31 Dec 2021

“நிர்வாக பயங்கரவாதம்” என நஸீர் அஹமட் எம்.பி. தெரிவிப்பது கண்டிக்கத்தக்கதாகும். - முன்னாள் அரசாங்க அதிபர்.

SHARE

நிர்வாக பயங்கரவாதம்என நஸீர் அஹமட் எம்.பி. தெரிவிப்பது கண்டிக்கத்தக்கதாகும். - முன்னாள் அரசாங்க அதிபர்.

புதன்கிழமை(29) இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் புள்ளி விபரங்களை பயன்படுத்தி முன்வைத்த பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதுடன்  மாவட்டத்தில்நிர்வாக பயங்கரவாதம்நிலவுவதாகவும் , “அரச உத்தியோகத்தர்கள் முஸ்லீம் மக்களது காணிகளை களவாடியதாகவும்” , “கிராம சேவகர் பிரிவுகளை துண்டாடியதாகவும்தெரிவித்த கருத்துக்களானது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகவும் மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடாகவும் கருதவேண்டி உள்ளது.

என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வியாழக்கிழமை(30) தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தராக மாவட்ட நிர்வாகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவன் என்ற வகையில் நிர்வாக நடைமுறைகளை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என கருதுகிறேன். இலங்கை ஆங்கிலேயர் காலம் முதல் நிர்வாக நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளன. காலத்துக்கு காலம் இவ்வலகுகளில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நடைமுறைகளின்படி இலங்கையின் புவியியல் நிலப்பரப்பானது கிராம சேவகர் பிரிவுகள், பிரதேச செயலாளர் பிரிவுகள், மாவட்டங்கள், மாகாணங்கள், என வரையறுக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

இவ்வாறான நிர்வாக அலகுகளில் மாற்றங்கள் செய்யவேண்டிய தேவைகள் ஏற்படின், அதற்கான கோரிக்கைகள் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு முன்வைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி அவர்கள் தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றினை (National Delimitation committee)  அமைப்பதுடன் சம்மந்தப்பட்ட அமைச்சினால் எல்லை நிர்ணய உபகுழு (Delimitation sub committee)  ஒன்று அமைக்கப்படும். இக்குழுக்கள் குறிப்பிட்ட பிரதேச பொது அமைப்புக்கள், மக்கள் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரது கருத்துக்களை பெற்று எல்லை நிர்ணயத்துக்கான தேவை, அதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி அவர்களுக்கும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுதல் வேண்டும். அதன்பின்னரே புதிய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். இது ஒரு நீண்ட செயற்பாட்டு முறை என்பதுடன் அரசினால் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் செயற்படுத்தப்படும் சட்டரீதியான நடைமுறையாக காணப்படுகின்றது. இவ்வாறான நடைமுறைகளே கடந்த காலங்களிலும்  மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம்பெற்று வந்திருக்கின்றது. தவிர மாவட்டத்தில் புன்னைக்குடா போன்ற பிரதேசங்களில் இருந்த அரசகாணிகளைஆட்சி உறுதிஎனும் சட்டரீதியற்ற ஆவணத்தை புணைந்து கையகப்படுத்துவது போல எவரும் களவாட முடியாது.

இதேவேளை இலங்கையில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள சட்டதிட்டங்கள், கட்டளைச்சட்டங்கள் , விதிகள் , நிதிப்பிரமாணம்;(FR)>, நிர்வாகக் கோவை AR, காலத்துக்கு காலம் வெளியிடப்படும் சுற்று நிருபங்கள் என்பவற்றை பின்பற்றி தமது கடமைகளை செயற்படுத்த கடமைப்பட்டவர்கள் ஆவர். அரச உத்தியோகத்தர்களுக்கென ஒழுக்கநெறி கோவைகளும் உள்ளன. மேலும் இவர்களது செயற்பாடுகளை கண்காணிக்க இலங்கை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிர்வாக கட்டமைப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அரசியலமைப்பின்படி குறைகேள் அதிகாரி (Ombudsman) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இவ்வாறான ஒரு சிறந்த அரசநிர்வாக கட்டமைப்பு காணப்படுகின்ற போது அரச உத்தியோகத்தர்கள் காணிகளை களவாடினார்கள், கபளிகரம் செய்தார்கள், அவர்கள் நிர்வாக பயங்கரவாதிகள் என பொறுப்புவாய்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பொதுவெளியிள் கூறுவது எவ்வகையில் ஏற்புடையதாகும்?

களவு என்பது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின்படிஒருவரின் உரிமையிலுள்ள பொருளை இன்னொருவர் கபடமாக அபகரிப்பதாகவியாக்கியானம் செய்யப்படுகிறது. அவ்வாறெனின் யாரின் உடமைகளிலிருந்த காணிகளை அரச அதிகாரிகள் களவாடினார்கள்? எனும் கேள்வி எழுகிறது. இவ்வாறான கருத்துகளை தெரிவித்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்இலங்கை அரச சேவையினையும்” “அரச உத்தியோகத்தர்களையும்அபகீர்த்திக்கு உட்படுத்தியுள்ளார் என்றே கருதவேண்டியுள்ளது.

இக்கருத்துக்களை தெரிவித்துள்ளவர் சாதாரண பொதுமகன் அல்ல. முன்னைநாள் கிழக்கு மாகாண முதலமைச்சர், தற்போதைய மாவட்ட அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவர்களில் ஒருவர், பிரதான கட்சியொன்றின் சிரேஷ்ட உபதலைவர் என்பது வருத்தத்திற்கு உரியதாகும்.

அதிகார பயங்கரவாதம்என்ற எந்த அகராதியிலும் இல்லாத ஒரு பதத்தை கண்டெடுத்து பயன்படுத்தியது மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில்மதத்தீவிரவாதத்தால்சிதைந்திருக்கின்ற நாட்டின் நல்லிணக்கத்தை அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் மேலும் குரோதங்களை ஏற்படுத்துவதன் மூலம் இன்னுமோர் வகையான தீவிரவாதத்திற்கு தூபமிடப்படுகிறதா? என மக்கள் ஐயமுறுகின்றனர்.

மாவட்ட அரச அதிகாரிகள் இவ்வாறானவர்களுடன் இணைந்து எவ்வாறு பக்கச்சார்பற்ற அபிவிருத்தியினை மாவட்டத்தில் ஏற்படுத்த முடியுமென அங்கலாய்க்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு அதிகாரத்திலுள்ள அரச அதிகாரிகளின் நிலைப்பாடுதான் என்ன? இன்னும் வாய்மூடி மௌனிகளாக தாங்கள் காணிக் கள்ளர்கள்தான் என ஏற்கபோகின்றனரா? இவ்விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தெரிவு செய்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன? “கிழக்கின் மீட்பாளர்கள்வழமைபோல வாய்பொத்தி கைகட்டி வாளாதிருக்கப் போகின்றனரா? என்பதே மாவட்ட மக்களது இன்றைய கேள்விகளாகும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.    


                       

SHARE

Author: verified_user

0 Comments: