கொவிட் தொற்று காரணமாக மாணவர்கள் இழந்த கல்வியை கவனம் செலுத்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது.
நாட்டிலே கொவிட் தொற்று காரணமாக மாணவர்கள் இழந்த கல்வியை அதிபர்கள்,ஆசிரியர்கள்,கவனம் செலுத்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. இதன் மூலம் மாணவர்கள் இழந்த கல்வியை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பாகவுள்ளது என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
அக்கறைப்பற்று கண்ணகி வித்தியாலயத்தின் கல்வி திறன் வகுப்பறைத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(5) காலை 10.00 மணியளவில் அதிபர் த.இராசநாதன் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
எமது நாட்டைச் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தின் இலத்திரணியல் கல்வி திறன் தொண்டு நிறவனத்தின் முழுமையான நிதிப்பங்களிப்பிலும்,குறித்த நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் அமைக்கப்பட்ட கல்வி திறன் வகுப்பறைத் திறப்புவிழாவில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறன் வகுப்பறையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் விஷேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரனும்,சிறப்பு அதிதிகளாக இலத்திரனியல் கல்வி தொண்டு நிறவனத்தின் தலைவர் செ.முரளிதரன்,செயலாளர் கலாநிதி கு.கணேசன்,திருக்கோவில் கல்வி வலயத்தின் இணைப்பாளர் கலாநிதி.வாசுதன் செல்லத்துரை,கிழக்கு மாகாண இணைப்பாளர் சா.சுதாகரனும், ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.மயூரன்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இங்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்...
எமது சமூகம் சார்ந்த பாடசாலைகள் பல கஸ்டப்பிரதேசங்களிலும்,வளங்கள் குறைவாகவும் காணப்படுகின்றது.பெற்றோர்களினதும்,சமூகத்தின் ஆர்வலர்களினதும் ஒத்துழைப்புடன் பாடசாலைகள் நடைபெறுகின்றது.எமது சமூகத்தின் இன்றைய கட்டாயத் தேவையாக கல்வி திகழ்கின்றது.கல்வியை தொடர்ச்சியாக கற்பதன் மூலம் எமது சமூகத்தின் இழப்புக்கள் பலவற்றை மீண்டும் நிவர்த்தி செய்ய முடியும்.நாட்டிலே இரண்டு வருடங்களாக மாணவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளது.இவ்வாறு இழந்த கல்வியை நிவர்த்தி செய்வதற்கு எமது சமூகம் சார்ந்தவர்கள்,நிறுவனங்கள்,புத்திஜீவிகள் எம்முடைய சமூகத்தின் கல்வித்தேவைக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இலத்திரணியல் கல்வி தொண்டு நிறுவனத்தினரின் உதவிகள்,ஒத்தாசைகளை நான் பாராட்டுகின்றேன்.எமது சமூகத்தின் உயிர்நாடியான கல்வியை குறித்த நிறுவனத்தினர் செய்யும் நல்லெண்ணங்களால் எம்முடைய மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கின்றார்கள்.இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும்போது நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று திறன்வகுப்பறைகள் திறக்கப்படுகின்றது.இதன்மூலம் திறன் கல்வியை ஆசிரியர்கள் சரியான பாதையில் மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு கல்வியில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டிக்கொள்ள முடியும்.இதன்மூலம் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மேன்மையடையும்.இன்னும் சில மாதங்களின் பின்னர் க.பொ.தா உயர்தரப்பரீட்சை மற்றும் புலைமைப் பரீட்சைகள் நடாத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.இவ்வாறான பரீட்சைகளில் மாணவர்கள் சித்தியடைவதற்கு ஆசிரியர்கள்,வகுப்பாசிரியர்கள் கவனம் செலுத்தி கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.இதன் மூலம் மாணவர்கள் இழந்த கல்வியை பெறக்கூடிய வாய்ப்பாகவுள்ளது எனத்தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment