இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு வன்மையான கண்டனங்கள் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் பணிபுரியும் உதயரூபன் ஆசிரியரை இடம் மாற்றக்கோரி திங்கள்(06.12.2021) அன்று குறித்த பாடசாலை முன்றலில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக எனக்கு அறியக்கிடைத்தது. மேற்படி உதயரூபன் தனது பணி சார்ந்து இதுவரை
41 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர் என தெரியவருகின்றது. அதுமட்டுமன்றி, தனது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் என்னும் தகமையினை அக்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்கான கேடயமாக அவர் பயன்படுத்தி வருகின்றாரா? என்னும் கேள்வி
கல்விச்சமூகத்தைச் சேர்ந்த பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. என தம்மிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசமுரை சந்திரகாந்தன் அவர்களுடைய கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
அவர்மீது மாவட்டத்திலுள்ள கல்வித்திணைக்கள மேலதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை தொடருகின்றது. இந்நிலையில்தான் உதயரூபன் ஆசிரியரை இடம்மாற்றக்கோரி மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என நான் கருதுகின்றேன்.
அதன் காரணமாகவே பெற்றோர்களும், பழையமாணவர்களும் பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு செயற்படும் நலன்விரும்பிகளும் உதயரூபனை இடமாற்றக்கோரி பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர் என புரிந்துகொள்ள முடிகின்றது.
ஜனநாயக ரீதியான அந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள முடியாத உதயரூபன் ஆசிரியர் குறித்த பிரச்சினைகள் மீது எவ்வித சம்பந்தமும் அற்ற என்னுடைய பெயரையும் எனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி, விடயங்களை திசைதிருப்பி தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க முயல்வதாக நான் கருதுகின்றேன்.
மேற்படி ஆர்ப்பாட்டம் குறித்து உதயரூபன் ஆசிரியர் வழங்கிய வழங்கிய தகவல்களின் அடிப்படையில்தான், இலங்கை ஆசிரியர் சங்கம்கூட உதயரூபன் ஆசிரியருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் நானும் எனது கட்சியும் இருப்பதாக ஆதாரமற்ற குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
மேற்படி குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்ற அதேவேளை, உள்ளூர் உண்மை நிலைமைகளை அறிந்துகொள்ளாமல் எவ்வித ஆதாரமற்ற பொய்யான தகவல்களைக் கொண்டு ஒரு தேசிய ரீதியான ஆசிரியர் சங்கமானது அறிக்கைகளை விடுவதென்பது பொறுப்பற்ற செயலாகும். அத்தோடு பல முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை
அவமரியாதைக்குள்ளாக்கும் வண்ணம் தெருச்சண்டை பாணியில் ஒரு தேசிய ஆசிரியர் சங்கம் தகாத வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தி அறிக்கை விடுவதென்பது ஒரு மோசமான முன்னுதாரணமுமாகும்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை என்மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தியுள்ளமைக்கும் அறிவு, நாணயமற்ற வார்த்தைப்பிரயோகங்களை அவ்வறிக்கையில் பயன்படுத்தியுள்ளமைக்கும் “இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும்"
எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
மேலும் என்னையும் நான் தலைமை தாங்கும் கட்சியின் நற்பெயரையும் கழங்கப்படுத்தியமைக்காக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளேன். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment