தந்தை செல்வா கலையரங்கில் அடையாளங்களையும் வரலாறுகளையும் ஆராயும் கண்காட்சி.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை அண்டி அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் அடையாளங்களையும் வரலாறுகளையும் ஆராயும் கண்காட்சி திங்களன்று 27.12.2021 இடம்பெற்றது.
அதிகார நிலை, சலுகை, எங்கள் வீதிகளின் வரலாறுகள், கடந்த காலக் கதைகள், ஆவணப்படம் கிளிநொச்சியிலிருந்து கலை, வெவ்வேறு கோணங்களில் கடந்த காலம் உள்ளிட்ட தலைப்புக்களில் கண்காட்சி அம்சங்கள் உட்பட இறுதியாக கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.
இந்த கண்காட்சியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், சமாதான ஆர்வலர்கள் மூத்த பிரஜைகள், உட்பட துறைசார்ந்தோரும் கலந்து கொண்டனர்.
கடந்த காலம் வெவ்வேறு கோணங்களில் நம்மை அழைத்துச் சென்றிருக்கின்றது. பாரம்பரிய வரலாற்று கதைகள் விவரிப்புக்களிலிருந்து பல்வேறு தரப்பினரின் பார்வைகளும் அனுபவங்களும் விலக்கப்பட்டுள்ளதாக அங்கு கலந்துரையாடலில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும் பெண்கள், ஏழைகள், சிறுவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், சிறுபான்மையினர், சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினர் ஆகியோரது பார்வைகளும் அனுபவங்களும் விலக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தை நாம் புரிந்து கொள்ளும் விதம் இதன்மூலம் பாதிக்கப்படுகின்றது. நிகழ் காலத்தைப் பற்றிய நமது புரிதல்களும் இதன்மூலம் பாதிக்கப்படுகின்றன.
வாழ்வழி வரலாறுகள் மற்றும் பிற பிரதிநிதித்துவங்களும் நமது அடையாளங்கள் சமூக புரிதல்கள் மற்றும் நடத்தைகளை வடிவமைக்கின்றன. இவற்றை நாம் வெவ்வேறு கோணங்களில் பார்க்கத் தொடங்கும்போது நாம் கடந்த காலத்தைப் பற்றி பெரும்பாலும் ஒரு ஆழமான புரிதலைக் கொண்டிருக்க முடியும்.
நம் அனைவருக்கும் பலவித தோற்றமும் அடையாளங்களும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதேவேளை வரலாறு திரிபுபடுத்தலும் இருட்டடிப்பும் இன்றி காலக் கண்ணாடியாக வரலாறு கொண்டு செல்லப்பட வேண்டும்.
ஏற்கெனவே இந்த வரலாறுகள் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்ட பல்வேறு தரப்பினரும் இவை ஆழமாகப் பேசப்பட வேண்டிய விடயங்கள் என்று தெரிவித்திருந்ததாக தந்தை செல்வா கலையரங்க வளவியலாளர் செல்வராசா திலீபன் தெரிவித்தார்.
கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளில் தந்தை செல்வா கலையரங்கத்தின் சார்பில் வி. பிரியதர்ஷினி எஸ்.சி.சி.இயங்கோவன் உட்பட இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர். தந்தை செல்வா அவர்களின் நினைவாகவும் யுத்தத்திலிருந்து மீண்டெழும் தமிழ் பேசும் மக்களின் வல்லமையின் எடுத்துக் காட்டாகவும் தந்தை செல்வா அறக்கட்டளையின் தாராள பங்களிப்புடனும் தந்தை செல்வா கலையரங்கு 01.07.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அன்று தொடக்கம் இன்று வரை அது பல்லின சகவாழ்வு மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்காக இயங்கி வருகின்றது.
0 Comments:
Post a Comment