உயிர் காப்பு பயிற்சி நெறியை பூர்த்தி செய்தோருக்கு சர்வதேச தரச் சான்றிதலும் சர்வதேச உயிர் பாதுகாப்பு உரிம அடையாள அட்டையும் வழங்கிவைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி நெறியினை வழங்கி வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம், இலங்கை உயிர் காப்பு சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு பிரிவு என்பன இணைந்து நடாத்தும் உயிர் காப்பு சான்றிதழ் இலவச பயிற்சிநெறி கடந்த (15) ஆந்திகதி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வெபர் மைதான உள்ளக நீச்சல் தடாகத்தில் பயிற்சிகள் இடம்பெற்றிருந்தது.
வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைசினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இத்திட்டம் நாடுபூராகவும் மாகாண மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கான பயிற்சியாளர்களைத் தெரிவு செய்து 9 நாள் கொண்ட உயிர் காப்பு பயிற்சி நெறியை மேற்கொண்ட 30 பேரில் அதனை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 17 பயிற்சியாளர்களுக்கான சர்வதேச தரச் சான்றிதலும் சர்வதேச உயிர் பாதுகாப்பு உரிம அடையாள அட்டையும் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (23) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஹேமந்த, உயிர் காப்பு சங்கத்தின் பிரதிநிதி ஐ.பி.விஜயவர்த்தன, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பை ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத்துறையில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் அதிகமாக காணப்படுவதினால் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்து அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொள்பவர்கள் இலகுவாக தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment