15 Apr 2022

வாசகர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்- கட்டுரை.

SHARE

வாசகர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

சித்திரை மாதம் வருகின்றது என்றாலே அனைவரது மத்தியிலும் உதிர்ப்பது புத்தாண்டை வரவேற்கும் எண்ணமே தான். ஆம், அந்த அளவிற்கு அனைவரது மத்தியிலும் சித்திரைப்புத்தாண்டு எதிர்பார்ப்புமிக்க கொண்டாட்டமாக தற்போது மாற்றமடைந்துள்ளது.

இலங்கை வாழ் தமிழ் - சிங்கள மக்கள் கொண்டாடும் சித்திரைப்புத்தாண்டு  இன, மத பேதங்களின்றி ஒற்றுமையாக கொண்டாடும் ஒரு நன்னாளகும்.
 
சூரியன் மேஷத்திற்குள் நுழையும் ஆரம்பம்        சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது. 
 
அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகத் பிரித்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில் வசந்த காலம் எனப்படும் இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. 
 
கோலாகலமான விழாக் காலத்தில் புத்தாண்டின் துவக்கம் அமைக்கப்பட்டது அறிவு பூர்வமானதும் உணர்ச்சி பூர்வமானதும் ஆகும்!  சூரியன் மேஷத்தில் உச்சமாக விளங்குகிறான். ஆகவே பிரகாசமான சித்திரையை 'பிறக்க இருக்கும் புத்தாண்டு' ஒளி வீசும் ஆண்டாகத் துலங்கும் வண்ணம் ஆண்டுத் துவக்கமாக அமைத்தது மிக்க பொருத்தமாகவே உள்ளது. 
 
சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது. ஆகவேதான் பெரும்பாலான அனைத்து நாடுகளிலும் புத்தாண்டு சித்திரைப்புத்தாண்டாக கருதப்படுகிறது.  அது மட்டுமல்ல, இது உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. ஆகவே தான் நமது இலங்கை - நேபாளம், பர்மா, கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!
 
இலங்கையில் இன- மத- மொழி பேதமின்றி தமிழ் சிங்கள மக்கள் தமிழ் புத்தாண்டை சித்திரை மாத ஆரம்ப தினத்தில் கொண்டாடுகின்றனர். எனினும் வரலாற்றை எடுத்துநோக்கின் மேலை நாடுகளும் ஆரம்ப காலங்களில் ஏப்ரல் மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தது . ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரி மாதம் ஆண்டின் முதல் மாதமாக கொள்ளப்பட்டது. தற்போது மேலை நாட்டார் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுவதேயில்லை.
 
மகர ராசிக்குள் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ணிய காலமாகக் கொள்ளப்படுகிறது. உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணத்தினை ஆரம்பிக்கும் இக்காலமானது அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் ஆகும்.
 
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது. சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரியெனக் கொண்டு சித்திரைப்புத்தாண்டு ஆரம்பமாகி இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. !
 
எமது முன்னோர்கள் 60 ஆண்டுகளை கணக்கிட்டுள்ளனர். அந்த அறுபது வருடங்களுமே பூமியின் சுழற்சிக்கேற்ப திரும்ப திரும்ப ஒவ்வொரு ஆண்டும் பெயரிடப்படுகிறது.
 
அந்த 60 ஆண்டுகளாவன 
 
1.பிரபவ, 2.விபவ , 3.சுக்கில , 4.ப்ரமோதூத, 5 ப்ரஜோத்பத்தி, 6.ஆங்கிரஸ , 7. ஸ்ரீமுக , 8.பவ , 9.யுவ, 10.தாது , 11.ஈசுவர, 12.வெகுதான்ய, 13.ப்ரமாதி, 14.விக்கிரம , 15.விஷு , 16.சித்ரபானு, 17.சுபானு , 18.தாரண , 19.பார்த்திப, 20.விய, 21.ஸர்வஜித், 22.ஸர்வதாரி, 23.விரோதி , 24.விக்ருதி , 25.கர , 26.நந்தன
27.விஜய,  28.ஜய,  29.மன்மத, 30.துர்முகி , 31.ஹேவிளம்பி, 32.விளம்பி, 33.விகாரி , 34.சார்வரி, 35.ப்லவ , 36.சுபகிருது , 37.சோபகிருது , 38.குரோதி, 39.விசுவாவசு, 40.பராபவ , 41.ப்லவங்க , 42.கீலக , 43.சௌமிய, 44.சாதாரண , 45.விரோதிகிருது, 46.பரிதாபி, 47.ப்ரமாதீ, 48.ஆனந்த, 49.ராக்ஷஸ, 50.நள, 51.பிங்கள, 52.களயுக்தி, 53.சித்தார்த்தி, 54.ரௌத்ரி, 55.துன்மதி, 56.துந்துபி, 57.ருத்ரோத்காரி, 58.ரக்தாக்ஷி, 59.குரோதன, 60.அக்ஷய.
 
சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ்-இந்துக்களின்  புது வருடப்பிறப்பாக கொண்டாடப்பெறுகின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும். அவ்வகையில் சூரியன் இம்முறை மேஷராசியில் நுழையும் இந்த ஆண்டு மன்மத வருடம் என பெயரிடப்பட்டுள்ளது. மன்மத வருடம் தமிழ் வருடங்களான 60 வருடங்களில் 29 ஆவதாக வரும் ஆண்டாகும். கலிகாலம் பிறந்து 5116 ஆவது வருடமாகும். 
 
நந்தன விஜய ஜய என வருடங்களை தாண்டி மன்மத வருடம் தற்போது பிறந்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மதியம் 12.23 க்கு கற்கடக லக்கினம் அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதம், திதி அபரபட்ஷ தசமி மஹர ராசியில் புதுவருடம் பிறந்துள்ளது. எனினும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி புதிய வருடம் 1.47க்கு பிறக்கிறது. அதுபோல், வருடத்தின் மறுநாள் 15 ஆம் திகதி  காலை 7.52 தொடக்கம் 9.48 வரையிலும், மீண்டும் 10 மணி தொக்கம் 11 மணிவரையில் கைவிசேடம் பெறுவதற்கு உகந்த நேரம் என தெரிவிக்கப்படுகிறது. பிறக்கும் இந்த புதுவருடத்தில் சகலருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிட்ட வேண்டும் என அனைவரும் தத்தமது குல தெய்வங்களை தமக்கேயுரிய பாரம்பரியங்களுடன்  வழிபட்டு வருவது வழமையே. 
 
புண்ணிய காலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி காலை 8.23யில் இருந்து மாலை 4.23 வரையில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
திருக்கணித பஞ்சாங்கத்தன் படி, காலை 9.47 முதல் மாலை 5.07 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புண்ணிய காலப்பகுதியில் மருத்து நீருடன் சிரசில் கடம்ப இலையையும் காலில் வேப்பம் இலையையும் வைத்து நீராட வேண்டும்.
 
வருடபிற்கு சில வாரங்களுக்கு முன்னரே குடும்பத்தாருக்கு உறவினருக்கும் பரிசுகளும் புதிய ஆடைகளும் வாங்க கடைகள்- ஷொப்பிங் மோல்கள் என அனைத்தும் களை கட்டத் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து புத்தாண்டுக்கு முன்னைய நாள் வீடு முழுவதும் துப்புரவு செய்து பழையனவற்றை அகற்றி புதிய பொருட்களுடன் புது வருடத்தினை வரவேற்க தயாராக இருப்பார்கள். 
 
அவற்றிலும் வருட கொண்டாட்டங்கள் பாரம்பரியங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே காணப்படினும் பொதுவாக புதுவருட தினம் கொண்டாட்டத்தை நோக்கினால் , புதுவருட தினத்தன்று காலையிலேயே எழுந்து மருத்து நீர் தேய்த்து தலை முழுகுவது முக்கிய பண்பாடாக காணப்படுகிறது.  மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்பபூர்வமாக ஒன்பதுக்கு மேற்பட்ட மூலிகைக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தலையில் கடப்பமிலையும், காலில் வேப்பமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்குப் புறமாகப் பார்த்து நின்று தேய்த்து அதன் பின்னர் ஸ்நானம் செய்தல் சிறப்பானது என்பது வழக்கம். 
  
தலைக்குளித்த பின்னர் வீட்டின் தாயறையின் முன்னர் பசுவின் சாணத்தினால் மெழுகி அவ்விடத்தினை தூய்மையாக்கிய பின்னர் பொங்குவதற்கு ஏற்றாற் போல் மூன்று கற்கள் அடுக்கி அதில் புது மற்பானை வைத்து பொங்க வைப்பார்கள். பால் பொங்கி வரும் போது குடும்பத் தலைவர் அல்லது மூத்த மகனின் கையால் பச்சரியினையை எடுத்து மூன்று முறை சுத்தி பானையில் இடுவார்கள்.   பொங்கல் தயாராகியதும் புத்தாண்டுப் பலகாரங்கள் - பழங்கள் என அனைத்தினையும் கடவுள் முன் வைத்து படைத்து பிறந்திருக்கும் வருடம் நல்லதாக அமைய வேண்டுமென வழிபடுவார்கள்.
  
கைவிசேடம் வழங்குதல் என்பது மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். பிறந்த வருடத்தில் எமது கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் வருடம் பிறந்து அதற்கென வகுக்கப்பட்ட சுபநேரத்தில் பெரியோர் பெற்றோர் குரு முதலானவர்களிடமிருந்து கைவிசேடங்களை பெற்று பரிமாறிக் கொள்ளும் நிகழ்வாகும். இந்த மன்மத வருடப்பிறப்பில் கைவிசேடத்துக்குரிய நாளாக இன்று 15 ஆம் திகதி புதன்கிழமை சித்திரை மாதம் 02 ஆம் நாள் காலை 07.52 தொடக்கம் 9.48 வரையும் 10.00 தொடக்கம்- 11.00 வரையும் சுபவேளையாக வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அதனை தொடர்ந்து சிற்றுண்டிகள்- இனிப்புக்கள் ஆகியவற்றை அயலவர்- உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று வழங்கி சந்தோஷமாக அளவளாவி மகிழ்வார்கள். தொடர்ச்சியாக ஒரு வார காலம் இவ்வாறு உறவுகடன் கழிப்பதற்கு செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
எனவே இந்த மன்மத வருடத்தில் நாட்டின் அனைத்து மக்களும் இன மத பேதமின்றி ஒரு தாய் மக்கள் என்ற ரீதியில் வாழ்ந்து வந்தால் அனைவரது வாழ்விலும் சந்தோஷம், சௌபாக்கியம், செல்வம் என அனைத்து பேறுகளும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.(thanks news.lk)

.
SHARE

Author: verified_user

0 Comments: