சிங்கள மொழி டிப்ளோமா கற்கையை முடித்த 135 தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.
சிங்கள மொழி டிப்ளோமா கற்கையை முடித்த 135 தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் ஓட்டமாவடி தேசிய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை 29.03.2022 இடம்பெற்றது.
முக்கியமாக மொழிப் பிரச்சினைகளை அங்கீகரிப்பதன் மூலம் நாட்டின் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதார அபிவிருத்திக்கான உத்திகளையும் வகுத்துக் கொள்ளலாம் என்பதற்காக இந்த செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு, சிவில் பிரஜைகள் சபையின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ஹயாத்து முஹம்மது அன்வர் தெரிவித்தார்.
இந்த அமைப்பால் 2016ஆம் ஆண்டிலிருந்து இப்பொழுது வரை சகோதர சிங்கள மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றலில் இளைஞர் யுவதிகளை உள்வாங்கி சுமார் 435 பேருக்கு மொழிக் கற்றல் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு வாழ மொழியறிவு நமக்கு பல வழிகளில் உதவும். அடுத்தவரின் மொழியை நாம் அறிந்திருப்பது விலை மதிக்க முடியாத சொத்தாகும். அந்த வகையில் சிங்கள மொழி கற்கையை உங்களுக்கு வழங்கும் மட்டக்களப்ப சிவில் பிரஜைகள் சபை மாபெரிய சேவையை ஆற்றுகிறது என்பதில் நான் பெருமையடைகின்றேன். நானும் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வமாக இருந்து கற்று வருகின்றேன் என்று சிங்கள மொழி கற்ற 135 தமிழ் முஸ்லிம் இளையோருக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி வைத்து உரையாற்றிய 231வது படைப்பிரிவின் பிரிகேடியர் என்.கே.டி. பண்டார தெரிவித்தார்.
நிகழ்வில் 4வது கெமுனு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஏ.எம்.பி. குணரத்ன, கிரான் பிரதேச செயலளார் எஸ். ராஜ்பாபு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், வாழைச்சேனை பொலிஸ் பெண்கள் சிறுவர்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பதுர்தீன் உள்பட இன்னும் பல அதிகாரிகளும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தமிழ் முஸ்லிம் சமூக இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment