேயே இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும், அதன் கரணமாக ஏற்பட்ட யுத்தமும், யுத்த காரணத்தை அறிந்து அதனை நிவர்த்திக்காது இந்த நாட்டு மக்கள் மீதே யுத்தத்தை மேற்கொள்ள மாறி மாறி ஆட்சி செய்த அரசுத் தலைவர்கள் பில்லியன் கணக்கான டொலர்களைச் செலழவளித்தமையே இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு முதற் காரணம்.

ராஜபக்ச குடும்பம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சிங்கள இளையேர்களினால் 5 அம்சக் கேரிக்கைகளை முன்வைத்து காலிமுகத் திடலிலே ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவிகளைத் துறக்க வேண்டும். ராஜபக்ச குடும்பத்தினர் எவருமே பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வகிக்கக் கூடாது. ராஜபக்ச குடும்பத்தால் அபகரிக்கப்பட்ட சொத்துகள் மீளப்பெறப்பட வேண்டும என இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

எமது நாடு பொருளாதார ரீதியாக மிகவும் அதளபாதாளத்திற்குள் இன்று விழுந்து கிடக்கின்றது. இலங்கை தற்போது இருக்கும் பொருளாதார நிலைமையை எவர் ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக நிமிர்த்திக் கொள்ளக்கூடிய நிலைமை இல்லை. இந்தப் பொருளாதார வீழ்ச்சி எப்படி வந்தது? தற்போயை அரசினால் உருவானதா? இல்லை இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசுகளினால் உருவானதா? என்ற தார்ப்பரியம் புரியாமல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவே நான் கருதுகின்றேன்.

உண்மையிலேயேஇந்த நாட்டின் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும், அதன் கரணமாக ஏற்பட்ட யுத்தமும், யுத்த காரணத்தை அறிந்து அதனை நிவர்த்திக்காது இந்த நாட்டு மக்களின் மீதே யுத்தத்தை மேற்கொள்வதற்காக இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசுத் தலைவர்கள் பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழித்தமையே இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு முதற் காரணம்.

பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது இந்த நாட்டில் ஒரு நிரந்தரமான அரசியற் தீர்வு ஏற்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தமும் இடம்பெற்றிருக்காது. யுத்தத்திற்காக மாறி மாறி வந்த அரசாங்கங்கள் டொலர்களைச் செலவழித்திருக்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது.

தற்போதும் கூட காலி முகத்திடலிலே சிங்கள இளையோர்களினால் 5 கேரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியற் தீர்வினை ஏற்படுத்த வேண்டும். என்ற விடயத்தை அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகவும், முதன்மையான கோரிக்கையாகவும் முன்வைத்திருக்க வேண்டும். இதே காலி முகத்திடலில் 1956 ஜுன் 05ம் திகதி பண்டாரநாயக்கா தலைமையில் இருந்த ஆட்சி சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்தமையால் எமது தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தினார்கள். அன்றைய அரசு சிங்களக் காடையர்களை ஏவிவிட்டு எமது தலைவர்களின் தலைகளை உடைத்தது மத்திரமல்லாமல் காதுகளைக் கூடக் கடித்துத் துப்பிய வரலாறுகள் உண்டு.

தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தை தமிழர்களாகிய நாங்கள் எப்படிப் பயன்படுத்தப் போகின்றோம் என்பது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் 1800 நாட்களையும் தாண்டி வடக்கு கிழக்கிலே இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் போராட்டத்தில் எமது தமிழ் இளைஞர்களின் பங்கு என்ன? எமது தமிழ் இளைஞர்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என எங்கள் மக்களின் பிரதிநிதிகளே அறைகூவல் விடுக்கின்றனர். இவ்வாறு அறைகூவல் விடுபவர்கள் எமது உறவுகளின் போராடடத்தில் இளைஞர்களை உள்வாங்குவதற்கு எவ்வித அக்கறையும் அற்றவர்களாகவே செயற்பட்டிருக்கின்றார்கள்.

ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவினால் சிங்கள மக்கள் மின்சாரம், எரிபொருள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற பொருட்கள் இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால் இன்று போராடுகின்றார்களே தவிர பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டமைக்கான முல காரணத்தைக் கண்டு பிடித்து அதனை நிவர்த்தி பண்ணுவதற்கு எந்தவிதமான எத்தணிப்பும் காட்டவில்லை. இந்த விடயத்தில் நாங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

சிங்களத் தலைமைகள் எங்களை அழைத்தவுடன் நாங்கள் ஓடிச் சென்று சந்திப்பதற்கோ அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கோ தயாராக இருக்க கூடாது. ஜனாதிபதி அழைத்தவுடன் நாங்கள் சென்று சந்திப்பதையோ, அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரனை வருகின்றது ஆதரவு தாருங்கள் என்று கேட்டவுடனே அதற்கு ஓடிச் சென்று ஆதரவு கொடுப்பதையோ அல்லது ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையோ, பங்குபற்றுவதையோ விடுத்து நாங்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

இந்த ராஜபக்ச சகோதரர்களை வீட்டிலேயே இருங்கள், இந்த நாட்டிற்குத் தலைமை தாங்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்று தமிழர்களாகிய நாங்கள் காலா காலமாகச் சொல்லி வந்திருக்கின்றோம். 2005, 2010, 2015, 2019 ஜனாதிபதித் தேர்தல்களின் போது நாங்கள் ராஜபக்சவினருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த ராஜபக்ச சகோதரர்களை தமிழினம் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும் போது இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்கள், எத்தணிப்பவர்கள் தமிழர்களின் அரசியற் தீர்வுக்கோ, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிக்கோ அல்லது நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பிலோ, காணி அபகரிப்பு விடயம் தொடர்பிலோ என்ன தீர்வைத் தரப் போகின்றார்கள் என்பதை எங்களுடன் பேச வேண்டும்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருபவர்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகளுடன் பேச வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகின்றோம் என்ற உத்தரவாதத்தைக் கடந்த காலங்களைப் போலல்லாமலும் வாய்ச்சொல்லில் மாத்திரமல்லாமலும் எழுத்து மூலமாக சர்வதேசத்தின் முன்னிலையிலான உத்தரவாதத்தினை எமக்குத் தரவேண்டும். அவ்வாறு தரும்பட்சத்திலேயே நாங்கள் அவர்களுக்கான ஒத்துழைப்புகளைக் கொடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட எமது மக்கள் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கான ஆணையையே எங்களுக்குத் தந்திருக்கின்றார்கள். இதே ஆணையை வடக்கு கிழக்கிலே தமிழ் ஈழத்திற்காக கல்குடாத் தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் அன்றைய தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆணை கொடுத்தார்கள். ஆனால் 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் வாக்களிக்கவில்லை. அதன் பலாபலன்களை கடந்த நாற்பத்து மூன்று வருடங்களாக அனுபவித்துக் காண்டு வருகின்றோம். தமிழீழத்திற்கான ஆணையைப் பெற்றுவந்த நாங்கள் 1981, 1983 களிலே மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக் கொண்டோம். ஆனால் நடந்தது என்ன? இவ்வறான விடயங்களைக் கருத்திற்கொண்டு நாங்கள் மக்களிடம் பெற்ற ஆணையின் அடிப்படையில் எதிர்காலத்திலே தமிழ் மக்கள் நிரந்தர அமைதியாக வாழ்வதற்கான ஏற்பட்டுடனேயே தற்போது நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்திலோ அரசியற் தலைமைகளுடனான சந்திப்புகளிலோ அல்லது அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களிலோ நாங்கள் பங்குகொள்ள வேண்டும்.

1990களிலே அப்போதிருந்த ஜனாதிபதி பிறேமதாச அவர்களுக்கு எதிராக அவருடைய கட்சியல் இருந்தவர்களாலேயே எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாரளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டது. அந்த நேரம் நான் மிக இளவயதிலே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னிடம் பிறேமதாச அவர்கள் தனக்கு ஆதரவு தரும்படி கேட்டார். நான் அவரிடம் சொன்னேன் இதனால் எமது மக்களுக்கு என்ன பயன் என்று. என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அந்த நேரத்தில நான் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத மாவட்டமாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை கிராமத்தில் தமிழ் மக்களை சகோதர முஸ்லீம்கள் தாக்கி அவர்கள் அனைவரையும் கிராமத்துடன் திருக்கோவில் விநாயகபுரத்தில் குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் நான் கேட்டது ஒரே ஒரு கோரிக்கை தான் உடனடியாக வீரமுனை மக்கள் மீண்டும் அங்கு குடியேறுவதற்கான ஏற்பாட்டைச் செய்து தரும்படி கோரினேன். அக்கணமே என் முன்னே பாதுகாப்புச் செயலாளருக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து ஒரு கிழமைக்குள் எனது கோரிக்கையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டார் அது நடந்தது.

அன்று நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்னிடம் ஆதரவு கேட்டதற்கு ஒரு கிராமத்தை மீளக் குடியேற்ற முடிந்தால் தற்போது தமிழ்த் தேசியப் பரப்பில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியம் சார்ந்து இருக்கையில், எமது ஆதரவு ஆட்சியாளர்களுக்கோ அல்லது ஆட்சியை மாற்றத் துடிப்பவர்களுக்கோ தேவை என்றால் தமிழினம் எமக்கு எதற்காக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக ஆக்கியிருக்கின்றார்களோ அவர்களது அரசியல் அபிலாசகளைத் தீர்ப்பதற்காக நாங்கள் கடமையாற்ற வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


SHARE

Author: verified_user

0 Comments: